
டெல்லி கணேஷின் நடிப்பும் உடல்மொழியும் குரல் மொழியும் உலகம் அறிந்தவை. ஆனால் அவர் இலக்கியவாதி. படித்த கதைகளை அழகாக விவரிப்பார். 'நாடகத்தின் மீதும் ஆவல். டெல்லியில் இருந்தபோது தக்ஷிண பாரத நாடக சபாவில் தாம் நடித்த ஞாபகங்களை அவர் பகிர்ந்துகொண்டபோது ஒருநாள் சொன்னார்:
'உண்மையில் சுஜாதா - பூர்ணத்தை மனசுல வச்சி எழுதித் தந்த நாடகங்கள் போல எனக்கும் எழுதித் தந்துருந்தாருன்னா கண்டிப்பா ஒரு தடவை நாடகம் போட்டுருப்பேன்.' ஓய் ரொம்ப நன்னா இருந்துதய்யா அந்த ஜெயகாந்தன் ஆவணப்படம். எப்படி அத பாக்காத விட்டேன்னு தெரியல.
அந்த ஜோசப் அழுதானோ இல்லியோ நான் அழுதிண்ட்டேயிருந்தேன் அந்த கதையப் படிச்சப்ப. ஆமா இந்த ஜெயகாந்தன் முரடரை நீர் எப்படிய்யா வச்சு டாக்குமென்டரில்லாம் எடுத்தீர். போறும் போறாதுக்கு புரட்யூசர் இளையராஜா. நான் சர்க்கஸ் கூடாரத்துக்கு நடுப்புற சிங்கம் புலிக்கு மத்தில நீர் நின்னு சாகஸம் பண்ணாப்ல கற்பனை பண்ணிப்பாத்தேன் என்று சொல்லி சிரித்தபின் 'என்ன நான் சொல்றது சரிதானே' என்றார்.
'இவா ரெண்டு பேரையும் வச்சிண்டு இப்படி ஒரு வேலை பாத்ததுக்கே உமக்கு ஒரு அவார்ட் தந்துருக்கணுமேய்யா. அதுக்கு எதும் கிடைச்சுதா?''
'இல்லயே கணேஷ் சார். நீங்கதான் தரணும்.''
'அய்யோ நன்னா தரேன். எல்லாம் தோத்தாலும் கொஞ்சம் வச்சிருக்கேன்.. வாருமய்யா?''
தொண்ணூறுகளின் துவக்கத்தில் கரிச்சான் குஞ்சின் 'சுகவாசிகள்' கதையை டெலிவிஷன் சீரியலுக்கு உரிமை வாங்குவதற்காக டெல்லி கணேஷ் கும்பகோணம் வந்திருந்தார்.
ஒப்பந்தம் கையெழுத்தாகி லௌகீகம் எல்லாம் பேசி முடிந்ததும் டெல்லி கணேஷ் அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். கரிச்சான்குஞ்சு அவருக்கு விபூதி பூசிவிட்டு அருகில் நின்றிருந்த என்னைப் பார்த்து, 'இவன் ரவிசுப்பிரமணியன். நல்லா கவிதை எல்லாம் எழுதுவான்'' என்று அறிமுகப்படுத்தினார். இதுதான் அவருக்கும் எனக்குமான முதல் அறிமுகம். கொஞ்ச நேரத்தில் அவர், புறப்பட்டுப் போய்விட்டார்.
கரிச்சான் குஞ்சு மறைந்து சில ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கதை 'மனிதர்கள்' என்ற பெயரில் தூர்தர்ஷனில் வந்து, பெஸ்ட் சீரியல் அவார்டும் பெற்றது. ஆனால், கதை, வசனம் வியட்னாம் வீடு சுந்தரம் என்று முதலில் வெளிவந்தது. கரிச்சான்குஞ்சின் பெண் விஜயா அக்கா நேரடியாகத் தயாரிப்பாளர் எஸ். வி. ரமணனிடம் சென்று, 'இது என்ன சார் அநியாயமா இருக்கு?'' என்று கேட்க, அதன்பின் டெல்லி கணேஷ் தலையீட்டால் மூலக்கதை கரிச்சான் குஞ்சு என்று வந்தது.
