மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு நடத்திய தேர்வின் தொடர்ச்சியாக, தில்லியில் நேர்முகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற 1,016 பேரில் 851-வது இடத்தை தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீமதி இன்பா பிடித்து, சாதனையைப் படைத்துள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு:
உங்கள் குடும்பம் குறித்து?
எனது அம்மா எஸ். ஸ்டெல்லா, பீடி சுற்றும் தொழிலாளி. வீட்டின் அருகில் உள்ள கடையில் பூக்களைச் சரமாகத் தொடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
என்னுடைய அண்ணன் பாலமுரளி, ஐடிஐ பயின்று சவூதிஅரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.
என்னுடைய வெற்றிக்கு காரணம் என் அம்மாவின் ஊக்கமும், அவர் வைத்திருந்த நம்பிக்கையும்தான். நான் இரண்டு முறை முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியபோதும், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற வைத்தது அவரது ஆதரவால்தான். எனது அண்ணன் என்னுடைய படிப்புக்காக, முழு ஊக்கமும் கொடுத்தார்.
எங்கு கல்வி பயின்றீர்கள்?
பத்தாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாசுதேவநல்லூரிலுள்ள கோமதி அம்பிகை நர்சரி பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடியும் வரை வாசுதேவநல்லூரில் உள்ள நாடார் சமுதாய மேல்நிலைப் பள்ளியிலும், மேல்நிலை வகுப்பு தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்றேன்.
2020- ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன்.
தற்போது எங்கு பணிபுரிந்து வருகிறீர்கள்?
எஸ்.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று, கோயம்புத்தூர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.
குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து?
கல்லூரி படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சிக்காகச் சேர்ந்தேன். இருப்பினும், கரோனா காரணமாக, எனது பயிற்சியைத் தொடர முடியவில்லை. நான் ஆன்லைனில் வகுப்புகளைத் தொடர்ந்தபோது, வீட்டிலிருந்து படிக்க முடியாதவாறு சில இடையூறுகள் இருந்தது.
செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்தேன். அங்கு நூலகர் கே.ராமசாமி மற்றும் பணியாளர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
அகாதெமி மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வைஃபை இணைப்பு வழங்கப்பட்ட இந்த நூலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை படிப்பதற்காக என்னுடைய நேரத்தைச் செலவிட்டேன். ஊழியர்கள் எனக்காக உதவினர். இதுதவிர மேலும் பல்வேறு நூல்களை வெளியிலிருந்தும் வாங்கிக் கொடுத்து உதவினர்.
'நான்முதல்வன்' திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக, ரூ25 ஆயிரம் நிதியுதவியைப் பெற்றேன். இந்தத் தொகை, முதன்மைத் தேர்வுக்கான ஆய்வுப் பொருள்களை வாங்கவும், பிரிண்ட்-அவுட் மற்றும் ஜெராக்ஸ் பிரதிகள் எடுக்கவும் எனக்கு உதவியது.
தமிழ்நாடு அரசின் உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் மாதம் ரூ.7, 500 நிதியுதவியும் பெற்றேன். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, பிப்ரவரி 2024-இல் குடிமைப்பணி நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். இதன் மூலம் வருவாய் அல்லது சுங்கத் துறையில் ஒதுக்கீடு கிடைக்கும்.ஆனால் எனது லட்சியம் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதுதான். இன்னும் இருமுறை தேர்வு எழுத வாய்ப்புள்ளது. நிச்சயம் அடுத்தடுத்து தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆகி சாதிப்பேன்.
மாணவ,மாணவிகளுக்கு தங்களுடைய அறிவுரை?
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை இலக்குகளை சிறிதாக வைக்காமல் பெரிய இலக்காக வைத்துகொள்ள வேண்டும். குடிமைப் பணி தேர்வுக்குத் தேர்ச்சி பெற முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும்.
அரசுப் பள்ளியில் படித்தாலும், கிராமப்புறங்களிலிருந்து சென்றாலும் கண்டிப்பாகச் சாதிக்க முடியும். இரண்டு முறை தோல்வி அடைந்தாலும்கூட தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். நான் மூன்று முறை முயற்சி செய்து தான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளேன்.
பெற்றோர்களுக்கு...
பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும். விரைவில் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணாமல் குடும்பத்திலுள்ளவர்கள் உறுதுணையாக இருந்து அவர்களின் கல்விக்கு உதவவேண்டும். எனது சாதனைக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், கடையநல்லூர் எம்எல்ஏ சி.கிருஷ்ணமுரளி உள்ளிட்டோர் பாராட்டியதற்கு நன்றி.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.