

தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி செய்த சோழ மன்னர்களின் வரலாற்றைப் படிக்கும் பொழுது தஞ்சையும், கங்கை கொண்ட சோழபுரமும் எல்லோர் நினைவிலும் வரும்.
மாமன்னனாகத் திகழ்ந்த இராஜராஜ சோழனின் மைந்தனான முதலாம் இராஜேந்திர சோழன், தனது கங்கை வெற்றியின் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊறை தலைநகராக அமைத்தார்.
கலையழகு மிக்க சிற்பங்களுடன் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயிலையும் எடுப்பித்தார். இந்தக் கோயிலைப் பற்றியும் ஊறைப் பற்றியும் கருவூர் தேவரின் திருவிசைப்பா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தரின் மூவருலா ஆகிய இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வூர் கங்காகுண்டம், கங்காபுரி, கங்கைமாநகர் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிகிறோம்.
கங்கை கொண்ட சோழபுரம் ஊர் அமைக்கப்படும்பொழுது ஊரின் மேற்கே கங்கை வெற்றியின் நினைவாக, ""சோழகங்கம்'' என்ற ஏரியும் அமைக்கப்பட்டது. ஜலமயமான வெற்றித்தூண் என்று திருவாலங்காடு செப்பேடு புகழந்து பேசுகிறது.
கலையழகு மிக்க இந்தக் கோயில் உலக பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையால் புதுதொன்மை மாறாமல் போற்றிப் பராமரிக்கப்பட்டு வருவது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சுமார் 250 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை எங்கே இருந்தது என அறியத் தோன்றுகிறது. இந்த நகரில் இருந்த அரண்மனை, தெருக்கள், அங்காடி ஆகியவற்றின் பெயர்களை எடுத்து கூறுகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சோழர் அரண்மனையைப் பற்றி அறிந்துகொள்ள அகழ்வராய்ச்சியை மேற்கொண்டது. "மாளிகை மேடு' என்ற பகுதியில் சோழர் மாளிகையின் அடித்தளப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டது.
1,000 ஆண்டுகள் தொன்மையான, வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காக அப்படியே வைக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொன்மையான கலைப் பொருள்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுக் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் கண்டு மகிழலாம்.
சலுப்பை அழகர் கோயில் கங்கை கொண்ட சோழபுரம் நகரத்தின் எல்லையில் நான்கு மூலைகளிலும் காவல் தெய்வமாக துர்க்கை- காளியின் வடிவங்கள் வழிபடப் பெறுவதைக் காணலாம். மேலும், இந்த நகருக்கு வடக்கே சலுப்பை என்ற ஊரில் துரவுமேல் அழகர் கோயில் வழிபாட்டில் உள்ளது.
சோழ மன்னன் இராஜேந்திர சோழன் சாளுக்கியர்களை வென்றதினால் இவ்வூர் சலுப்பை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இங்குள்ள கோயிலில் உருவம் ஏதுமில்லை. கிணறு ஒன்று உள்ளது. அதன் மேல் அமர்ந்து தவம் செய்த யோகி- கிணற்றுக்குள் அடைக்கலமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இக்கோயிலில் கருவறைக்கு அருகில் வராமல் வெளியிலிருந்து பெண்கள் வழிபடலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இங்கு பழைமையான மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. கோயில் வளாகத்தில் அகோர வீர பத்திரர், மதுரை வீரன், சங்கிலி கருப்பு, அய்யனாரின் வாகனமாக குதிரை, சுடுமண் உருவங்களும் வழிபடப் பெறுகின்றன. சாளுக்கிய நாட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட துர்க்கையின் சிற்ப வடிவமும் இங்கு வழிபடப் பெறுகிறது.
கோயிலின் எதிரே அய்யனாரின் மற்றொரு வாகனமான யானை கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. சுமார் 60 அடி உயரம், 30 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான யானையின் சுதை வடிவத்தைக் காணலாம்.
செங்கல்- சுண்ணாம்பு போன்றவை கொண்டு கலையழகுடன் காட்சி தருகிறது. யானையின் மேல் இரு பக்கங்களிலும் பூதகணங்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் நிலையில் சுதை வடிவங்கள் காணப்படுகின்றன.
யானை துதிக்கையினல் வீரன் ஒருவனை காலால் மிதித்து பிடித்துகொண்டிருப்பது போல, சுதை வடிவம் காணப்படுகிறது. யானையின் கழுத்தில் மணிகள் ஆன அணிகலன் அழகு செய்கின்றது.
மிகவும் தொன்மையான வரலாற்று சிறப்புமிக்க யானையின் சுதை வடிவத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக அண்மையில் அறிவித்துள்ளது. தமிழகத்திலேயே மிக உயரமான, சுதை சிற்பமாக விளங்கும் யானையின் வடிவத்தைக் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.