தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்டஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்துக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூரும், கிழக்கே 15 கி.மீ. தொலைவில் சங்கக் கால துறைமுக நகரமான கொற்கையும் அமைந்துள்ளன.
இந்தக் கிராமத்தில் பறம்பு பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள தொல்லியல் களத்தை, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் 2012'இல் கண்டுபிடித்தார். இதையடுத்து, மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
2020'ஆம் ஆண்டு முதல் 2023 வரை 3 கட்டங்களாகநடைபெற்ற அகழாய்வில்,பல்வேறு தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
முதல்கட்ட அகழாய்வுகளில் எடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியில் கிடைத்த நெல்மணிகளை அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் அது 3,200 ஆண்டுகள் பழமையானது என்பதும், ஒரு இரும்புக் கோடாரியை ஆய்வு செய்ததில் அது சுமார் 5,300 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டபோது, உலகில் மிகப் பழமையான ஒரு இரும்புக் கால நாகரிகம் சிவகளையில் இருந்தது தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து ஆசிரியர் மாணிக்கத்திடம் பேசியபோது:
'சிவகளையில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நீரிலும் நிலத்திலும் தொல்லியல் களம் பரந்து விரிந்துள்ளது. கிராமத்தின் வடபகுதியில் உள்ள பறம்பு பகுதியில் தொல்பழங்கால மனிதர்களைப் புதைக்கும் இடங்கள் உள்ளன. அகழாய்வுகளில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், தங்கத்துகள்கள், செம்பு, வெண்கலம், இரும்பிலான ஆயுதங்கள், பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகளை செக்கடி, ஆவரங்காடு திரடு, பொட்டல் கோட்டை திரடு, மரக்களமேடு, பராக்கிரமபாண்டி திரடு, வளப்பான்பிள்ளை திரடு, வெள்ளதிரடு, பேட்மாநகரம், பேரூர், ஸ்ரீமூலக்கரை போன்ற இடங்களில் வாழ்விடங்களிலும் அகழாய்வு நடைபெற்றது.
இவற்றில் பழங்கால மக்களின் கழிவுநீர் முறை, தானியங்கள் போட்டு வைக்கும் பானைகள், வட்டச்சில்லுகள், கலைநயம் மிக்க கருப்பு சிவப்பு மண்பானைகள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள், கிராவிட்டி எழுத்துகள், நூற்றுக்கணக்கில் பல்வேறு வகையான பாசி மணிகள், நூல் நூற்கும் தக்களிகள், நாணயங்கள், சுண்ணாம்புப் பொருள்கள், சிப்பிகள், சங்கு வளையல்கள், வளையல் துண்டுகள்,சில புடைப்புச்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு பல்வேறு வகையான தொல்லியல் களங்கள் இருந்துள்ளன.குறிப்பாக,இடைக்கற்கால கருவிகள் நூற்றுக்கணக்கில் தரிசுகுளத்தில் கண்டெடுக்கப்பட்டதால் சிவகளை தொல்லியல் களமானது இரும்புக் காலத்துக்கும், நுண்கருவி காலத்துக்கும் முற்பட்டது. இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இங்குள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கரை சுற்றிலும் இரும்பு வேலிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும்.ஒரு தொல்லியல் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த வேண்டும். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் சிவகளை குறித்து வழிகாட்டி பலகைகளை அமைக்க வேண்டும்.
இங்குள்ளபேரூர் குளம், சிவகளை மேலக்குளம், கீழக்குளம், தரிசுகுளம், பெருங்குளங்களை உள்ளடக்கிய பகுதிகளை ஒரு உயிர்கோளபெட்டகமாக அறிவித்து இப்பகுதியை பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்க வேண்டும்.தரிசு குளத்தில் படகு குழாம் அமைக்க வேண்டும்' என்கிறார் மாணிக்கம்.