கம்பன்தான் எனது அடையாளம்

'அரசியல் அடையாளத்தைக் காட்டிலும் தமிழ் தந்த அடையாளம்தான் என்னை புகழுக்கு உயர்த்தியது' என்பவர் புதுச்சேரி கம்பன் கழகத்தின் செயலராக இருந்து வரும் வி.பி.சிவக்கொழுந்து.
கம்பன்தான் எனது அடையாளம்
Published on
Updated on
2 min read

தமிழானவன்

'அரசியல் அடையாளத்தைக் காட்டிலும் தமிழ் தந்த அடையாளம்தான் என்னை புகழுக்கு உயர்த்தியது' என்பவர் புதுச்சேரி கம்பன் கழகத்தின் செயலராக இருந்து வரும் வி.பி.சிவக்கொழுந்து. இவர் புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தவர்.

இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, துபை, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று வரும் இவர், அயல்நாடுகளிலும் தமிழ் வளர்க்கும் தமிழ்த் தொண்டர்.

அவருடன் ஓர் சந்திப்பு:

தமிழ் மீதான ஆர்வம் வந்தது எப்படி?

வறுமையால், பள்ளிப் படிப்பை எட்டாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியவில்லை. முதலில் நவதானியக் கடையை நடத்தினேன். போதிய வளர்ச்சியில்லை. அரிசி கடையைத் தொடங்கினேன். கடையில் சிறுநீர் கழிக்கக் கூட வசதியில்லை. அதனால் புதுச்சேரி கம்பன் கழகம் எதிரேயுள்ள அண்ணா திடல் காலி மைதானத்தில் இந்த வசதியைப் பயன்படுத்தினேன்.

அங்கு நிற்கும்போது, ஒலிபெருக்கியில் அந்த நல்ல சொற்கள் என் காதில் வந்து விழும். அரிசி வியாபாரியாக இருக்கும்போதே சிறு உதவிகளை மக்களுக்குச் செய்வேன். சிறு ஹோட்டல், நில வணிகம் என்று தொழிலிலும் வளர்ச்சி ஏற்பட்டது. அதனால் கம்பன் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகளுக்கு அப்போதே பல்வேறு உதவிகளைச் செய்யத் தொடங்கினேன்.

இதுபோன்ற கூட்டங்களுக்கு அழைக்க, அதுவே என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது. தமிழ் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு இதுதான் அடிப்படை.

கம்பர் தங்களை ஈர்த்தது எப்படி?

'பதவி முக்கியமல்ல. எல்லோருடனும் நட்பாக வாழ வேண்டும். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஒழுக்கம் முக்கியம். தாய், தந்தையர், குருவை மதிக்க வேண்டும், வாழ்க்கையில் நேர்மை..' என்று உயர்ந்த பண்புகளைச் சொல்லிக் கொடுக்கும் மகா இலக்கியம் கம்பராமாயணம். அறத்தின் வாயிலாக மக்களிடம் வாழும் நூல்.

'உலக பொதுமறை' என்று சொல்லப்படும் திருக்குறளைப் படித்துப் படித்து கேட்டுக் கேட்டு நல்நெறியில் வாழலாம். அதில் இல்லாத நல்ல கருத்துகளே இல்லை எனலாம். அதனால் திருவள்ளுவரும் என்னை ஈர்த்துவிட்டார். புதுச்சேரியில் திருக்குறள் மன்றத்துக்கும் உதவிகளைச் செய்து வருகிறேன்.

தமிழ் வளர்ப்பதில் புரவலர்களின் பங்களிப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிரீர்கள்?

தாவரத்துக்குத் தொடர்ந்து நீர் ஊற்றினால்தான் வளமாக வளரும். இலக்கியத்துக்கு உதவி செய்யாவிட்டால் புகழ் வெளியே வராது. கம்பனைத் தொட்டவர்கள் எல்லாம் புகழோடு வாழுகின்றனர்.

