உலகிலேயே மிக விலை உயர்ந்த "மியாசாகி' மாம்பழங்களை வளர்க்கும் இந்தியாவின் முதல் விவசாயி ஜோசப் லோபோ. கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட உடுப்பிக்கு அருகேயுள்ள சங்கர்பூரைச் சேர்ந்த இவர், வாகன ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மல்லிகை சாகுபடியில் தொடங்கி, "மியாசாகி' மாம்பழங்களை வளர்க்கும் அளவுக்கு மாறினார். 'வீடுகள்தோறும் மரங்கள், செடிகளை வளர்க்க வேண்டும்'' என்கிறார் அவர்.
தனது வெற்றிக்கதை குறித்து அவர் கூறியது:
'மொட்டை மாடியில் கடந்த இருபது ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறேன். எனது மொட்டை மாடி பண்ணை 1,400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்திய, சர்வதேச அளவில் 350 வகையான பழங்கள், மற்றும் காய்கறிகளை வளர்க்கிறேன். மியாசாகி உட்பட 30 வகையான மாம்பழ மரங்களையும் வளர்க்கிறேன்.
இந்தியா, வளைகுடா நாடுகளில் மொட்டை மாடியில் "மியாசாகி' மாம்பழங்களை முதன் முதலாக வளர்க்கத் தொடங்கியது நான்தான்.
ஜப்பானை பூர்விகமாகக் கொண்ட "மியாசாகி' மாம்பழ வகை அதன் அதீத இனிப்புக்கும், தரத்துக்கும் உலகப் புகழ் பெற்றது. அதனால்தான் ஒரு கிலோ "மியாசாகி' சுமார் ரூ.2.75 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இந்த மாம்பழங்கள் கண்ணைக் கவரும் சிவப்பு கலந்த நீல நிறத்தில் இருக்கும்.
தனித்துவமான வடிவத்தால் "முட்டை மாம்பழம்' என்ற செல்லப் பெயரும் உண்டு. இந்த மரங்களை வளர்ப்பதற்கு பொறுமையும் அர்ப்பணிப்பும் அவசியம். ஏனெனில் இந்த மரங்கள் காய்க்க சுமார் மூன்றரை ஆண்டுகளாகும். இவற்றை வளர்ப்பதற்கு நான் எந்த சிறப்பு நுட்பங்களையும் பயன்
படுத்தவில்லை. அதன் வளர்ச்சிக்கு கரிம நடைமுறைகளைப் பயன்படுத்துகிறேன். உயிர்ம உரங்கள், கோகோ ஃபீட் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறேன்.
"மியாசாகி' மாம்பழங்களை விற்பதில்லை. அதற்குப் பதிலாக ஒரு "மியாசாகி' கன்றை பத்து ரூபாய்க்கு விற்கிறேன். செடிகளை ஒட்டுதல் முறையில் உயிர்ப்பிக்கிறேன். "மியாசாகி' கன்றுகளைக் கொல்கத்தா, பெங்களூரு, மங்களூரு, மும்பை, புணே, அகமதாபாத் தில்லி போன்ற மாநகரங்களுக்கு "மியாசாகி' மரக்கன்றுகளை விநியோகிக்கிறேன்.
உருளைக் கிழங்குகள் மண்ணுக்கு அடியில்தான் வளரும். அதாவது மண்ணுக்கு மேலாக, உருளைக் கிழங்கை வளர்க்கிறேன். இந்த முறையில் ஒரு உருளைக் கிழங்கு செடி 500 கிழங்குகள் தரும். அதனால் நல்ல லாபம் கிடைக்கும். ஆண்டு முழுவதும் உருளைக் கிழங்குகளைப் பயிர் செய்யலாம்.
மரம் செடி வளர்த்தல் தொடர்பான புதிய தகவல்களைத் தொடர்ந்து தேடி வருகிறேன்.
மொட்டை மாடிப் பண்ணையை மேலும் மேம்படுத்த தனித்துவமான செடிகளை மரக் கன்றுகளை தேர்ந்தெடுக்கிறேன். விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். பழங்கள், காய்கறி சாகுபடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விவசாயத் துறையில் உள்ள சிக்கல்களை முன்னிலைப்படுத்தவும் ஒரு தளமாகவே எனது யூடியூப் சேனல் செயல்படுகிறது. நர்சரி ஒன்றையும் நடத்தி வருகிறேன். கரிம உரங்களைத் தயாரிக்கிறேன். என்னிடம் 15 தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
ரசாயன உரங்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்; கரிம உரங்களைப் பயன்படுத்துங்கள், இயற்கையைப் பாதுகாத்து, பசுமை நோக்கிப் பயணியுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும்'' என்கிறார் ஜோசப் லோபோ.