தாவரங்களின் சரணாலயம்

இயந்திரங்களின் இரைச்சல், இனம்புரியாத வெப்ப எரிச்சல், வழக்கமான வாழ்க்கைப் பயணம்.. என சலித்துப் போனவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது ஆரண்யா வனப்பகுதி.
தாவரங்களின் சரணாலயம்
Updated on
2 min read

இயந்திரங்களின் இரைச்சல், இனம்புரியாத வெப்ப எரிச்சல், வழக்கமான வாழ்க்கைப் பயணம்.. என சலித்துப் போனவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளது ஆரண்யா வனப்பகுதி.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதியான பூத்துறை ஊராட்சியில் சுமார் 100 ஏக்கரில்,  ஆரோவில் ஊழியர் "வனமகன்'  தே.சரவணனால் உருவாக்கப்பட்ட ஆரண்யா வனப்பகுதியைப் பார்க்கும்போது விழிகள் விரிவதைத் தவிர்க்க முடியாது.

தனிமனித முயற்சியில் இப்படியும் ஓர் வனப்பகுதியை உருவாக்க முடியுமா?  என ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்பவர்கள்,  அதனுள்ளே போனால் நம்பமுடியாத ஆச்சரியங்கள் பல இருக்கின்றன.

சிறிய வாயிலில் இரும்புக் கதவை தாண்டிச் சென்றால் வரவேற்கிறது ஒற்றையடிப்பாதை.  வளைந்து நெளிந்து செல்லும் பாம்பு போல அழைத்துச் செல்லும் அந்தப் பாதையின் இருபுறமும் புதர்கள், குறுங்காட்டு மரங்கள்,  பாதையில் பயணிக்கும்போது ரீங்காரமிடும் வண்டுகள், பறவைகளின் இனிய குரல்கள், அடையாளம் தெரியாத உயிரினங்களின் சத்தம் என காதுகளுக்கு இனிமையாகவும், கண்ணுக்குப் பசுமையாகவும் இருக்கிறது பயணம்.

வனத்தை உருவாக்கிய சரவணன் வசிக்குமிடத்தைச் சுற்றிலும்  உயர்ந்த வேங்கைகள், அதில் ஒட்டி உறவாடி வளர்ந்து பூத்துக் குலுங்கும் வெண்ணிலாக் கொடிகள் (ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் தாவரக்கொடிதான்.

அங்கிருந்து மீண்டும் ஒற்றையடிப்பாதையில் சென்றால், மருத்துவக் குணமுடைய காயாமரங்கள்,  சிவனுக்கு உகந்த கருங்காலி, பாதையில் வளைந்து நெளிந்து, குனிந்து, நிமிர்ந்து செல்பவர்களை மேடாகவும், திடீரென பெரிய பள்ளமாகவும், பிளவுபட்டும் காட்சியளித்து ஆச்சரியமூட்டும் பல்வேறுபட்ட நில அமைப்பு. ஆலமர வேர்களும், விழுதுகளும் அந்தரத்தில் தொங்கும் அற்புதக் காட்சி. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் மரத்தின் மீது கட்டப்பட்ட பலகை வீடு. 

ஓடையை சாகசத்தால் கடந்து செல்ல கட்டப்பட்டுள்ள இரும்புக் கம்பி பாலம் என நம் ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்கள் ஏராளம். மலைத் தேன் முதல் கருங்காலிப் பழம் வரை பறித்துச் சுவைக்கப் பஞ்சமில்லை.

மடித்து மடித்து அழகாகக் காட்சி தரும் செம்மண் படிவங்கள், மழைநீரை வடிகட்டி குடிநீராக்கும் மகத்துவத்தை இயற்கை நிகழ்த்துவதை இங்கே பார்க்க முடிகிறது. செயற்கையான குட்டைகள் தண்ணீரைத் தேக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது ரசிக்க வைக்கிறது. செயற்கையாக வனப்பகுதியை உருவாக்கி, அதை இயற்கையின் போக்கிலேயே வளர்ச்சியடைய வைத்துள்ளார் சரவணன். 