மறுபடியும் இதன்பின் எனக்கும் அவருக்கும் பல ஆண்டுகள் எந்தத் தொடர்பும் இல்லை.
விஜய் டி.வி.யில் நான் பணிபுரியும்போது
'1997-இல் ஒரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சிக்கு எஸ். எஸ். சந்திரனையும் டெல்லி கணேஷையும் ஒப்பந்தம் செய்திருந்தோம். அதன் ஷூட்டிங் மூன்று நாள்கள் ஏ.வி. எம். படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. நண்பர் ரபி பெர்னார்ட் விஷயங்களைச் சொல்லச் சொல்ல அப்போதைய என் வசன உதவியாளர் நாவண்ணனும் நானும் அதற்கு வசனங்கள் எழுதினோம். அது கொஞ்சம் கடுமையான விமர்சன நையாண்டி நகைச்சுவை நிகழ்ச்சி. எஸ். எஸ். சந்திரன் தயக்கமில்லாமல் வசனங்களைப் பேச, ரபி பெர்னார்ட் அந்த நேரம் அருகில் இல்லாததால் டெல்லி கணேஷ் அதில் சில சந்தேகங்களை என்னிடமும் மூத்தத் தயாரிப்பாளர் பூபதியிடமும் கேட்க, உடனே எஸ். எஸ். சந்திரன்:
'ஓய்... குடுத்த வசனத்தைப் பேசிட்டு போவேய்யா, .. உனக்கு என்ன இப்ப சும்மா சும்மா இதில சந்தேகம்?''
'உமக்கென்னய்யா... நீர் பேசிட்டுப் பொயிடுவீர். உமக்கு திராவிடன்னு ஒரு ஷீல்ட் இருக்கு. எனக்கு அப்படியா, புதுப் புது அர்த்தத்தோட புறப்பட்டு வருவான்ங்க...''
'சரியான பயந்தாங்குளி அய்யரே நீ...''
'ஆமா, சித்த நீர் அந்தாண்ட போம். நான் கேட்டுண்டு வரேன்.''
நான் அர்த்தத்தைச் சொல்ல, 'யோவ் நல்லா தெளிவா சொல்லும். இதுல இந்த ஒரு அர்த்தம்தான இருக்கு?'' என்று கேட்டார்.
'ஆமா சார்.''
'எதோ இந்த நிகழ்ச்சிக்காகப் பேச வச்சுட்டு என் மித்த பொழப்புல மண்ணள்ளிப் போட்றாதேள்'' என்றார்.
இவ்வளவுதான் அவருடனான அப்போதைய உரையாடல். அந்தச் சமயத்தில் நான் கரிச்சான் குஞ்சு வீட்டில் சந்தித்த விஷயங்களைச் சொல்லத் தோதான நேரம் கூடவில்லை.
2020 டிசம்பர் 20-இல் பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இல. கணேசன், ரங்கராஜ் பாண்டே, கலாப்ரியா, டெல்லி கணேஷ் இவர்களோடு நானும் அவ்விழாவில் பேசினேன். பேசி முடித்த பின், டெல்லி கணேஷ் மிகவும் வியந்து கைகுலுக்கிப் பாராட்டி, 'உம்ம நம்பர் குடுமய்யா'' எனக் கேட்டார்.
