இமயம் தொட நினைக்கும் இளையதலைமுறையினர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய படகு பந்தய வீரர்கள் நால்வர் முதன்முறையாக தகுதி பெற்றுள்ளனர்.


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய படகு பந்தய வீரர்கள் நால்வர் முதன்முறையாக தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்ற முதல் இந்திய படகு பந்தய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன்.
மிகுந்த அர்ப்பணிப்பு, நிதானம், காற்று, அலையை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்டவை படகு பந்தய வீரர்களுக்கு மிகவும் அவசியமாகும். இதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு லேசர் ஸ்டாண்டர்ட் கிளாஸ் பிரிவில் விஷ்ணு சரவணனும், 49 கிளாஸ் பிரிவில் கேசி. கணபதி-வருண் தக்கர் இணை வீரர்கள் என்ற தகுதி பெற்றனர்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இருக்கும் இந்த நால்வார் யார்?
விஷ்ணு சரவணன்:
விஷ்ணு சரவணன் பங்கேற்கும் பிரிவான லேசர் ஸ்டாண்டர்ட் கிளாஸ் கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றது.
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் என்ஜினியர் குரூப் எனப்படும் (எம்இஜி) பிரிவைச் சேர்ந்தவர் விஷ்ணு சரவணன், ஓமனில் அண்மையில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய தகுதிச் சுற்று போட்டியில் வென்று ஒலிம்பிக் தகுதி பெற்றார் விஷ்ணு. அவரது தந்தை ராணுவ வீரர் சுபேதார் மேஜர் ராமச்சந்திரன், சரவணனும் ராணுவ படகுப் பிரிவில் மாலுமியாக இருந்தார்.
17 வயதில் ராணுவத்தில் இணைந்த பின் 2018 இல் தேசிய சீனியர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் விஷ்ணு. அவர் பங்கேற்ற 30 சர்வதேச போட்டிகளில் 13-இல் முதல் மூன்று இடங்களில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் கூறியது;
""எனது தந்தையால் சாதிக்க முடியாததை நான் சாதித்துள்ளேன். தந்தையின் வழிகாட்டுதல் முக்கிய காரணம்.மால்டாவுக்கு இடம் மாறி பயிற்சி மேற்கொண்டதால், தகுதி பெற முடிந்தது. ஓமனில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் லோ ஜுன் ஹேன் கடும் சவால் தந்தாலும், தங்கம் வென்றேன். எனது சகோதரி ரம்யா சரவணன், லேசர் ரேடியல் பிரிவில் 6-ஆவது இடமே பெற்றதால், ஒலிம்பிக் தகுதி பெற வில்லை'' என்றார்.
கேசி. கணபதி - வருண் தக்கர்:
49 இஆர் பிரிவில் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ள கேசி. கணபதிவருண் தக்கர் இணை, கடந்த 2018-இல் ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இணை இவர்களே ஆவர்.
கேசி. கணபதி குடும்பம் கர்நாடக மாநிலம், தென் குடகு பகுதியைச் சேர்ந்தது. அவரது தாயார் ரேஷ்மா செங்கப்பா, சென்னையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். 12 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய போட்டியில் முதல் பட்டத்தை வென்றார் கணபதி. படகு பந்தய பயிற்சிக்காகவே பள்ளியை விட்டு நின்றார்.
வருண் தக்கரும் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். லேடி ஆண்டாள் பள்ளியில் பயின்ற வருண், கணபதியுடன் 6 வயதிலேயே இணைந்து படகு பந்தய பயிற்சிக்கு சென்றார்.
வருண் கூறியது: ""நாங்கள் இருவரும் 16 ஆண்டுக் காலம் இணைந்து பயிற்சி பெற்றோம். வேல்ஸ் கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பு முடித்தேன். 49இஆர் பிரிவில் குறைந்த எடை இருப்பவர்களே பங்கேற்க முடியும். படகு பந்தயம் என்பதை தண்ணீரில் செஸ் விளையாடுவது போலாகும்.''
நேத்ரா குமணன்:
சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொறியியல் மாணவியான நேத்ராவுக்கு சிறிய வயது முதலே படகு பந்தயத்தில் பங்கேற்க ஆர்வம் இருந்தது. 22 வயதே ஆன நேத்ரா, ஓமனில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்றார். அங்கே அவரது படகு சிறிது சேதமடைந்த நிலையில், சக வீரரான ராம் மிலன் யாதவிடம் இருந்து படகை கடனாகப் பெற்று பங்கேற்றார். 10 சுற்றுக்கள் கொண்ட லேசர் ரேடியல் பிரிவில் தொடக்கம் முதலே நிலையான வேகத்தில் படகை ஓட்டி, இரண்டாவது இடத்தைப் பெற்றார் நேத்ரா. இதன் முதல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய படகு பந்தய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
""ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியமாகும். அதை அடைந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. மால்டா, இஸ்ரேல் நாடுகளில் தான் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். கடந்த 2019 முதல் ஸ்பெயின் கேனரி தீவுகளில் தலைசிறந்த வீரர்களுடன் பயிற்சி பெறுகிறேன். வாரத்துக்கு 5 நாள்கள் ஏற்கெனவே ஒலிம்பிக் தகுதி பெற்றவர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
இந்தியாவில் தற்போது இந்த பந்தயம் பிரபலமடைந்து வருகிறது. சிறு வயது முதல் நான் படகு பந்தயத்தில் பங்கேற்ற போது சில வீராங்கனைகள் மட்டுமே இருந்தனர். இதனால் தேசிய போட்டிகளில் வெல்வது எளிதாக இருந்தது. முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க அனுபவத்தை தரும்'' என்றார்.
காற்றின் திசையைப் பொறுத்தே பந்தயம் நடைபெறும். நாள்தோறும் 10 மணி முதல் 5 மணி வரை பயிற்சி பெறுகிறோம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முயல்வோம் என்கிறார்கள் தகுதி பெற்ற நால்வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...