ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) உறுப்பினர்கள் வாக்குகளை பெரும்பான்மையாக எந்த நகரம் பெறுகிறதோ அந்நகரம் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின் 2024 போட்டிகள் பாரீஸிலும், 2028 ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளன.
ஓராண்டு ஒத்தி வைப்பு:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020-ஆம் ஆண்டே நடந்திருக்க வேண்டியது. ஆனால் கரோனா தொற்று பாதிப்பால் ஒராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நிகழாண்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் என்ற பெயரிலேயே ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டி நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும்.
இப்போட்டி பல்வேறு சுவாரஸ்யங்களையும், சுவையான தகவல்களையும் உள்ளடக்கி உள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே தொற்று பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படாமல், ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.
ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரம் டோக்கியோ ஆகும். ஏற்கெனவே 1964-இல் முதல் ஒலிம்பிக் இங்கு தான் நடந்தது.
முதன்முதலாக இந்த ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்டிங், சர்ஃபிங், ஸ்போர்ட் கிளைம்பிங், கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் சாதனை அளவாக 33 விளையாட்டுகளில் இருந்து 330 ஆட்டங்கள் நடந்தது.
முதன்முறையாக தடகள மைதானத்தில் ஷாட்புட் குண்டு, ஈட்டி போன்றவற்றை கொண்டு வர ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் பந்தயங்களை துரிதமாக நடத்த முடிந்தது.
மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணு பொருள்களால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பதக்கங்கள் செய்யப்பட்டன. லேப்டாப்கள், கேமராக்கள், செல்லிடப்பேசிகள் என மறுசுழற்சி செய்யத்தக்க 78,895 டன் கழிவுகளால் 5,000-க்கு மேற்பட்ட பதக்கங்கள் செய்யப்பட்டன.
ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழக்கமாக தரப்படும் மரக்கட்டில் இம்முறை தரப்படவில்லை. அதற்கு பதிலாக மறுசுழற்சிக்கு செய்யப்படும் கார்ட்போர்ட் கட்டில்கள் தரப்பட்டன.
60000 பேர் அமரும் வகையில் கட்டப்பட்ட பிரதான விளையாட்டரங்கில் பெரும்பாலும் மரத்தைக் கொண்டே கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.
முதன்முறையாக முக அடையாளம் கொண்டு வீரர்கள், அதிகாரிகள் மைதானத்தில் நுழைய அனுமதிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது.
அனைவருக்கும் வியப்பை உண்டாக்கும் வகையில் கூடைப்பந்து மைதானத்தில் 7 அடி உயரமான ரோபோ களம் இறக்கப்பட்டது.
மைதானத்தில் நேராகச் சென்று பந்தை எடுத்த ரோபோ, பாதி மைதானத்தில் இருந்து சரியாக வளைக்குள் செலுத்தி 3 புள்ளிகளை ஈட்டியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. 3 முறை வளைக்குள் சரியாக பந்தை போட்ட ரோபோ இதற்காக ஒவ்வொரு முறையும் 15 விநாடிகளை எடுத்துக் கொண்டது. இந்த ரோபோ ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறை (ஏஐ) பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
திருமண முன்மொழிவு
அர்ஜென்டீனாவின் வாள்சண்டை வீராங்கனை மரியா பெலன் மெளரைஸ் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் அவரது நீண்ட நாள் பயிற்சியாளர் லூகாஸ் சாஸ்டோ, திடீரென அவரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து பதாகையை காண்பித்தது, வியப்பை ஏற்படுத்தியது.
கடலில் தவித்தாலும் தங்கம்
பிரேஸிலைச் சேர்ந்த சர்ஃபிங் வீரர் இடோலோ ஃபெரைரா இறுதிச் சுற்றில் பங்கேற்ற போது இடையிலேயே அவரது சர்ஃபிங் போர்டு உடைந்து விட்டது. இதனால் மாற்று பொருளுக்காக கடலிலேயே காத்திருந்த இடோலோ பின்னர் விடாமுயற்சியால் புதிய போர்டு கிடைத்தவுடன் பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றார்.
