அலுவலகம் சென்று வர விமானம்

வாரத்தில் ஐந்து நாள்கள் தினமும் காலை அலுவலகம் செல்ல, இரவில் வீடு திரும்ப விமானத்தைப் பயன்படுத்தும் ஒரு அதிசயப் பெண் இருக்கிறார்.
ரேச்சல் கௌர்
ரேச்சல் கௌர்
Published on
Updated on
1 min read

வாரத்தில் ஐந்து நாள்கள் தினமும் காலை அலுவலகம் செல்ல, இரவில் வீடு திரும்ப விமானத்தைப் பயன்படுத்தும் ஒரு அதிசயப் பெண் இருக்கிறார். அவர் மலேசியாவில் வாழும் இந்தியப் பெண் ரேச்சல் கௌர்.

'சூப்பர் கம்யூட்டர்' என்ற பட்டப் பெயருடைய இவர் தினமும் அலுவலகம் செல்ல வீடு திரும்ப விமானத்தைப் பயன்படுத்துகிறார். நாள்தோறும் அவர் பயணிக்கும் வான்வழி தூரம் 700 (350 +350 ) கி.மீ. ஆகும்.

மலேசியா 'ஏர் ஏசியா' நிறுவனத்தின் கோலாலம்பூர் தலைமை அலுவலகத்தில் நிதிச் செயல்பாட்டுத் துறையில் உதவி மேலாளராகப் பணிபுரியும் ரேச்சல் கௌர் கூறியது:

'எனக்கு 12 வயதில் மகனும், 11 வயதில் மகளும் இருக்கின்றனர். அவர்கள் வளர்ந்து வரும் நிலையில், நான் உடனிருக்க வேண்டியது அவசியம்.

தொடக்கத்தில் கோலாலம்பூரில் எனது அலுவலகத்துக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்தேன். வாடகை அதிகம். வாரம் ஒருமுறைதான் பினாங்கில் வசிக்கும் குழந்தைகளைப் பார்க்க முடியும்.

அதனால் கோலாலம்பூர் வீட்டை காலி செய்துவிட்டு, சென்ற ஆண்டு முதல் பினாங்கு வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கத் தொடங்கினேன். தினமும் விமானத்தில் சென்று வர முடிவு செய்தேன். அதனால் என் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்தது. அலுவலக வேலைகளை வேகமாகத் தீர்க்க முடிந்தது.

தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி, 5 மணிக்கு விமான நிலையத்துக்குச் சென்று பாதுகாப்புச் சோதனை முடிந்து ஆறு மணி விமானத்தில் ஏறுவேன். அலுவலகம் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வெகு அருகில் இருப்பதால் காலை 8 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்றுவிடுவேன். மாலை விமானம் பிடித்து இரவு 8 மணிக்கும் வீடு வந்து சேர்வேன்.

மலேசியாவில் வீட்டு வாடகை சுமார் 42ஆயிரம் ரூபாய். ஐந்து நாள்கள் விமானத்தில் போய் வரும் செலவு சுமார் 28 ஆயிரம் ரூபாய். மாதம் 14 ஆயிரம் ரூபாய் சேமிப்பாகிறது.

விமானப் பயண நேரத்தில் என்னைப் பற்றியும் எனது குடும்பம், எதிர்காலம் பற்றியும் ஆலோசனை செய்ய முடிகிறது.

அலுவலகப் பொறுப்புகளை நிறைவேற்ற மிகவும் உதவுகிறது. வேலையில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

தினமும் எனது பயணத்தைப் பற்றி பலர் ஆச்சரியப்படுவார்கள். சிலர் அதிர்ச்சியடைவார்கள். வாரத்தில் 5 நாள்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பது சோர்வாக இருக்கிறது.

ஆனால், நான் வீட்டுக்கு வந்தவுடன், என் குழந்தைகளைப் பார்த்ததும் அந்த சோர்வு எல்லாம் பறந்துவிடும். எனது குழந்தைகளுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக இந்த அசாதாரண பயணத்தைத் தொடர்கிறேன்'' என்கிறார் ரேச்சல் கௌர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com