திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கடல் நீரில் விவசாயம்!

கடல்நீரில் வளரும் அலையாத்தி மரங்களின் அபரிமிதமான உப்பை தாங்கி வளரும் திறனுக்குக் காரணமான மரபணுக்களை, மரபணு பொறியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 12:30 am

இரா. மகாதேவன்

கடல்நீரில் வளரும் அலையாத்தி மரங்களின் அபரிமிதமான உப்பை தாங்கி வளரும் திறனுக்குக் காரணமான மரபணுக்களை, மரபணு பொறியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் வருங்காலத்தில் கடல்நீரில் உணவு தானியங்களை விளைவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளன.

வரும் 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து 900 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, 200 கோடி மக்கள் போதுமான உணவு இல்லாமால் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிகரித்து வரும் உலக மக்கள்தொகைக்கு ஏற்ப பயிர் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், உலகின் மொத்த நிலப்பரப்பில் 40% வறண்ட நிலப்பகுதியாகவும், விவசாயம் செய்வதற்கு தண்ணீர் கிடைப்பது பெரிய சவாலாகவும் உள்ளது. இதில், மற்றும் ஒருபிரச்னையாக 90 கோடி ஹெக்டேர் நிலங்களில் உப்புத்தன்மை நிலவுகிறது. இதனால், ஆண்டுக்கு சுமார் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பூமியின் மேற்பரப்பில் 71% தண்ணீர் இருந்தாலும், அதில் 96.5% உப்புத்தன்மை மிக்க கடல்நீராக உள்ளதால், அதை பயன்படுத்தி விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. இருப்பினும், இதற்கு விதிவிலக்காக உள்ளன,

கடல்நீரில் செழித்து வளரும் சதுப்புநில தாவரங்களான அலையாத்தி மரங்கள்.

இதையொட்டி, கடல்நீரைப் பயன்படுத்தி உணவு தானியங்களைப் பயிரிட, கடல்பகுதி சதுப்பு நிலங்களில் உப்புத்தன்மையை தாங்கி வளரும் அலையாத்தி மரங்களின் மூலக்கூறு கட்டமைப்பைப் புரிந்துகொள்வது அவசியம் என விஞ்ஞானிகள் நினைத்தனர். இதற்காக, சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அலையாத்தி மரங்களில் 80 வகைகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைகள். அவற்றில் மூன்று முக்கியமானவை. அதில் அவிகென்னியா மரினா என்ற கறுப்பு நிற அலையாத்தி மரங்களின் மரபணுக்கள் தான் அடையாளம் காணப்பட்டன.

இந்த ஆராய்ச்சிகளின் ஒருபகுதியாகஇந்திய விஞ்ஞானிகள் அலையாத்தி காடுகளில் வளரும் வெண்கண்டல் மரத்தின் மரபணு தொகுப்பை முதல்முறையாக கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு நமது உணவு உற்பத்தியில் மாபெரும் புரட்சிக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் மரபணு பொறியாளர் முனைவர் மா. பரணி தலைமையில், முனைவர் ந.புருஷோத்தமன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயிரியல் வல்லுநர் அ. கோபால கிருஷ்ணன் மற்றும் புவனேஸ்வரில் இருக்கும் உயிரி அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் அ. பரிடா ஆகியோர் இணைந்து இந்த மரபணு தொகுப்பை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிப்பின் முதல்கட்டமாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வளரும் வெண்கண்டல் (அவிசென்னியா மரினா) என்ற அலையாத்தி மரத்தின் மரபணு பட்டியலை உருவாக்கத் தொடங்கினர். வெண்கண்டல் மரம் கடல்நீரில் இருந்து நீரை மட்டும் வடிகட்டி உறிஞ்சிக்கொள்ளும் திறனும், அதையும் மீறி உள்ளே நுழையும் அதிகப்படியான உப்பை இலைகளில் உள்ள உப்புநீர் சுரப்பிகளின் மூலம் வெளியேற்றும் தன்மையும் ஒருங்கே கொண்ட தாவரம்.

