வியக்க வைக்கும் சரித்திரங்கள்...

சென்னையின் அடையாளங்களில் சென்ட்ரல் ரயில் நிலையமும், அதன் அருகேயுள்ள வெள்ளை நிற ரிப்பன் மாளிகையான மாநகராட்சி அலுவலகமும் முக்கியமானவை.
வியக்க வைக்கும் சரித்திரங்கள்...
Updated on
2 min read

வ.ஜெயபாண்டி

சென்னையின் அடையாளங்களில் சென்ட்ரல் ரயில் நிலையமும், அதன் அருகேயுள்ள வெள்ளை நிற ரிப்பன் மாளிகையான மாநகராட்சி அலுவலகமும் முக்கியமானவை. ரிப்பன் மாளிகை வளாகத்துக்கு உள்ளேயே சிவப்பு நிறத்தில் வித்தியாசமான முறையில் கவர்ந்திழுக்கும் கட்டடமாக 'விக்டோரியா பொது அரங்கக் கட்டடம்' திகழ்கிறது.

செந்நிற சீன செராமிக் கற்களாலான ஓடுகளுடன் கூடிய கட்டடத்தின் உள்பகுதி மிகுந்த வேலைப்பாடுடன் கூடியதாக உள்ளது. மூன்று அடுக்குடன் கூடிய இந்தக் கட்டடத்தின் தரைத்தளம் 13,342 சதுர அடியுள்ளது. முதலாவது மாடி 12,541 அடியுடையதாகும். தரை, முதல் மேல் தளங்களில் பெரிய அரங்கங்கள் உள்ளன. அவற்றில் தலா 600 பேருக்கும் மேலானோர் அமரும் வசதியும் உள்ளது.

வெளிநாட்டுத் திரைப்படக் காட்சிகளில் வனப்பகுதிகளில் காட்சி தரும் பங்களாவைப் போல காட்சியளிக்கும் இந்தக் கட்டடத்தின் வரலாறு வியக்க வைப்பதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது.

1880-களில் ஜார்ஜ் டவுன் பச்சையப்பா மண்டபத்தில் சுமார் 30 முக்கியப் பிரமுகர்கள் ஒன்று கூடி பொது அரங்கத்தைக் கட்ட முடிவெடுத்தனர். குறுநிலப்பகுதி மன்னர்கள், ஜமீன்கள், பாளையக்காரர்கள், பெரும்பணக்காரர்கள், வழக்குரைஞர்கள்,  நீதியரசர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வழங்கிய ரூ.16,425-இல் கட்டடம் கட்ட இடத்தை மாநகராட்சி நிர்வாகமானது வழங்கியது.

அப்போது 'பீப்பிள்ஸ் பார்க்' என்று அழைக்கப்பட்ட இடத்தில் சுமார் 3.14 ஏக்கரில் அரங்கம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மேற்கூரைப்பகுதி தேக்கு மரக்கட்டைகளால் ஆனது. அதன் மீது மங்களூரு சிகப்பு ஓடுகள் வேயப்பட்டுள்ளன.

விஜயநகர மகராஜா பெளசபதி அனந்த கஜபதிராஜு அடிக்கல் நாட்டிட, ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற கட்டடப் பணிகள் 1888 -இல் முடிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து 1889-இல் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடத்துக்கு மாநகராட்சியும் வாடகையையும் வசூலித்தது.

பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் நூற்றாண்டு ஆட்சியைக் குறிக்கும் வகையில் கட்டடத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் 1890- இல் திறக்கப்பட்டுள்ளது. ராபர்ட்சிசோல் என்பவர் கட்டடத்தைக் கட்டியுள்ளார். அப்போது மேயராக அருண்டேல் என்பவர் இருந்துள்ளார்.

தென்னிந்திய இரண்டாவது ரயில்வே நிலையமான சென்ட்ரல் நிலையத்தின் முகப்பும், அதன் வண்ணமும் விக்டோரியா அரங்கின் அமைப்புடனே அமைந்திருக்கிறது. எழும்பூர் ரயில் நிலைய முகப்பும் இந்தக் கட்டட அமைப்பையே கொண்டுள்ளது. ஆகவே, சராசெனிக் கட்டடக் கலையானது சென்னையின் பழைமையான கட்டடக்கலையாக ஆங்கிலேயரால் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

இங்கு முக்கிய கூட்டங்கள், பிரமுகர்கள் கலந்துரையாடுதல் என ஆரம்பகால நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தியடிகள், பாலகங்காதர திலகர் உள்ளிட்ட தலைவர்களும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் உரையாற்றியுள்ளனர்.

தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்டோரின் நாடகங்களும் இங்கு நடைபெற்றுள்ளன.  முதல் நாடக அரங்கம், முதல் திரைப்பட அரங்கம் என்ற பெருமைகளும் இந்த அரங்குக்கு உண்டு. 1889 -ஆம் ஆண்டு முதல் 1935 -ஆம் ஆண்டு வரையில் ராவ்பகதூர் பம்மல் சம்பந்த முதலியார் நாடகசபாவின் 33 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.  1906- ஆம் ஆண்டில் 'காதலர் கண்கள்' எனும் மாலை நேர நாடகம் இங்கு நடைபெற்றுள்ளது. சென்னையின் முதல் திரைப்படத்தை ஸ்டீவன்சன் என்பவர் குறும்படமாகத் திரையிட்டுள்ளார்.

தனியார் குத்தகை இடமான விக்டோரியா ஹாலை மாநகராட்சிக்கு மீண்டும் திரும்பப்பெற பல சட்டப்போராட்டங்களையும் சந்தித்தது. 1967 -ஆம் ஆண்டில் முதன்முதலாக அரங்கம் மறுசீரமைக்கப்பட்டது. 1985- இல் உணவு விடுதியாக இருந்த விக்டோரியா ஹால் மீண்டும் மாநகராட்சி வசமானது. அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன.

1990-ஆம் ஆண்டில் ஷெரீப்பாக இருந்த சுரேஷ் கிருஷ்ணாவின் முயற்சியை அடுத்து, அப்போதைய மகாராஷ்டிர ஆளுநர் சி.சுப்பிரமணியம் எடுத்த தீவிர நடவடிக்கையால் புனரமைப்புப் பணிகள் தொடங்கின.

2009- ஆம் ஆண்டில் மத்திய அரசின் திட்டத்தில், இந்தக் கட்டடத்தின் மேற்கூரை சீரமைப்பு நடைபெற்றது. கட்டடத்தின் பழைய கடப்பா கற்களுக்குப் பதிலாக பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்டன. 

தற்போது, சுமார் ரூ.32.62 கோடியில் மீண்டும் விக்டோரியா பொது அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அழகிய கண்ணாடிகள், மின் விளக்குகள், தரைத்தளம், மாடிப்படிகள் எனக் காண்போர் கண்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் சீரமைப்புப் பணிகள் பழமை மாறாத புதுமையாக உள்ளன.   

கட்டடத்தைச் சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. இரவிலும் வண்ணமயமாக ஒளிரும் மின்விளக்குகள், நீரூற்று, விதவிதமான தாவரங்கள், புற்கள் அமைக்கப்பட்டுள்ளன.

'சென்னையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களில் விக்டோரியா பொது அரங்கத்துக்கு தனியிடம் உண்டு. இந்த அரங்கை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் புதுப்பிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் முதல்வர் திறக்கவுள்ள அந்த அரங்கத்தின் வாயிலாக அனைவரும் சென்னையின் பாரம்பரியத்தை அறியலாம்' என்கிறார் ஜெ.குமரகுருபரன்.

படங்கள்: கிருஷ்ணராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com