மாற்றம்.. முன்னேற்றம்..! 

சவால்களுக்கு இடையே மூன்றாம் நிலை நகரமான தஞ்சாவூரில் சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கி மாற்றத்தை ஏற்படுத்தி, வெற்றி பாதையில் கொண்டு செல்கிறார் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான கந்தா பக்கிரிசாமி.
மாற்றம்.. முன்னேற்றம்..! 
Updated on
2 min read

சவால்களுக்கு இடையே மூன்றாம் நிலை நகரமான தஞ்சாவூரில் சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கி மாற்றத்தை ஏற்படுத்தி, வெற்றி பாதையில் கொண்டு செல்கிறார் நாகப்பட்டினம் அருகேயுள்ள தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான கந்தா பக்கிரிசாமி.

பெருநகரங்களில் மட்டுமே சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்கப்படும். மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் நிலை மாநகரங்களில் சாப்ட்வேர் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட காலங்களில் பின்வாங்கிச் சென்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏராளம்.

இந்தச் சூழ்நிலையில், மூன்றாம் நிலை நகரங்களில் சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்கப்படுவது கனவாகவே இருந்து வந்தது.

இது எப்படி சாத்தியமானது? என்பது குறித்து கந்தா பக்கிரிசாமி கூறியதாவது:

"தலைஞாயிறு அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். வலிவலம் தேசிகர் பள்ளியில் மேல்நிலைக் கல்வியைப் பயின்றேன். பின்னர், தஞ்சாவூர் சண்முகா பொறியியல் கல்லூரியில் (தற்போது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 1995-99ஆம் ஆண்டுகளில் பி.இ. மெக்கானிக்கல் படித்தேன். 2000-ஆம் ஆண்டில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராகப் பணியாற்றினேன். அப்போது, எனக்கு ஊதியம் ரூ. 1,250.

எனவே, சாப்ட்வேர் என்ஜினியராக மாறினேன். 2004 -ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்று முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போதுதான் டேட்டா அன்ட் அனாலிட்டிக்ஸ் துறை வளர்ச்சி பெறத் தொடங்கியது. இதை சவாலாக எடுத்து முழுவீச்சில் பணியாற்றியபோது, வெற்றி கிடைத்தது.

2006ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்செல்ஸில் கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றேன். எட்டரை ஆண்டுகள் பணியாற்றியபோது, நிறைய விஷயங்களைக்கற்றுக் கொண்டேன். படிப்படியாகத் தலைமைப் பொறுப்பு வரை உயர்ந்து, 2011- ஆம் ஆண்டில் டேட்டா அனாலிட்டிக்ஸில் இயக்குநர் என்ற பதவியை எட்ட முடிந்தது.

கந்தா பக்கிரிசாமி.
கந்தா பக்கிரிசாமி.

அந்த நிறுவனத்தை விட்டு 2014- ஆம் ஆண்டில் விலகி, 2015- ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்செல்ஸில் டேட்டா அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினேன். நிறைய சவால்களைச் சந்தித்தேன்.

தனியார் நிறுவன இயக்குநராகப் பணியாற்றியபோது நல்ல ஊதியம் கிடைத்த நிலையில், நிறுவனத்தைத் தொடங்கியபோது குறைந்த வருமானம் கிடைத்தது. புராஜெக்ட்ஸ்களும் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை.

எனவே, கனடாவுக்கு சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்த பிறகு புராஜெக்ட்ஸ்கள் கிடைக்கத் தொடங்கின. அப்போது, சொந்த ஊரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற தாக்கம் ஏற்பட்டது.

தஞ்சாவூரில் சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்குவதற்கு முற்பட்டபோது, நிறைய பேர் தவறான முடிவு எடுப்பதாகக் கூறினர். 'திறன்மிக்க பணியாளர்கள் வரமாட்டார்கள்' என்றெல்லாம் கூறி வந்தனர். 'இதே திறன் மிக்க பணியாளர்கள் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துதான் பெரு நகரங்களுக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு இங்கேயே, இவர்களது நகரத்திலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம்' என்ற எண்ணம் தோன்றி, உறுதியாக இருந்தேன்.

மாதாக்கோட்டை சாலையிலுள்ள ஆர்.ஆர். நகரில் 'ப்ளூம் பீல்டெக்ஸ்' என்கிற பெயரில் டேட்டா அனாலிட்டிக்ஸ் கிளவுட் சொலுசன்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினேன். நிறைய சவால்களும் ஏற்பட்டன. இணையதள வசதி, மின் வசதி, திறன் மிக்க மனித வளம் போன்றவை பிரச்னையாக இருந்தன. காலப்போக்கில் தடையற்ற இணையதளம், மின்சார வசதி கிடைத்தன.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் திறன் மிக்க மாணவர்களைத் தேர்வு செய்து பணியில் நியமித்தேன்.

முதலில் சில பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனத்தில், தற்போது 100 பேர் பணியாற்றி வருகின்றனர். திருமணம், மகப்பேறு போன்ற காரணங்களால் இடையில் நின்ற பெண்களை ஊக்கப்படுத்தி மீண்டும் வேலைவாய்ப்பைக் கொடுத்து வருகிறோம். அலுவலகத்திலும், அவரவர் வீட்டிலிருந்தும் டேட்டா அனாலிட்டிக்ஸ் தொடர்பான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சில வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2.40 லட்சம் முதல் அவரவர் திறனுக்கேற்ப ரூ. 15 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

ஐ.டி. மட்டும் அல்லாமல் மற்ற துறைகளில் படித்தவர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் விவசாய வேலையைப் பார்த்துக் கொண்டே, இப்பணியையும் செய்து வருகின்றனர்.

ஜெர்மனியிலுள்ள மூனிச் மற்றும் லாஸ் ஏஞ்செல்ஸ்ஸிலும் நிறுவனங்களைத் தொடங்கினேன். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் மூலம், இந்நிறுவனத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்கிறோம். அடுத்து பணியாளர்களின் எண்ணிக்கையை 200 -ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

தஞ்சாவூரில் ஏற்கெனவே சுமார் 10 சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இங்கு டேட்டா அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தை முதல் முதலில் தொடங்கியது நாங்கள்தான்.

செலவுகள் குறைவு, போக்குவரத்து நெரிசல் இல்லாதது போன்ற காரணங்களால் பணியாளர்கள் திருப்தி அடைகின்றனர்.

பெரு நகரங்களில் பணியாற்றும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு திரும்பி அதே வேலையைத் தொடர வேண்டும் என்பதே எனது இலக்கு" என்றார் கந்தா பக்கிரிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com