காலம் தந்த தலைவன்
நமது நாட்டின் விடுதலைப் போராட்டம் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கிய காலத்தில் -காந்தி யுகத்தில்- பிறந்தவன் நான்.


நமது நாட்டின் விடுதலைப் போராட்டம் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கிய காலத்தில் -காந்தி யுகத்தில்- பிறந்தவன் நான். காந்தியுகமே நேரு யுகமாகவும் மலர்ந்து வந்தது. எனவே நினைக்கும் நெஞ்சங்களிலெல்லாம் காந்தியும், நேருஜியும் நிறைந்து நின்றனர். அத்தகைய கோடிக்கணக்கான நெஞ்சங்களில் ஒன்றாகிய எனது நெஞ்சத்திலும், மாந்தருள் ஒரு தெய்வமாய் வந்த காந்திஜி, மனிதருள் ஒரு மாணிக்கமாய்த் திகழ்ந்த நேருஜி, ஆகியோர் நினைவு நிறைந்து நீங்காது நின்றுவிட்டதில் வியப்புக்கு இடமில்லை. இருப்பினும் சிறுவனின் உள்ளத்திலே நேருஜிக்குத் தனியான ஓர் இடம் உண்டு.
காலம் தந்த அந்த மாபெரும் தலைவன் நேருஜிக்கும், மிகவும் சாதாரண நிலையிலுள்ள எனக்கும் உள்ள தொடர்பில், என்னளவில் ஒரு சிறு விசேஷத்தன்மை இருப்பதை உணர்ந்து பெருமிதம் அடைகிறேன்.
நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது, ஒரு சமயம், நேருஜி தென்னாட்டிற்கு விஜயம் செய்தார். தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் எங்கள் சிற்றூராகிய பாபநாசத்தில் சுமார் அரை மணி நேரம் தங்கி உரையாற்றினார். அப்போது அந்தப் பகுதியில் எனது தந்தையார் அன்றைய காங்கிரஸில் முக்கியப் பங்கேற்றுப் பணியாற்றி வந்தார். எனவே எங்கள் வீட்டிலிருந்து, குங்குமப்பூவும், கற்கண்டும் சேர்த்துக் காய்ச்சிய பசும்பாலை எடுத்துச் சென்றேன். உரை முடிந்தபின் நேருஜி அந்தப் பாலை உவகையுடன் என் கையிலிருந்து வாங்கிப் பருகினார். சிறுவனாகிய எனக்கு அன்று முழுதும் இனம் புரியாத இன்பம்!
இன்று நினைத்துப் பார்க்கும் போது, அம்மாமனிதரின் வாழ்க்கையில் இது ஓர் அற்ப சம்பவம் தான். ஆனால் எங்கோ ஒரு சிற்றூரில் வாழ்ந்த சிறுவனுக்கு அது நினைக்கவொண்ணாத, கிடைத்தற்கரிய சம்பவமல்லவா?
1952-ஆம் ஆண்டின் இறுதியில் சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனத்தில் பிரதமர் நேருவுக்கு சென்னையிலுள்ள சமூக சேவா நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மாபெரும் வரவேற்பு அளித்து மரியாதை செய்தன. காந்திஜி எனது அரசியல் குருநாதர் என்று போற்றி வணங்கப்பட்ட அமரர் கோபால கிருஷ்ண கோகலே தோற்றுவித்த இந்திய ஊழியர் சங்கத்தின் சென்னை கிளையின் சார்பில் நேருஜிக்கு மரியாதை செய்யும் பெரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அப்போது நான் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணி செய்து வந்தேன். அடுத்து சில மாதங்களில் அப்பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்திய ஊழியர் சங்கத்தில் சேர வேண்டும் என்ற முடிவுடன் அதற்கான ஆயுத்தங்களை செய்து முடித்திருந்தேன். என் முடிவைப் பாராட்டி எனக்கு ஆசியளித்தார் நேருஜி. அடுத்து நான் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து தொண்டாற்றிய காலத்தில் பல முறை நேருஜியின் கிட்டவும், எட்டவும் நின்று அவரைத் தரிசித்து அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்து பயன் பெற்றதுண்டு.
காலம் தந்த அம் மாபெரும் தலைவரின் நினைவு காலம் கடந்த பின்னும், மக்கள் மனதில் நீங்காது நின்று அவர்தம் வாழ்க்கையை மலரச் செய்து பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
(ரஸ்கின் பாண்ட் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமாக நேருஜி பற்றிய தமது நூலில் கே.ஆர்.வாசுதேவன் எழுதிய முன்னுரை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...