அவரிடம் பேசியபோது:

"எனக்கு ஐம்பத்து ஆறு வயதாகிறது.  எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட செங்கம் வளையாம்பட்டு கிராமம். அப்பா தேசிங்கு. 
பிளஸ் 2 வரை படித்தேன். பின்னர், ஆரோவில் ஊழியராக 1989- ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தேன்.

அன்றிலிருந்துதான் மரங்கள் மனிதர்களின் உயிர் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் பிரம்மாக்கள் என்பதை உணர்ந்தேன்.   

ஆரோவில்லில் இருந்தபோது, மேற்கு மலைத் தொடர்ச்சி பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நடைபயணம் மேற்கொண்டேன் அதில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில்தான் 1994 -ஆம் ஆண்டில் ஆரண்யா வனப்பகுதியை உருவாக்கினேன்.

பொட்டல் மண்ணும்,புளிய மரங்களும், பனையுடன், காட்டு வாகையும் இருந்த இந்த செம்மண் தரையில் இப்போது 35 ஆயிரம் வகைத் தாவரங்கள் செழிப்போடு உள்ளன.
மூலிகைச் செடிகள், முள் செடிகள், மனித காயத்தை ஆற்றும் சக்தி மிக்க மருத்துவக் குணமுடைய தாவரங்கள், உயர்ந்த மரங்கள் என 250 வகை மரங்களும், 25 ஆயிரம் செடி, கொடிகளும் இங்குள்ளன.  

அழிவின் விழிம்பில் உள்ள 40 வகை நாட்டு மரங்கள் இங்கு நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அழியும் தாவரங்களுக்கு அடைக்கலமாகவும் இந்த ஆரண்யா வனப்பகுதியை பயன்படுத்திவருகிறேன். வனப்பகுதியில் மான்கள், தேவாங்குகள், முள்ளெலிகள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள், அரியவகைப் பாம்புகள் என பல உயிரினங்
களும் உள்ளன.

 இந்த வனத்தில் தாவரவியல் ஆய்வு, விலங்குகள் ஆய்வு என பல பல்கலைக்கழக ஆய்வாளர்களும், மாணவர்களும் வந்து தங்கி ஆய்வை மேற்கொண்டு செல்கின்றனர். சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுக்கு வரும் வெளிநாட்டவரும் ஏராளமாக இங்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கான தங்கும் வசதிகளும் உள்ளன.
வாரம்தோறும் தமிழ்நாடு, புதுவையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் வந்து வனப்பகுதியைச் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். அவர்களுக்கு சுற்றுச்சூழலில் வனப்பகுதிகளின் பங்களிப்பை எடுத்துரைத்துவருகிறோம். ஆரண்யா வனத்தின் 60 சதவீதம் மரம், செடி, கொடிகள் ஆரோவில் பங்களிப்பிலும், 40 சதவீதம் எனது பங்களிப்பிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதன.

 உலகின் நுரையீரலாக அமோசன் வனப்பகுதியை கூறினால், புதுச்சேரியின் நுரையீரலாக ஆரண்யா வனப்பகுதியைக் குறிப்பிடமுடியும். அந்த அளவுக்கு மரங்களும்,தாவரங்களும் வளர்க்கப்பட்ட வனமாக மட்டுமின்றி, காற்றுச்சூழலை காக்கும் கரங்களாகவும் ஆரண்யா வன மரங்கள் உள்ளன. 

ஆகவே, ஊராட்சிகள் தோறும் 35 சதவீதம் வனப்பரப்பை அரசுகள் உறுதிப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுவது அவசியம்.

புதுச்சேரி என்பது கேளிக்கைக்கான இடம் மட்டுமல்ல;   ஆரண்யா வனப்பகுதியில் டிரக்கிங் எனப்படும் வன நடைபயணத்தையும் மேற்கொள்ளலாம். பாரம்பரிய வனங்களைப் போல காணப்படும் ஆரண்யா வனப்பகுதி தற்போது புதுச்சேரி வனச்சேரியாகியிருக்கிறது'' என்றார்.

வ.ஜெயபாண்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com