ராணிகளின் ராஜ்ஜியம்..!

மாவட்டத்தின் பெயர் "ராணிப்பேட்டை'  என்று அமைந்ததால் என்னவோ, மாவட்ட ஆட்சியர் முதல் 15-க்கும் மேற்பட்ட மாவட்ட உயர் அலுவலர்கள், உள்ளாட்சி மன்றங்களின் தலைவர்கள் பெண்களாகவே பெருமளவு இருக்கின்றனர்.
ராணிகளின் ராஜ்ஜியம்..!
Published on
Updated on
2 min read

மாவட்டத்தின் பெயர் "ராணிப்பேட்டை'  என்று அமைந்ததால் என்னவோ, மாவட்ட ஆட்சியர் முதல் 15-க்கும் மேற்பட்ட மாவட்ட உயர் அலுவலர்கள், உள்ளாட்சி மன்றங்களின் தலைவர்கள் பெண்களாகவே பெருமளவு இருக்கின்றனர்.  அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி மன்றங்களிலும்  "ராணிகள் ராஜ்ஜியம்' என்றே மக்கள் அழைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கென்று தனி வரலாறு உண்டு. 

1719-ஆம் ஆண்டு அக். 30-இல் தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங் என்ற தேசிங்கு மீது ஆற்காடு நவாப் சாதுல்லாகான் போர் தொடுத்தார். இந்தப் போரில் ராஜா தேசிங்கு வீர மரணம் அடைந்தார்.  இந்தத் துயரச் செய்தியை கேட்ட ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறி தன்னுயிரையும் மாய்த்துக் கொண்டார். இருவரது தியாகத்தை மெச்சிய ஆற்காடு நவாப் சாதுல்லாகான்,  பாலாற்றங்கரை ஓரத்தில் பளிங்கு கற்களால் ஆன இரு நினைவுச் சின்னங்களை எழுப்பினார்.  பின்னர், அவர் 1771-ஆம் ஆண்டில் "ராணிப்பேட்டை'  எனும் நகரை நிர்மாணித்தார்.  இவ்வாறாக,  252 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரம் இது.

பெண்களால் புகழ் பெற்ற ராணிப்பேட்டை நகருக்கென தனி வட்டம் கூட இல்லாமல் வாலாஜாபேட்டை வட்டத்துக்குள் ராணிப்பேட்டை இருந்த நிலையில்,  வேலூரில் இருந்து பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டமாக  2019-இல் உருவானது.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த சட்டம் படித்த எஸ்.திவ்யதர்ஷினி 2010-இல் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தேசிய அளவில் முதல் இடம் பெற்று தேர்வானவர். அவர் புதிய மாவட்டத்துக்கு அனைத்துத் துறைகளிலும் அலுவலர்களை நியமிக்கச் செய்து, அலுவலகங்களைத் தேர்வு செய்து  "சிறந்த ஆட்சியர்' என மக்களால் பாராட்டும் பெற்றார்.

ஆட்சியர் வளர்மதி: 2-ஆவது மாவட்ட ஆட்சியரும்,  தற்போதைய மாவட்ட ஆட்சியரான ச.வளர்மதி,  மாநில சமூக சீர்திருத்தத் துறையின் இயக்குநராக இருந்தவர்.  வருவாய்த் துறையில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவரான அவர்,  ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி: காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண்ஸ்ருதி,  2018-இல் ஐபிஎஸ் அலுவலராகத் தேர்வானவர். சென்னையைச் சேர்ந்த இவர், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவர்.  பிரதமர் விருது, உள்துறை அமைச்சர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.  சைபர் குற்றங்களில் நிபுணத்துவம் உடையவர். 

திட்ட அலுவலர் லோகநாயகி: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரான லோகநாயகி, குக்கிராமங்களுக்குக் கூட தானே நேரில் சென்று அங்கு நடைபெறும் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்து சரியானபடி அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா?  என ஆய்வு செய்து மக்களிடம் நற்பெயர் பெற்றுள்ள அலுவலராக இருக்கிறார்.

பிற பெண் அலுவலர்கள்...:  சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர்  மணிமேகலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா,  இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தே.கவிதா, மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர் லதா மகேஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்திஆனந்தன், மின்வாரியத்தில் ராணிப்பேட்டையை உள்ளடக்கிய வேலூர் மண்டல  தலைமை கண்காணிப்பாளர் ஜி.ஞானபெத்ஷிபா,  கண்காணிப்பு அலுவலர் டி.சாந்தி, மாவட்ட தொழிலக பாதுகாப்புத்துறை அலுவலர் சபீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மாஆபிரகாம்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் தேவிபிரியா உள்பட 15-க்கும் மேற்பட்ட உயர் அலுவலர்களால் மகளிர் அமைந்து ராணிப்பேட்டை மாவட்டமே தற்போது ராணிகளின் மாவட்டமாக மாறியுள்ளது.  அரக்கோணம் கோட்டாட்சியரான ர.பாத்திமாவும் பெண்தான்.

உள்ளாட்சி அமைப்புகளில்...:  இம்மாவட்டத்தின் உள்ளாட்சி மன்றங்களிலும் பல இடங்களில் பெண்களே தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.  

மாவட்ட  ஊராட்சிக் குழுத் தலைவராக ஜெயந்தி திருமூர்த்தி உள்ளார். மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 5 நகராட்சிகளில் நகர்மன்றத் தலைவர்களாக பெண்களே உள்ளனர்.  அரக்கோணம் நகரில்  லட்சுமிபாரி, சோளிங்கரில் தமிழ்ச்செல்வி அசோகன்,  வாலாஜாபேட்டையில் ஹரிணி தில்லை, ராணிபேட்டையில்  சுஜாதா வினோத்,  ஆற்காட்டில் தேவி பென்ஸ் பாண்டியன் என பெண் தலைவர்கள் திறம்படப் பணியாற்றிவருகின்றனர்.  

ஒன்றியக் குழுத் தலைவர்களாக அரக்கோணத்தில் நிர்மலா செளந்தர், ஆற்காட்டில்  புவனேஸ்வரி சத்தியநாதன், காவேரிப்பாக்கத்தில் அனிதா குப்புசாமி ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.

மாவட்டத்தில் ஆறு பேரூராட்சிகளில் பெண்களே தலைவர்கள்.   நெமிலியில் ரேணுகா தேவி சரவணன், பனப்பாக்கத்தில் கவிதா சீனிவாசன், காவேரிப்பாக்கத்தில் லதா நரசிம்மன், அம்மூரில் சங்கீதா மகேஷ், திமிரியில் மாலா இளஞ்செழியன், கலவையில் கலா சதீஷ் ஆகியோர் பதவி வகித்து, மக்கள் பணியாற்றுகின்றனர்.

ஆக,  அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்திலும் ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com