
சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு பிரதமரின் ஆட்சியிலும் (சில விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை) மிகப் பெரிய மாற்றத்துக்கான பங்களிப்பு இருந்திருக்கிறது. அந்தப் பங்களிப்பு காரணமாக இந்தியப் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் மாற்றம் கண்டிருக்கின்றன. அவற்றைப் பட்டியலிட்டால் பிரமிப்பு மேலிடுகிறது.
1947-இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையில் அமைந்த முதலாவது இடைக்கால, அனைத்துக் கட்சி அரசில்தான் இந்தியா தனக்கென அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தி குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. பிரிவினை காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொண்டதும், மதக் கலவரங்களால் பிளவுபட்டுக் கிடந்த தேசத்தின் அமைதியை மீட்டெடுத்ததும் அந்த ஆட்சியின் சாதனைகள்.
1952-இல் மக்களாட்சி முறை இந்தியாவில் நிறுவப்பட்டு, ஜவாஹர்லால் நேருவின் தலைமையில், காங்கிரஸ் கட்சி முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. 1952 முதல், பண்டித ஜவாஹர்லால் நேரு 1964-இல் மறைந்தது வரையிலான ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் பல பொதுத் துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அணைகள் கட்டப்பட்டன. திட்டக் கமிஷன் நிறுவப்பட்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டன.
இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி, நீர்ப்பாசனத் திட்டங்கள், வெளிவிவகாரத் கொள்கை என்று அனைத்து அடிப்படைக் கட்டுமானங்களையும் உருவாக்கிய பெருமை பிரதமர் நேருவின் ஆட்சிக்காலப் பங்களிப்புகள். நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும், புதிதாக உருவான தேசம் பிளவுபடாமல் ஒற்றுமையாகத் தொடர்வதற்கும் பண்டித நேருவின் ஆட்சிக்காலம்தான் காரணம்.
18 மாதங்கள் மட்டுமே பிரதமராகப் பதவியில் இருந்தாலும், சுதந்திர இந்திய வரலாற்றில் அழிக்கவொண்ணா இடத்தைப் பெற்றார் லால் பகதூர் சாஸ்திரி, பண்டித ஜவாஹர்லால் நேருவின் காலத்தில் நடந்த சீன ஆக்கிரமிப்பால் படுதோல்வி அடைந்த இந்திய ராணுவத்தையும், நாம் எதிர்கொண்ட அவமானத்தையும் துடைத்தெறிந்தது அவரது ஆட்சி. பாகிஸ்தான் படையெடுப்பை முறியடித்தது மட்டுமல்ல, படுதோல்வி அடையச் செய்து சரணடைய வைத்தபோது, இந்திய ராணுவம் தனது கெüரவத்தை மீட்டது.
'ஜெய் ஜவான், ஜெய் கிஸôன்' என்கிற கோஷத்தை முன்வைத்து, விவசாயிகளின் முக்கியத்துவத்தை உயர்த்தியதும் அவரது ஆட்சிதான்.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் 15 ஆண்டுகால ஆட்சியில் (1966-77, 1980-84) பல சாதனைகளும், ஒரு சில வேதனைகளும் இணைந்தே இருந்தன. 'பசுமைப் புரட்சி' மூலம் இந்தியாவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படச் செய்ததும், வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானிய ஒழிப்பு, 18-அம்சத் திட்டம் மூலம் அடித்தட்டு மக்களின் மேம்பாடு என்று அவரது ஆட்சியில் பல சாதனைகளைப் பட்டியலிட முடியும். இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலமும் அவரது ஆட்சிக்காலத்தில்தான் நிகழ்ந்தது.
முதல்முதலாகப் பெண்மணி ஒருவர் பிரதமரான சாதனையும் அவருடையதுதான். ஆட்சியில் இருந்த பிரதமர் படுதோல்வியைச் சந்தித்த நிகழ்வும் அவருடையதுதான். வங்கதேச விடுதலைக்கு வித்திட்டு, பாகிஸ்தானின் பிளவுக்கு வழிகோலினார் என்கிற பெருமைக்குரியவரும் அவர்தான். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்த அவலத்துக்குக் காரணமானவரும் அவர்தான்.
அவசரநிலைச் சட்டம் திரும்பப் பெறப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு 1977 பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி எதிர்பார்த்ததற்கு முரணாக, பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ஜனதா கட்சி உருவானது. 'லோக் நாயக்' ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஆசியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஜனதா கட்சி மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது.
மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த ஜனதா கட்சி அரசு ஆரம்பம் முதலே 'யார் பிரதமர்?' என்கிற கெüரவப் பிரச்னையில் சிக்கிக் கொண்டது. சரண் சிங், பாபு ஜகஜீவன் ராம் இருவரையும் சமாளித்து ஜனதா கட்சியை வழிநடத்த முடியாமல் திணறத் தொடங்கினார் பிரதமர் மொரார்ஜி தேசாய். 2 ஆண்டுகள் 126 நாள்கள் பதவியில் இருந்த மொரார்ஜி தேசாய், முந்தைய இந்திரா அரசின் ஜனநாயக விரோத சட்டங்களையும், செயல்பாடுகளையும் திருத்தி அமைத்ததிலேயே தனது நேரத்தை செலவழித்துவிட்டது எனலாம். நேர்மறையான நிர்வாகத்தையும் ஜனநாயக நடைமுறையையும் கடைப்பிடித்தார் என்பதுதான் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்துச் சொல்லக்கூடிய கருத்து.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் 23 நாள்கள் மட்டுமே பதவி வகித்து, ஒரு முறைகூட நாடாளுமன்றத்தை சந்திக்காமலேயே பதவி விலகிய ஒரே பிரதமர் சரண் சிங்தான். தனக்கும், தனது மகன் சஞ்சய் காந்திக்கும் எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற இந்திரா காந்தியின் வற்புறுத்தலுக்கு இணங்காததால், சரண் சிங் அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றது காங்கிரஸ். அது குறித்து அவர் கவலைப்படாமல் பதவி விலகிப் பொதுத் தேர்தலுக்கு வழிகோலினார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த ஐந்தாண்டு காலத்தில்தான், இந்தியா தகவல் தொலைத்தொடர்பு, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்துத் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியது. நாம் இன்று சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத்திலும், கணினித் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்திருப்பதற்குக் காரணம் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் காட்டப்பட்ட முனைப்பும், அதற்காகப் போடப்பட்ட அடித்தளமும்தான்.
போஃபர்ஸ் பேர ஊழல், ஷா பானோ வழக்கின் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யக் கொண்டுவரப்பட்ட முஸ்லிம் பாதுகாப்புச் சட்டம், அயோத்தியில் கரசேவை நடத்த அனுமதி, இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது உள்ளிட்ட பல விமர்சனத்துக்குரிய முடிவுகளால், ராஜீவ் காந்தி ஆட்சியின் நல்ல பல திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன அல்லது கவனம் பெறாமல் போய்விட்டன.
11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் ஆட்சியில்தான், மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்கிற அந்த முடிவு, மிகப் பெரிய போராட்டத்துக்கு வழிகோலியது. போதாக்குறைக்கு, அயோத்தியில் ராமர் கோயில் என்கிற பிரச்னையை முன்வைத்து பாஜக தலைவர் எல்.கே.அத்வானி தொடங்கிய ரத யாத்திரை நாடு தழுவிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மண்டல் கமிஷன் முடிவுக்கு எதிரான போராட்டமும், ரத யாத்திரையின் எதிர்வினையாக எழுந்த மதக்கலவரச் சூழலும் நாடு தழுவிய அளவில் பதற்றச் சூழலை உருவாக்கியது. துணைப் பிரதமர் செüத்ரி தேவிலாலின் பதவி விலகலைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் ஆட்சி கவிழ்ந்தது. சொல்லிக் கொள்ளும்படியான எந்த சாதனைகளையும் செய்யாவிட்டாலும், மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றுவதாகச் செய்த அறிவிப்பின் காரணமாகப் பேசப்படும் ஆட்சியாக வி.பி.சிங்கின் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி வரலாற்றில் இடம்பெறுகிறது.
வி.பி.சிங் 11 மாதங்கள் பதவியில் இருந்தார் என்றால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைந்த பிரதமர் சந்திரசேகரின் ஆட்சி 7 மாதம் 11 நாள்கள்தான் பதவி வகித்தது. வி.பி.சிங் ஆட்சியால் ஏற்பட்டிருந்த பதற்றச் சூழல் தணிவதற்கு, பிரதமர் சந்திரசேகரின் அணுகுமுறை காரணமாக அமைந்தது. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையால், குறித்த நேரத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தக்கூட முடியாத நிலையில் இந்தியா திவாலாகும் கட்டத்தில் இருந்தபோது பிரதமரானார் சந்திரசேகர். தங்கக் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு அரசின் கைவசமிருந்த தங்கத்தை அடமானம் வைத்து, இக்கட்டான சூழலை எதிர்கொண்டது அந்த அரசு.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறு எந்த சாதனையும் இல்லாமல், பிரதமர் சந்திரசேகரின் பதவி விலகலைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில் அமைந்த சிறுபான்மை அரசு, தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தது என்பதே மிகப் பெரிய சாதனைதான். பொருளாதார தாராளமயக் கொள்கையை அறிவித்து, இந்தியாவை உலகமயச் சூழலுக்கு இட்டுச் சென்ற வரலாற்று சாதனை பி.வி.நரசிம்ம ராவ் அரசையே சாரும். இன்று இந்தியா அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டதுடன், அந்தப் பாதையில் இட்டுச் சென்ற பெருமையே அந்த ஆட்சியின் சாதனை.
