ரோஜா மலரே! -84: வியக்க வைத்த வித்தியாசமான பாத்திரம் - குமாரி சச்சு

அந்தக் காலத்தில் நான் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது  ஒரு சீன், இரண்டு சீன் என்றால் நடிப்பது கிடையாது. ஏனென்றால் நான் முழுப் படத்திலும் வரும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பேன்.
ரோஜா மலரே! -84: வியக்க வைத்த வித்தியாசமான பாத்திரம் - குமாரி சச்சு
Published on
Updated on
2 min read

அந்தக் காலத்தில் நான் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது ஒரு சீன், இரண்டு சீன் என்றால் நடிப்பது கிடையாது. ஏனென்றால் நான் முழுப் படத்திலும் வரும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பேன். அந்த மாதிரி பாத்திரங்களும் எனக்குக் கிடைத்தன. ஆனால் ஒரு சில படங்களில் கெளரவ வேடம் என்று வரும். அதையும் நடித்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. படத்தின் பெயர் "கெட்டிக்காரன்'. ஆனால், நான் நடிக்க வேண்டியது ஒரே ஒரு காட்சி மட்டும் தான் என்று கூறினார்கள். என்னுடன் நடிப்பவர் நாகேஷ் என்று சொன்னார்கள். "கெட்டிக்காரன்' படத்தைத் தயாரிப்பவர்கள் தேவர் பிலிம்ஸ் என்றும் தெரிவித்தார்கள்.

ஒரு காலத்தில் எம். ஜி. ஆர். இல்லாமல், எந்த ஒரு படமும் எடுக்க மாட்டார் தயாரிப்பாளர் தேவர். மக்கள் திலகம் நடித்தால் அது தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாகத்தான் இருக்கும். பிறகு பல்வேறு சமூகப் படங்களை எடுக்க ஆரம்பித்தார். பக்தி படங்களையும் எடுத்தார். அப்படி எடுக்கும் படங்களை தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற பெயரிலும் படம் எடுத்தார். இந்த "கெட்டிக்காரன்' படமும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற பெயரில் தான் வெளியானது.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் முதன் முறையாக நடித்த படம் "துணைவன்'. இதுவும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்ற பெயரில் தான் எடுக்கப்பட்டது. பின்னர் தேவர் தயாரிப்பில் நிறையப் படங்களில் நடித்துள்ளேன், "பெண் தெய்வம்', "மாணவன்', "நல்ல நேரம்', முதலிய படங்களில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு சீன் என்று வரும் பொழுது, எப்படி ஒப்புக் கொள்வது என்று நான் சிறிதும் எண்ணவில்லை. காரணம், அந்த ஒரு காட்சியை விளக்கினார் அந்தப் படத்தின் கதாசிரியர் மா.ராமச்சந்திரன்.

நான் கற்ற நடிப்பு, நடனம் எல்லாமே அந்த ஒரு காட்சியில் வரும் வகையில், அமைத்து இருந்தார்கள். அந்தக் காட்சி வித்தியாசமாக இருந்ததால் ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தேன். வித்தியாசமான பாத்திரப் படைப்பு, என் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம். அவர்கள் எடுத்த "மாணவன்' படத்தில் நானும் நாகேஷும் நடித்த நகைச்சுவை காட்சியில் எல்லோரும் விரும்பும் வண்ணம் நகைச்சுவை காட்சி இருக்கும். காணும் ஒவ்வொருவருக்கும் சிரித்து, சிரித்து வயிறு வலிக்கும். அந்த அளவிற்கு நாங்கள் இருவரும், அன்று புகழ் பெற்ற நகைச்சுவை ஜோடியாகத் திகழ்ந்தோம்.

"கெட்டிக்காரன்' படத்தில் நாகேஷ் கதையோடு வரும் கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் படத்தில் நாகேஷுக்கு நான் ஜோடி இல்லை. "மாணவன்' படத்தில் எங்கள் நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக இருக்கும். "பெண் தெய்வம்' படத்தில் எங்கள் காமெடி சிறப்பாக இருக்கும். "துணைவன்' படத்தில் எங்கள் நகைச்சுவை சிறப்பாக இருக்கும் .

