நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

28 ஆண்டுகளாக பசி நீக்கும் இயக்கம்

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள திலகர் திடலில் நாள்தோறும் நண்பகலில் பசியுடன் கூட்டம் ஆங்காங்கே காத்துக் கொண்டிருக்கிறது.

News image
Updated On :10 ஜூலை 2022, 12:30 am

DIN


தஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள திலகர் திடலில் நாள்தோறும் நண்பகலில் பசியுடன் கூட்டம் ஆங்காங்கே காத்துக் கொண்டிருக்கிறது. அங்கு 12 மணியளவில் அருட்பெருஞ்சோதி அறக்கட்டளையின் அருட்கஞ்சி வாகனம் வந்து நின்றவுடன் ஒன்று கூடுகின்றனர். 

வாகனத்தின் பின்புறம் சாலையோரம் வசிப்பவர்கள், பிச்சை எடுப்பவர்கள், ஆதரவற்றவர்கள் என ஏராளமானோர் வரிசையில் நிற்கின்றனர். இவர்களுக்கு காய்கறி கூட்டு, பொரியலுடன் விலையில்லா உணவைக் காகிதத் தட்டில் வைத்தோ, பொட்டலமாகவோ தன்னார்வத் தொண்டர்கள் விநியோகம் செய்கின்றனர்.

""இந்தப் பசி நீக்கும் இயக்கத்தைக் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாகச் செய்து வருகிறது அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை. இதற்காக தஞ்சாவூர் மாதாகோட்டை சாலையிலுள்ள வங்கி ஊழியர் காலனியில் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் அகத்தியர் ஆலயமும் நிறுவப்பட்டுள்ளது. இதில், நாள்தோறும் ஏறத்தாழ 400 பேருக்கு உணவு தயாராகிறது''என்கிறார் அறக்கட்டளை நிறுவனர் ஜி. தம்பையா (69). 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:

""நான் 10 வயதிலிருந்து வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறேன். பசி ஆற்றுதல், ஒழுக்க நெறியில் வாழ்தல் என்பது வள்ளல் பெருமானின் கொள்கைகளில் முக்கியமானவை. இக்கொள்கையின் அடிப்படையில் ஏழைகளின் பசியை ஆற்றுவதற்காக  இந்த அறக்கட்டளையை நானும், எனது நண்பர் ஜி. சுப்பிரமணியமும் இணைந்து 1994 -ஆம் ஆண்டு ஆடி அமாவாசை நாளில் தொடங்கினோம். 

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்தச் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். இடையிடையே சிறு சிறு சிரமங்கள் வந்தாலும், தொய்வில்லாமல் இச்சேவையைச் செய்து வருகிறோம்.  

பெரிய கோயில் அருகேயுள்ள திலகர் திடலில் மட்டும் ஏறத்தாழ 350 பேர் பயனடைகின்றனர். இவர்களைத் தவிர, இந்த ஆலயத்தைச் சுற்றி இருப்போர் என 50 பேர் சாப்பிடுகின்றனர்.

இந்தச் சேவையைப் பார்த்து பலர் தங்களது சொந்த முயற்சியில் அன்னதானம் செய்ய முன் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கரோனா காலத்தில் தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, வல்லம் கரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் தொடர்ந்து நோயாளிகளுக்கு மூலிகை கஞ்சி கொடுத்தோம். தற்போது, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கஞ்சி தேவைப்படுகிறது. இதற்கான அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

நான் ஒரு சித்த மருத்துவர். எனக்கு வரும் வருமானத்தில் 33 சதவீதத்தை இந்த அன்னதானத்துக்குச் செலவிடுகிறேன். ஒரு நாளைக்கு வண்டி செலவு, ஆள்களுக்கான ஊதியம் நீங்கலாக நல்ல சாப்பாடு என்றால் ரூ. 4,000 செலவாகும். நிறைய பேர் தங்களது பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள், தாய், தந்தையர் நினைவு நாள், புதுமனை புகுவிழா முதலிய நாள்களில் இந்த அன்னதான திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கின்றனர்.

மாதத்துக்கு ரூ. 2.25 லட்சம் செலவாகிறது. ஆனால், மாதம்தோறும் ஏறத்தாழ ரூ. 70,000-தான் நிதி சேகரமாகிறது.  என்றாலும் கூட சமாளித்து ஒரு நாள் கூட விடாமல் இச்சேவையை மேற்கொண்டு வருகிறோம்.  அவரவர் வசதிக்கு ஏற்ப  எவ்வளவு கொடுத்தாலும் பெற்றுக் கொள்வோம்.

இந்த அன்னதான திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், அதன் மூலம் பயனடைந்து வருபவர்களின் வாழ்க்கைத் முன்னேற்றத்துக்கும் திட்டமிட்டு வருகிறோம். இந்த அன்னதானத்தை நம்பி வாழும் மக்களை இந்த நிலைமையிலேயே வைத்திருப்பது நன்றாக இருக்காது. எனவே, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, அன்னதானத்துக்காகக் காத்திருக்கும் நிலையைக் குறைக்க வேண்டும் என்பதே எங்களது அடுத்த இலக்கு. சேவைக்கு உதவுவோர் 94433 75533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

படங்கள்: எஸ். தேனாரமுதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.