இதன் காரணமாக, கடல்நீரில் மட்டுமல்லாமல், கடல்நீரை விட இரண்டரை மடங்கு உப்புத்தன்மை கொண்ட நீரிலும் வளரக் கூடிய தன்மை பெற்றது வெண்கண்டல் மரம். பிச்சாவரம் காடுகளில் இருந்து பெறப்பட்ட வெண்கண்டல் மரத்தின் இலைகளை 4 சிறந்த மரபணு மூலக்கூறு வரிசை அறியும் தொழில்நுட்பங்களைப் பயன்டுத்தி, இம்மரத்தின் மரபணு மூலக்கூறு வரிசையை உலகத் தரத்தில் இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வெண்கண்டல் மரத்தின் மரபணுத் தொகுப்பு 45.7 கோடி மரபணு மூலக்கூறுகளையும், 31,477 மரபணுக்களையும் கொண்டுள்ளது. அதில், 3,246 மரபணுக்கள் வெண்கண்டல் மரத்தின் அசாதாரணமான உப்புத்தன்மையைத் தாங்கி வளரும் திறனுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மரபணுக்களை பிரித்தெடுத்து அவற்றை மற்ற தாவரங்களில் செலுத்தினால், அந்த தாவரங்களும் உப்புத்தன்மையைத் தாக்குப்பிடித்து வளரும் இயல்பைப் பெற்றுவிடும். நிலத்தடி நீர் உவர்ப்புத்தன்மை அதிகரித்து வேளாண்மை செய்ய முடியாத நிலங்களில் கூட, உணவு தானியப் பயிர்களைப் பயிரிட இந்த கண்டுபிடிப்பு வழிகாட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகளை, உலகப் புகழ்பெற்ற நேச்சர் குழுமத்தின் கம்யூனிகேஷன்ஸ் பயாலஜி என்ற ஆராய்ச்சி இதழ் கடந்த ஜூலை 8-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த முடிவுகள் ஜூலை 10-ஆம் தேதி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், பயோ டெக்னாலஜி இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 7,500 கி.மீ. கடற்கரையையும், 2 பெரிய தீவுகளையும் கொண்ட இந்தியாவுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த கடலோர பிராந்தியத்தின் முக்கிய பயிர் இனங்களில், வறட்சி மற்றும் உப்புத்தன்மையை தாங்கும் வகைகளை வளர்ப்பதற்கு, தற்போது அடையாளம் காணப்பட்ட மரபணு ஆதாரங்கள் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்காளர்களில் ஒருவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மரபணு பொறியியல் துறைத் தலைவருமான மா. பரணி, ஆராய்ச்சி குறித்தும், அதன் அடுத்தகட்டம் குறித்தும் கூறியது:

""அலையாத்தி காடுகளில் உள்ள வெண்கண்டல் மரத்தில் இருந்து உப்புத்தன்மையை தாங்கி வளரும் திறனுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான மரபணுக்களை கண்டுபிடித்துள்ளோம்.

இவற்றில் மிகச் சிறந்த 2 மரபணுக்களைமுதலில் தேர்ந்தெடுத்து, அவற்றை உணவுப் பயிர்களில் செலுத்தி, பல்வேறு கட்ட விளைச்சல் திறன் ஆராயப்படும். மேலும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். அதன்பிறகே, மரபணு மாற்றுப்பயிர் ஒரு புதிய ரகமாக வெளியிடப்படும். இதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

வெண்கண்டல் மரத்தின் மரபணுக்களை உணவுப் பயிர், தோட்டக்கலைப் பயிர், தீவனப் பயிர் என எந்தப் பயிரிலும் செலுத்தலாம். மக்களுக்கு தீங்கு விளைவிக்காத கிரிஸ்பர் தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பான மரபணுத் தொழில்நுட்பங்கள் இப்போது வந்துவிட்டன. வெண்கண்டல் மரபணுத் தொகுப்பில் இருந்து இந்த மரத்தின் மிகச் சிறப்பான குணங்களில் ஒன்றான உப்புநீர் சுரப்பிகளுக்குக் காரணமான மரபணுக்களைப் பிரித்தெடுத்து ஆராய்ச்சி செய்வது எங்களது அடுத்த திட்டம்.

மேலும், வெண்கண்டல் மரத்தின் மரபணுத் தொகுப்பு உலகில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு தேடக்கூடிய தரவுத்தளத்தை அமைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.