படிக்காதவர்களுக்கும் இலவச தொழிற்கல்வி!

காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏனாத்தூர் சங்கரா கலை,  அறிவியல் கல்லூரியில் உள்ள ஸ்ரீசங்கரா சமுதாயக் கல்லூரி-யில் படிக்காதவர்கள்,  இடைநின்றவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள்...
படிக்காதவர்களுக்கும் இலவச தொழிற்கல்வி!
Updated on
1 min read

காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏனாத்தூர் சங்கரா கலை,  அறிவியல் கல்லூரியில் உள்ள ஸ்ரீசங்கரா சமுதாயக் கல்லூரி-யில் படிக்காதவர்கள்,  இடைநின்றவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்கள் உள்பட பலரையும் கண்டறிந்து இலவசத் தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது என்றால் வியப்புதானே!

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் கூறியதாவது:

""காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2010-ஆம் ஆண்டில் பக்தர்களிடம் பேசியபோது, " சாதி, மத வேறுபாடுகளும் இல்லாமல் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் இலவசமாகவே குறுகிய கால தொழிற்பயிற்சிகளைக் கற்றுத்தர வேண்டும்' என்பது எனது கனவுகளில் ஒன்று என்றார்.

இந்த நிகழ்வு நடைபெற்ற  ஒரு மாதத்துக்குப் பிறகு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த திருவாசகத்திடமிருந்து அழைப்பு வந்தது. இதன்பேரில், அவரை  நேரில் சந்தித்து பேசினோம். "இலவசமாகத் தொழிற்கல்வி நடத்த சங்கரா கல்லூரிக்கு அனுமதி வழங்குவதாகவும், அதைச் செய்ய விருப்பம் இருக்கிறதா?' என்றும் கேட்டார். 

உடனடியாக அந்த இடத்திலேயே ஒரு மனுவை எழுதி விண்ணப்பித்தேன்.  அனுமதியும் கிடைத்தது.

இந்த விவரத்தை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சொன்னபோது,  அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனடியாக சமுதாயக் கல்லூரியும் மலர்ந்தது. அவர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைக்கும் அந்த நாள் முதல் இதுவரை 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே தொழிற்கல்வி வழங்கி இருக்கிறோம்.

பயிற்சி,  கையேடுகள், சான்றிதழ் உட்பட எதற்கும் எந்தக் கட்டணமும் பெறுவதில்லை. எங்களிடம் படித்த  300-க்கும் மேற்பட்டோர் தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கின்றனர். சுமார் 59 பேர் தொழிலதிபர்களாகவே மாறியிருக்கிறார்கள்.

அச்சுக்கலை, தையல் கலை,கணினி, கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி, ஏ.சி. மெக்கானிசம் உள்பட எந்தப் பயிற்சியாக இருந்தாலும் இலவசம். சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து 6 மாதங்களுக்கு பயிற்சி நடைபெறுகிறது.

பயிற்சியாளர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள், தொழிலில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல், வங்கிக் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல், தொழிலை விரிவுபடுத்த தேவையான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறோம். திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.மணிகண்டனின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com