பாபர் மசூதி இடிப்பு, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சியின் அரசியல் தோல்வியைவிட, அந்த ஆட்சியின் பொருளாதார சாதனைகள்தான் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெறும்.
தேவே கெüடாவின் 10 மாத ஆட்சியும் சரி, ஐ.கே.குஜ்ராலின் 11 மாத ஆட்சியும் சரி, பதவியில் இருந்தன என்பதைத் தவிர, சாதனை என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. 'நித்திய கண்டம், பூரண ஆயுசு' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந்த இரண்டு ஆட்சிகளும் வரலாறு படைக்கும் அளவிலான எந்தவித பங்களிப்பும் நல்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதலாவது சாதனை, காங்கிரஸ் கட்சி அல்லாத, அந்தக் கட்சியின் ஆதரவு பெறாத கூட்டணி தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமை செய்தது என்பது பாஜக தலைமையில் அமைந்த முதலாவது அரசு என்பதுடன், வெற்றிகரமாகக் கூட்டணியை அமைத்து நிலையான ஆட்சியைத் தர முடிந்தது பிரதமர் வாஜ்பாயின் மிகப் பெரிய சாதனை.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அறிவித்து, அதை நிரூபிப்பதுபோல பொக்ரானில் சோதனையும் நடத்திக் காட்டியபோது, வாஜ்பாய் அரசு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. தகவல் தொலைத்தொடர்பில் சாதனை படைத்ததுடன், கிராமங்கள்வரை கைப்பேசிப் பயன்பாட்டைக் கொண்டு சென்ற பெருமையும் அந்த ஆட்சிக்கு உண்டு. நரசிம்ம ராவ் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்ற பெருமையும் அந்த ஆட்சிக்கு உண்டு.
வாஜ்பாய் ஆட்சியின் சாதனையாக சாமானிய இந்தியன்வரை தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தைக் கொண்டாடுகிறார்கள். கார்கில் போரில், இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை விரட்டி அடித்ததையும் வாஜ்பாய் அரசின் சாதனையாக வரலாறு பதிவு செய்யும்.
முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தனது தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது, அமைந்தது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு. தகவல் பெறும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திய சாதனை மன்மோகன் சிங் அரசுக்கு உண்டு.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை அகற்றியது மன்மோகன் சிங் அரசின் சாதனை என்றால், 2ஜி, நிலக்கரி என்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது அந்த ஆட்சியின் தீராத களங்கங்கள். இந்திரா காந்திக்குப் பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் என்பது மன்மோகன் சிங்கின் அப்போதைய சாதனை.
மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராகி இருக்கும் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசும் பல வரலாற்று சாதனைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. வாஜ்பாய் அரசின் சாதனை நெடுஞ்சாலைகள் என்றால், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் துறைமுகங்கள், ரயில்வே துறை, விமான சேவை ஆகியவற்றின் அபார வளர்ச்சி, சர்வதேசத் தரத்திலான போக்குவரத்துக் கட்டமைப்புக்கு வழிகோலும் நரேந்திர மோடி அரசின் முனைப்பு உள்ளிட்டவை அவரது சாதனைகளில் தலையாயவை எனலாம்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு (ஜன் தன்), எல்லோருக்கும் அடையாள அட்டை (ஆதார்), சாமானியனுக்கும் எண்மப் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட முயற்சிகள் காரணமாக ஏற்பட்டிருக்கும் மாற்றம் அளப்பரியது. கனவாக இருந்த நேரடி மானியம் இப்போது இணையக் கட்டமைப்பு காரணமாக சாத்தியமாகி இருக்கிறது. 'ஒரே நாடு, ஒரே வரி' (ஜிஎஸ்டி) என்கிற தொலைநோக்குப் பார்வை, நிதிநிர்வாகத்தில் நேர்மையையும் ஒழுங்கையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பண்டித ஜவாஹர்லால் நேருவின் மறைவைத் தொடர்ந்தும், லால் பகதூர் சாஸ்திரியின் அகால மரணத்தைத் தொடர்ந்தும் இரண்டு முறை 13 நாள்கள் இடைக்காலப் பிரதமராக குல்சாரிலால் நந்தா இருந்திருக்கிறார்.
இதுவரையில் 18 மக்களவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசும், ஒவ்வொரு பிரதமரும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். அதை நினைவுகூர வேண்டியது தருணம் இது.
இன்று 76-ஆவது குடியரசு தினம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.