மறுநாள்காலை எட்டு மணிக்கு அவரே பேசினார். மிகுந்த உற்சாகமும் சந்தோஷமுமாகப் பேசினார். ஒரு மணி நேரம் பேசினோம். அப்போதுதான் முழுமையாக இந்த விஷயங்களை எல்லாம் சொல்ல, 'அய்யோ உம்மை மிஸ் பண்ணிட்டனேய்யா, மிஸ் பண்ணிட்டனேய்யா'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பின் அதிகபட்சம் ரெண்டு மாசம் குறைந்தபட்சம் இருபது நாளுக்கு ஒருமுறை பேசிக்கொண்டே இருந்தோம். தொண்ணூற்றெட்டு விழுக்காடு அவர் சினிமா பற்றிப் பேசியதே இல்லை.
என் குறும்படக் கதாநாயகி காயத்ரியிடம் பேசும்போது என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.
2024 அக்டோபர் 18-ஆம் தேதியன்று காலை 10. 19-க்கு நான் அனுப்பியிருந்த 'அருகருகேயிருப்பினும் தனியன்' என்ற கவிதைக்கு 19. 10. 24 ஆண்டாள் சொல்லும் சிற்றஞ்சிறுகாலை 3. 28-க்கு இரண்டு வரி பாராட்டி எழுதிவிட்டு, பின்பு விடிந்ததும் பேசினார்.
'ஒரு வெக்கைக்குப் பின்னான இரவின் மழையில் தலையாட்டும் தளிர்கள்.. ஓய் இது ஒரு நல்ல ஷாட். அடுத்த பாராவுல வர்ற வரிக்கெல்லாம் ஒரு டைரக்டர் எப்படிங்க ஷாட் வைப்பான். அதென்னய்யா அருகியதொரு ராக வாசனை...''
'அனாந்திரப் பாதை திறக்க
தேங்கு கனம் ஸ்பரிசித்த
அருகியதொரு ராக வாசனை''
இப்படி வரிக்கு வரி ரசித்து நுட்பமாக வாசித்துப் பகிர்ந்துகொண்ட சில சமயம் நான் காணாத வேறு சில அர்த்தங்களைச் சொன்ன ஒரு சஹிர்தயனை இழந்தேன். கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக நான் எழுதிய பெரும்பாலானவற்றை வாசித்துப் பேசியுள்ளார். ஆரம்பத்தில் நான் அனுப்பிய சில கட்டுரைகளைப் படித்தபின் அவர் அனுப்பிய வாட்ஸ் அஃப் மெúஸஜ்களில் ஒன்று இது:
'அட... அடடே ரவிசுப்பிரமண்யம் அவர்களே. நான் என்னத்தைச் சொல்றது. வழக்கம் போல உமது தமிழ் விளையாடுகிறதய்யா. உமது தமிழ் அழகிய தமிழ். அர்த்தம் பொருந்திய தமிழ். இனிமைத் தமிழ். முழுக் கவிதையையும் படித்தேன். பிரமாதம், பிரமாதம். நான் உம் ரசிகன் ஐயா. உம் ரசிகன். ஆனா ஒண்ணு சொன்னா நீர் கோச்சுக்கப்படாது. உமது பல வாட்ஸ் அஃப் பதிவுகள் தமிழில் இருந்தாலும் அதற்கு எனக்கு அர்த்தம் புரிய வேண்டுமே. என்ன பண்ணலாம். தமிழுக்கே தமிழில் அர்த்தம் தேட வேண்டிய மாதிரி இருக்கிறதய்யா உம் எழுத்துகள். .''
2024 அக்டோபர் 3- காலை 8 . 12-க்கு அவர் கடைசியாகப் பேசி அனுப்பியிருந்த வாய்ஸ் மெúஸஜை (10. 11. 24) அவர் மறைந்த நாளில் மறுபடி கேட்டேன். அந்தக் குரலில் த்வனித்த வாத்சல்யம் என்னை அழ வைத்துவிட்டது. அவர் ஒரு விவரம் கேட்டிருந்தார். அதைப் பொறுப்பாய்க் கேட்டு பதில் அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய பதில் இது.