அதனால் எங்கள் ஜோடி இந்த "கெட்டிக்காரன்' படத்திலும் தொடர வேண்டும் அவர்கள் நினைத்தார்கள். அதற்காக ஒரு சீனை யோசித்து, கதாசிரியர் மா.ராமச்சந்திரன் எழுதி இருந்தார். நாகேஷ் சாலை ஓரமாக நடந்து வருவார். எதிரே ஒரு அழகான பூங்கா இருக்கும். அதில் ஒரு பெண் சிலையைப் பார்ப்பார். அதனுடன் பேசுவார் நாகேஷ். அந்தப் பெண் சிலை உயிர் பெற்று விடும். அந்த உயிர் பெற்ற சிலை பாத்திரத்தில் நான் நடித்தேன். பேசுவதுடன் நிற்காமல் நாகேஷ், அந்த பாத்திரத்திற்கு ஏற்ப நடனம் ஆடச் சொல்வார். அந்த உயிர் பெற்ற சிலை பெண் அபிநயம் பிடித்து, நடனம் ஆடுவார். நான் பரத நாட்டியம் கற்றதால், அந்தக் காட்சியில் எனக்கு சுலபமாக நடனம் ஆட முடிந்தது.

"கெட்டிக்காரன்' படம் வெளியான பின்னரும் நான் அந்தப் படத்தைத் தியேட்டருக்குச் சென்று, மக்களோடு மக்களாகப் பார்த்து ரசித்திருக்கேன். சமீபத்தில் ஒரு ரசிகர் எனக்கு இந்தப் படத்தில், என் காட்சியை மட்டும் வெட்டி எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார். பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்று பார்த்தாலும் அந்தக் காட்சி சிறப்பாக இருந்தது. நான் நடித்து இருந்தாலும், எனக்கே சிரிப்பு வந்தது. அந்த அளவிற்கு அந்த காட்சி இருந்தது.

கெளரவ பாத்திரம் என்றாலும், ஒரு சீன் தான் என்றாலும், என்னால் அந்தப் படத்தையும், அந்தப் பாத்திரத்தையும், என்றும் மறக்க முடியாது. "சொர்க்கம்' படத்தில் எப்படி நான்கு பாத்திரத்தில் நடித்தேனோ, அதே போன்று இன்னொரு புகழ் பெற்ற இயக்குநர் இயக்கிய தமிழ் படத்தில் நான் நடித்தேன். அது மட்டுமல்ல, அதே படம் மலையாளத்தில் எடுக்கபட்ட போதும், நான் நடித்த அதே வேடத்தில் மலையாளத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். தெலுங்கில் அதே படத்தை எடுத்த போது நானே அந்த வேடத்தில் நடித்தேன். அவரே அதை இயக்கினார்.

இன்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ஒரு படத்தில், சீரியஸ் ஆக இருக்கும் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன் என்று சொன்னால், எனக்குப் பெருமை தான். அந்தப் படம் "பூவா தலையா'. இந்தப் படம் "பொம்ம புருஷா' என்ற பெயரில் தெலுங்கிலும், "பலபிரேக்ஷணம்' என்ற பெயரில் மலையாளத்திலும், "போலண்டு உய்யாலே' என்ற பெயரில் கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 4 மொழிகளிலும் வெற்றி பெற்ற படம். இந்தப் படத்தின் மூன்று மொழிகளிலும், நான் தமிழில் செய்த வேடத்திலேயே நடித்தேன். அந்த மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு. தமிழில் நாகேஷ் எனக்கு ஜோடி, மலையாளத்தில் அடூர் பாசியும், தெலுங்கில் சலத்துடன் ஜோடி சேர்ந்தேன். அப்பொழுது சீரியஸ் ரோல் செய்வதால் என்னிடம் வந்து இயக்குநர் கே.பாலச்சந்தர் ஒரு விஷயத்தைக் கூறினார். அது என்ன?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com