இரண்டாம் இடத்துக்கு மரியாதை

மத்திய, மாநில அரசு விருதுகளையும், சாகித்திய அகாதெமி, ஞானபீடம் விருதுகளையும் பெற்றவர்.
இரண்டாம் இடத்துக்கு மரியாதை
Published on
Updated on
3 min read

மலையாள இலக்கிய உலகின் முதல் தலைமுறையினராக இருந்த வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், உரூபு, பொன்குன்னம் வர்க்கி போன்றவர்களுக்கு அடுத்து, இரண்டாம் தலைமுறையில் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேல் மலையாள இலக்கியத்திலும் மலையாளத் திரையுலகிலும் தவிர்க்க முடியாத மிகப் பெரும் ஆளுமையான எம்.டி. வாசுதேவன் நாயர், தனது 91-ஆம் வயதில் அண்மையில் மறைந்தார்.

எம்.டி.யின் 'அசுரவித்து', 'ரண்டாமூழம்', 'காலம்', 'நாலுகட்டு' போன்ற நாவல்களும், 'வானப்பிரஸ்தம்', 'இருட்டிண்டெ ஆத்மாவு' போன்ற பல சிறுகதைளும், 'நிர்மால்யம்' போன்ற பல திரைப்படங்களும் புகழைப் பெற்று தந்தன. மத்திய, மாநில அரசு விருதுகளையும், சாகித்திய அகாதெமி, ஞானபீடம் விருதுகளையும் பெற்றவர்.

அவருடைய பல படைப்புகளை நான் மலையாளம் கற்ற நாளிலிருந்து படித்துவந்தாலும், இரண்டாம் இடம் (ரண்டாமூழம்) 'கலாகெளமுதி' வார இதழில் தொடராக வந்தபோது, தொடர்ந்து படித்தது எனக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது.

இந்த நாவல் பற்றி 'கலாகெளமுதி' வார இதழில் விளம்பரம் வந்தபோது, நான் அந்தளவுக்கு ஈர்ப்புக் கொள்ளவில்லை. காரணம் மகாபாரதம்தானே என்பதால்தான். தொடர் ஆரம்பித்து முதல் அத்தியாயத்தைப் படித்து முடித்த பின்தான் வாராவாரம்தான் நாவல் வரும் என்பதையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அதன் உள்ளடக்கமும் அவரின் மொழியும் என்னை அந்தப் படைப்பில் மூழ்கடித்துவிட்டன.

பரபரவென்று மறுவாரம் எப்போது வரும் என்று காத்திருந்து பதினேழு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் நெய்வேலிக்குச் சென்று 'கலாகெளமுதி' இதழை வாங்கி படித்த பின்புதான் மனம் ஒரு நிலைக்கு வரும். ஓராண்டு வரையில் தொடராக வந்த நாவல் முடிந்து, நூலாகவும் வந்தது. எத்தனை முறை அந்த நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை. அதன் பின்புதான் அதை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்து, அனுமதி கேட்டு கடிதம் எழுதினேன்.

'தங்களுடைய மொழிபெயர்ப்பை நான் இதுவரையில் பார்த்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் மொழிபெயர்ப்பை நான் பார்க்க வேண்டும். அதன்பின்தான் 'ரண்டாமூழம்' நாவலுக்கு அனுமதி. அதனால், நான் எழுதி இப்போது வெளிவந்திருக்கும் 'வானப்பிரஸ்தம்' கதையை மொழியாக்கம் செய்து அனுப்புங்கள். அதன்பின் அதைப் பார்த்துவிட்டு அனுமதி தருகிறேன்' என்று கடிதத்தில் கூறிவிட்டார் எம்.டி. வாசுதேவன் நாயர்.

உடனே 'வானப்பிரஸ்தம்' கதையை மொழிபெயர்த்தேன். அந்தக் கதையை 'சுபமங்களா' இதழில் கோமல் சுவாமிநாதனும் வெளியிட்டார். அந்த இதழை அனுப்பி வைத்து மீண்டும் 'ரண்டா

மூழம்' நாவலுக்கு அனுமதி கேட்டேன். மூன்றே நாள்களில் அனுமதி கிடைத்தது. இரண்டிரண்டு அத்தியாயங்களாக மொழிபெயர்ப்பேன். அதை உடனே நெய்வேலியில் பணியாற்றிக் கொண்டிருந்த மலையாள நண்பர்களான மூழிக்குளம் சசிதரன், மலையாள எழுத்தாளர் கே. வேணுகோபாலிடம் கொடுத்து, ''மொழியாக்கத்தில் பிழை இருந்தால் திருத்துங்கள்'' என்பேன். '' ஓரிரு இடங்களில் வார்த்தைகளை மாற்றிப் போட்டால் சிறப்பாக இருக்கும்'' என்பார்கள்.

நாவல் மொழியாக்கம் முடிந்தது. அப்போது சாகித்திய அகாதெமி இந்த நூலை கிளாசிக் வரிசையில் எடுத்துகொண்டு, பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யத் துவங்கினார்கள். எம்.டி. சாகித்திய அகாதெமிக்கு அனுமதி அளிக்கும்போது, ''மற்ற மொழிக்கு யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள்.