'ரவி சார்... ரொம்பவே நன்றி. எப்பவுமே நாம் இப்படித்தான் இருக்க வேண்டும். உமக்கு நான். எனக்கு நீர். அதுதான் நல்ல பண்பு. நல்ல நட்பு. ஆயுள் வரை நிலைக்கும் நம் அன்பு. அது உம்மிடமும் இருக்கிறது. இவ்வளவு திறமையை வைத்துகொண்டு நீர் வெகு சாதாரணமாக என்னிடம் பேசுவது மனசுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா? நான் இன்றைக்கு வாசித்த கவிதையை மட்டுமல்ல. உம்முடைய எழுத்து எல்லாவற்றையும் படித்துக்கொண்டுதானிருக்கிறேன். என்ன, பதில் எழுதுவதற்கு சில சமயம் நேரம் கிடைப்பதில்லை.
நான் கடந்த பத்து நாள்களாக உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்தேன். ஒரு சிறு ஆப்ரேஷன். அது முடிந்து இப்போதான் வீட்டுக்கு வந்தேன். வந்ததுக்கு அப்பறம்தான் ஃபேஸ்புக்கு, வாட்ஸ் அப் இதெல்லாம் பார்க்குறேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் ஒரு வாரமானாதும் உடம்பு நன்றாக குணமாகிவிடும். நன்றி. எழுதுங்கள். நமஸ்காரம்.''
'உம்மோடு ஞாபகத்துக்கு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணுமய்யா' என்று சொன்னார் ஒருமுறை; எடுத்துகொள்ள முடியவில்லை. ஆனால், எனக்கு உங்கள் ஞாபகமாய் இந்தக் குரல் பதிவை மட்டும் தந்து நமஸ்காரம் சொல்லிவிட்டு எங்கே போனீர் டெல்லி கணேஷ்?!
இவர்கள் சொல்கிறார்கள்...
காத்தாடி ராமமூர்த்தி:
தில்லியில் ஏர்ஃபோர்ஸில் வேலை பார்த்தபோது அங்கே நாடகம் போட்டதுதான் டெல்லி கணேஷுக்கு நடிப்பில் பிள்ளையார் சுழி. எங்கள் நாடகக் குழுவில் இருந்த நண்பர் ஒருவர் தில்லிக்கு பணியிட மாற்றம் வாங்கி சென்றபோது, அவருடன் கணேசன் நடித்துள்ளார். பின் அவர் இங்கே வந்தார். அந்தச் சமயத்தில் நாங்கள் விசுவை இயக்குநராக்கி, 'டௌரி கல்யாண ஊர்வோலம்' என்ற நாடகத்தை போட்டுக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்துக்கான ஒத்திகையின்போது, கணேசனை சுந்தர்ராஜன் அழைத்து வந்தார்.
நாடகத்தில் கணேசனுக்கு வேடம் இல்லை. 'மாம்பலம் குச்சிராயர்' என்ற வேடத்தில் நடிக்க இருந்தவருக்கு, அன்றைய தினம் உடல் நலம் சரியில்லை. அந்த வேடத்தில் கணேசனை நடிக்க வைக்க வைத்தோம். இரண்டே இரண்டு காட்சிகளில் நடித்த கணேசனை வெகுவாகப் பாராட்டினார்கள். அவரால் எங்கள் நாடகத்துக்கு பெரிய பெருமை கிடைத்தது.
இந்த நிலையில் விசுவின் நாடகங்களில் நடித்தார். பட்டின பிரவேசம் நாடகத்தைப் பார்க்க வந்த இயக்குநர் கே. பாலசந்தர், அப்போதுதான் கணேசன் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, சினிமாவில் அறிமுகப்படுத்தி ' டெல்லி கணேஷ்' ஆக்கினார் பாலசந்தர் அற்புதமானவை.