பாரம்பரிய கொண்டாட்டம்
குத்துச்சண்டையில் தனது எதிராளி எஸ்வட்னி தபிúஸாவை வீழ்த்திய பின் கேமரூன் வீரர் ஆல்பர்ட் மெங்கு வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாடியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
உடல் முழுவதும் எண்ணெய்
தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகச்சிறிய நாடான டோங்காவைச் சேர்ந்த பிடா டெளபட் ஒலிம்பிக் போட்டி கொடி அணிவகுப்பில் தங்கள் பழங்குடியின வழக்கப்படி மேலாடை இன்றி, எண்ணெய் பூசி கொடியை ஏந்திச் சென்றது அனைவரையும் கவர்ந்தது. அவர் தனது ஆட்டத்தில் தோற்றாலும், பார்வையாளர்கள் ஆதரவை பெற்றார்.
ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தாரின் பார்ஷிம் என்பவரும், இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள். இருவரும் 2.37 மீட்டர் உயரம் தாண்ட , எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீட்டரை விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க, மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரியின் காலில் ஏற்பட்ட காயத்தின் வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.
ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் ஆச்சரியமான சம்பவம். அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டியாளர்களிடம் " நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்க "இருவருக்கும் பகிர்ந்தளிப்போம்' என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார். எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து தனது பெருந்தன்மையை நிரூபித்தார் கத்தார் வீரர் பாஷிம். இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் இது மிக முக்கிய நிகழ்வாகும்.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வாங்கினால் இரண்டு கோடி முதல் ஐந்து கோடி வரை சன்மானம் வழங்கப்படும் என்று இந்தியாவில் பல மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளார்கள். ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் அதாவது 69.5 பவுன். அந்தத் தங்க பதக்கத்தை விற்றால் சுமார் 32 லட்சம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது கிடைக்கும் தொகை 66 ஆயிரம் ரூபாய் மட்டுமே!
அதற்கு காரணம் இருக்கிறது.2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காகப் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை செய்யும் போது, சுற்றுசூழல் அதிகம் மாசுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் முடிவு செய்தது. வீணாகிப் போன பொருள்களிலிருந்து மறு சுழற்சி முறையில் தயாரிக்கப்படும் உலோகத்தில் பதக்கங்களை ஜப்பான் தயாரித்துள்ளது. இந்த மறுசுழற்சியில் பயன்படுத்தப்பட்டவை 62 லட்சம் பயன்படுத்தப்பட்ட பழைய செல்போன்கள். இந்த செல்போன்களை பொடியாக்கி அதிலிருந்து எடுக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தங்க பதக்கத்தின் எடை 556 கிராம். 550 கிராம் எடையைக் கொண்டிருப்பது வெள்ளிப் பதக்கம். வெண்கலப் பதக்கத்தின் எடையோ 450 கிராம்தான் ! தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் என்றால் அதன் மதிப்பு சுமார் ரூ 32 லட்சமாக தானே இருக்க வேண்டும்..? ஆனால் விற்றால் கிடைக்கும் தொகை 66 ஆயிரத்தைத் தாண்டாது. ஏனென்றால் தங்கப்பதக்கம் அசல் அல்லது மாற்று குறைந்த தங்கத்தில் செய்யப்படுவதில்லை.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதலாவதாக வருபவர்களுக்கு வழங்கப்படும் தங்க பதக்கம் தங்க முலாம் பூசப்பட்டது. வெள்ளி பதக்கத்தில் தங்க முலாம் பூசி, தங்கப் பதக்கம் என்று வழங்குகிறார்கள். 550 கிராம் எடையுள்ள வெள்ளி பதக்கத்தின் மேல் 6 கிராம் தங்கம் மூலாமாகப் பூசப்பட்டு 556 கிராமாக தங்கப் பதக்கம் தயாராகிறது. தங்கப் பதக்கத்தை விற்கும் போது 550 கிராம் வெள்ளிக்கான விலையும், 6 கிராம் தங்கத்திற்கான விலையும் சேர்த்து சுமார் 66 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.
அதனால் தங்கப் பதக்கம் பெற்றால் பெருமைதான்.. சாதனைதான்..! அந்தந்த நாடுகள், மாநிலங்கள் வழங்கும் சன்மானம் மட்டுமே தங்கப் பதக்கத்தைவிட அதிக மதிப்பு உள்ளதாக இருக்கும்...!
-சுதந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...