காரைக்குடி கம்பன் கழகத் தலைவராக இருந்த சா.கணேசன் உள்ளிட்டோரை அடியொற்றியே எங்களின் தமிழ்ப் பணி அமைந்துள்ளது. இலக்கியத்தால்தான் புரவலர்களுக்குப் புகழ் கிடைக்கும். யார் ஒருவர் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வளர்கிறார்களோ அவர்களின் வாழ்க்கை புனிதப்படும்.

அரசியல்வாதியாக இருந்து இலக்கியவாதியாக மாறி இருக்கிறீர்கள்? இந்த மாற்றம் குறித்து ஏதாவது சொல்லுங்கள்?

இன்றைக்கு வியாபாரம், அரசியல் என்று எத்தனையோ வளர்ச்சி வந்தாலும் என்னைச் செதுக்கியது, சிற்பமாக்கியது இலக்கியம்தான். எத்தனையோ பதவி வந்துபோகும். என் மூச்சு இலக்கியம்தான். கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் இருந்தார். அவர் எந்தக் காலத்திலும் நினைவு கூறப்படுகிறார். அதுபோன்றுதான் தற்போதும் புரவலர்கள் தேவைப்படுகிறார்கள்.

தமிழ்ப் பணியில் தங்களின் எதிர்க்காலத் திட்டம் என்ன?

மனிதர்கள் குறுகிய மனப்பான்மையோடு வாழ்கின்றனர். 'நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமானது என்பதுதான்' அந்த மனநிலை. அதை மாற்ற மக்களிடம் நல்ல கருத்துகளை விதைக்கும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு இடங்களிலும் கம்பன் கழகங்களைத் தொடங்கப் போகிறோம்.

கம்பன் கழகங்களில் பேச்சாளர்களுக்கு சன்மானம், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்கிறோம். இலக்கிய அமைப்புகளுக்கு உதவி செய்கிறோம். இதுபோன்ற நடவடிக்கையால்தான் புதுச்சேரி கம்பன் கழகம் நடத்தும் மூன்று நாள் விழாவில் அரங்கம் நிரம்பி வழிகிறது. மேலும், எதோ ஒரு வகையில் நல்ல கருத்து மக்களிடம் போய்ச் சேருகிறது. இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

தமிழ் மீதான ஆர்வத்தில் தங்களைக் கவர்ந்த நாடு எது? ஏன்?

இலங்கைதான். கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் தமிழ் விழாக்களில் நான் தொடர்ந்து பங்கேற்கிறேன். அங்கு வாழும் மக்கள் மொழி, மண், உறவுகளுக்கு என்று தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்கின்றனர்.

அயல்நாடுகளுக்குக் குடிபெயர்ந்தாலும் தமிழர்கள் என்ற தங்களின் அடையாளத்தை விடமாட்டார்கள். தங்களின் மூதாதையர் சேர்த்து வைத்த வீடு, இடம் போன்றவற்றை அயல்நாடுகளுக்குச் சென்று அங்கேயே வாழ்ந்தாலும் அதை விற்பதில்லை. அதை ஒரு கோயில்போலதான் பாதுகாத்து வருகின்றனர்.

உங்களை ஏன் உலகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் அழைக்கின்றன?

அன்பும் பண்பும்தான் காரணம். சுவிட்சர்லாந்துக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தபோது, ஒரு தமிழர் வீட்டில் தங்கியிருந்தேன்.

ஊருக்குத் திரும்பும் நாள் அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டின் பெண்மணி விஜி என் காலைத் தொடும் உணர்வு ஏற்பட்டது.

விழித்து கேட்டபோது, 'அண்ணா இன்று நீங்கள் ஊருக்குச் சென்றுவிடுவீர்கள். நான் வேலைக்குச் சென்றுவிடுவேன். நீங்கள் கிளம்பும்போது நான் வீட்டில் இருக்க மாட்டேன். காலை சிற்றுண்டி தயார் செய்து வைத்திருக்கிறேன்.

சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்' என்று கூறினார். அதுபோன்று அயல்நாடுகளில் வாழும் பல தங்கைகள், சகோதரிகள் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com