தமிழில் நான் ஏற்கெனவே குறிஞ்சிவேலனுக்கு அனுமதி கொடுத்து அவரும் மொழியாக்கத்தைச் சிறப்பாக முடித்துவிட்டதால் அவருக்கே ஒப்பந்தம் போடுங்கள்'' என்று எழுதிவிட்டார். அவரின் அறிவுறுத்தலின்படி, 'இரண்டாம் இடம்' தமிழாக்கம் செய்யும் பணி எனக்கே கிடைத்தது. இன்று எட்டு பதிப்புகள் வெளிவந்து, தமிழகத்தின் பல வீட்டு நூலகங்களிலும் இடம்பெற்று பரந்த வாசிப்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுவிட்டது.

'இரண்டாம் இடம்' நாவல் 2000-ஆம் ஆண்டிலும் 'வானப்பிரஸ்தம்' நீண்ட கதை 2001-ஆம் ஆண்டிலும் வெளிவந்து எனக்கும் எம்.டி.க்கும் கடிதம் மூலம் பரவலான அறிமுகம் இருந்தாலும், 2005-இல் ட்டி.டி. ராமகிருஷ்ணனின் முதல் படைப்பான 'ஆல்ஃபா' நாவலை நான் தமிழாக்கம் செய்து, அது நூல் உருவம் பெற்று கோழிக்கோட்டில் வெளியிடும்போதுதான் எம்.டி. வாசுதேவன் நாயரை முதன்முதலில் நேரில் சந்தித்தேன். அவர்தான் நாவலை வெளியிட்டு வாழ்த்தினார். தம் வீட்டுக்கும் அழைக்க, அங்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அவருடன் பேசிக் கொண்டிருந்ததும் தேநீர் அருந்தியதும் இன்றும் இனிய நினைவாக என் மனதில் உள்ளது.

'மாத்ருபூமி' வார இதழ் ஆண்டுதோறும் குடியரசு தின மலர் வெளியிடும். எம்.டி.வாசுதேவன் நாயர் ஆசிரியராக இருக்கும்போது, தென்னிந்திய மொழிகள் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அப்போது தமிழின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் எம்.டி. வாசுதேவன் நாயர். அவர் எழுதிய கடிதத்தில் தமிழின் சிறுகதை வளர்ச்சியைப்பற்றி ஒரு கட்டுரையும் மூன்று சிறுகதைகளையும் மலையாளத்தில் மொழிபெயர்த்து அனுப்பச் சொல்லியிருந்தார்.

வல்லிக்கண்ணனிடமிருந்து 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' பற்றி ஒரு கட்டுரையும் சோ.தர்மன், வண்ணநிலவன், திலிப்

குமார் ஆகியோரின் சிறுகதைகளையும் பெற்று மலையாள நாவலாசிரியர் கே.வேணுகோபாலின் உதவியுடன் மொழியாக்கம் செய்து அனுப்பினேன். அப்படைப்புகள் அனைத்தும் அவ்விதழில் இடம்பெற்று சிறப்பு அடைந்ததுடன் மூலப் படைப்பாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் நல்ல சன்மானமும் கிடைத்தன.

பின்பு மஞ்சேரியில் டாக்டர் டி.எம். ரகுராமின் தமிழ் கவிதைகளின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர் பேசும்போது, ''மொழிபெயர்ப்பு என்றால் அது குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பைப் போல இருக்க வேண்டும்'' என்றார்.

2017 மார்ச் மாதத்தில் எம்.டி. வாசுதேவன் நாயருக்கு 'தேசாபிமானி' பத்திரிகையின் சார்பில் ஒரு வாரம் வரையில் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ''ரண்டாமூழம் நாவலை பிறமொழிகளுக்கு கொண்டு சென்ற பிற மொழிபெயர்ப்பாளர்கள் நான்கு பேரை அழைத்து கெளரவிக்க வேண்டும், அந்த நாவலின் மொழிபெயர்ப்பில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிரச் சொல்ல வேண்டும்'' என்று விழா குழுவினரிடம் எம்.டி. கூறினார். விழா குழுவைச் சேர்ந்தவரும் தமிழ்-மலையாளம் மொழிபெயர்ப்பாளருமான கே. எஸ். வெங்கடாசலம் என்னைத் தொடர்பு கொண்டபோது, அந்த நேரத்தில் நான் என் மகனுடன் அமெரிக்காவில் இருந்தேன்.

''என்ன செய்வீர்களோ தெரியாது. எம்.டி. சொல்லிவிட்டார்'' என்று கே.எஸ்.வெங்கடாசலம் கூற, நான் என் அமெரிக்கப் பயணத்தை முன்கூட்டியே முடித்துகொண்டு இந்தியா திரும்பி, கோழிக்கோட்டுக்குச் சென்று விழாவில் கலந்துகொண்டேன். எம்.டி.க்கு மிகுந்த மகிழ்ச்சி.

2018-இல் குடும்பத்துடன் வயநாடு சென்றிருந்தேன். போகும்போது மைசூரு வழியாகச் சென்றாலும் திரும்பும்போது கோழிக்கோடு சென்று எம்.டி.யை சந்திக்க வேண்டும் என்று என் மகளும் பேர்த்தியும் சொன்னதும், எம்.டி., நேரம் ஒதுக்கினார். எங்கள் குடும்பத்தினருடன் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்ததுடன் தம்முடைய 'அசுரவித்து' நாவலின் புதிய பதிப்பின் பிரதி ஒன்றை எனக்குத் தந்து விடைகொடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com