சிவகுமார்:
'சிந்து பைரவி' படத்தில், 'மிருதங்கம்' குருமூர்த்தியாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ். குடித்துவிட்டு கச்சேரிக்கு வந்த காரணத்தினால் துரத்தியடிக்கப்படுகிறார். ஜே.கே.பி.யின் (நான்) வீட்டு வாசலில் அமர்ந்து 'நீங்க என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்ற வரை வாசிப்பேன்' என்று ஆவேசமாகச் சொல்லுமிடம் அமர்க்களம். 'அசந்தர்ப்பமான நேரத்தில் வந்து இப்படி அழிச்சாட்டியம் பண்ணுகிறானே' என்று ஜே.கே.பி.க்குக் கோபம் வந்தாலும், குருமூர்த்தி வாசிக்கும் தாளத்தின் கச்சிதமான சுருதியை, தன்னிச்சையாகத் தலையாட்டி ரசிக்கும் இடம் சிறப்பானது. நல்ல கலைஞன் திறமையை எங்கிருந்தாலும் கண்டுகொள்வான் என்பதற்கான உதாரணம் அது. குடித்தது போல் நடித்து ஜே.கே.பி.யைக் கண்டிக்கும் காட்சியும் இன்னொரு அற்புதம்.
கே.எஸ்.ரவிக்குமார்:
'அவ்வை சண்முகி' திரைப்படத்தில், சண்முகியின் பின்னணியை கண்டுபிடிப்பதற்காக டெல்லி கணேஷ் மாமியைப் பின்தொடர, அவருக்கு பல்வேறு விதமாகப் போக்கு காட்டி விட்டு முதலியார் (மணிவண்ணன்) இருக்கும் மார்க்கெட் பகுதிக்குள் நுழைவார் மாமி (கமல்ஹாசன்). முதலியாரிடம் தன்னை ஒருவர் பின்தொடருவதாக மாமி கூற, 'ஏரியா. விட்டு ஏரியா வந்து சைட் அடிக்கறாண்டா. போடுங்க'' என்று டெல்லி கணேஷிக்கு தர்மஅடி போடுவார்.
மயக்கமாக விழுந்திருக்கும் அவருடைய முகத்தில் சோடா தெளித்து விட்டு, 'டேய் தெளிஞ்சுடுச்சுடா.. அடிங்க'' என்று முதலியார் சொல்வதும், 'ஏண்டா.. தெளிய வச்சு.தெளிய வச்சு அடிக்கறீங்க?'' என்று சேதுராமய்யர் பரிதாபமாக கேட்பதும், 'மயக்கத்துல இருக்கும்போது அடிச்சா வலி தெரியுமா.. அதான்'' என்று முதலியார் லாஜிக் பேசுவதும் ரகளையான காட்சிக்கோர்வை.
எஸ்.பி.முத்துராமன்:
கதாபாத்திரங்களை உள்வாங்கி மக்கள் ரசிக்கும்படியாக நடிப்பதில் டெல்லி கணேஷூக்கு என்று தனி இடம் உண்டு. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக் கூடியவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் கலை அனுபவம் கொண்ட அவர் நடித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாத நினைவுகளாகப் பார்வையாளர்களின் நினைவுகளில் இருக்கும்.
ஒரு இயக்குநருக்கு நடிகர் என்பவர் மிக முக்கியம். தான் சிந்தித்த உண்மையை, கற்பனை சக்தியை ஒரு நடிகன்தான் வெளிக் கொண்டு வந்து காட்ட முடியும். அந்த விதத்தில் என் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தவர் டெல்லி கணேஷ்.
'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் ரஜினியின் மாமனாராகத் திறம்பட்ட நடிப்பை தந்திருப்பார் அவர்.
எனக்குப் பிடித்த நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் டெல்லி கணேஷ். அழுகை காட்சிகளில் ரசிகர்களை அழ வைத்து விடுவார். சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்து காட்சி அமைத்தால், எல்லோரையும் நிச்சயமாகச் சிரிக்க வைத்து விடுவார்.
டெல்டா அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.