விடாமுயற்சி...

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 26 முறை எழுதியும் தேர்ச்சி பெறாதவர் நீல் தேசாய், கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதோடு, குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள தலோத் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
விடாமுயற்சி...
Published on
Updated on
1 min read

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 26 முறை எழுதியும் தேர்ச்சி பெறாதவர் நீல் தேசாய், கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதோடு, குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள தலோத் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் கூறியது:

'நான் 1989 இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 'பொறியாளராக வேண்டும்' என்ற லட்சியத்துடன் அறிவியல் பாடத்தை பிளஸ் 2வில் தேர்ந்தெடுத்தேன். 1991இல் பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வியடைந்தேன். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தோல்வியடைந்தேன்.

'எனது எதிர்காலம் இருண்டு போகுமோ?' என்று பயந்தேன். பத்தாம் வகுப்பு தேர்ச்சியின் அடிப்படையில் மின் பொறியியல் டிப்ளமோ சேர்ந்து, 1996-இல் தேர்ச்சி பெற்றேன். மின் சாதனங்கள் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டாலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினேன். ஆனால் தொடர் தோல்வியைத் தழுவினேன்.

2005இல் டிப்ளமோ தேர்வானவர்கள், பட்டப் படிப்புகளைத் தொடரும் வகையில் குஜராத் அரசு கல்வி விதிகளை மாற்றியது. 'அரிய வாய்ப்பை விட்டுவிடக் கூடாது' என்று முடிவு செய்து, வேதியியலில் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றேன். பின்னர், முனைவர் பட்டமும் பெற்றேன். இருந்தாலும், பிளஸ் 2 எட்டாக கனியாகவே தள்ளிப் போனது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, படிப்புகளைத் தொடருவதுடன் சமூகச் சேவையையும் செய்து வருகிறேன். கிராமப்புறத்தில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டுள்ளேன். 'பசுமை' என்ற அமைப்பை உருவாக்கி ஏழு 'மியாவாகி' வனப் பகுதிகளை உருவாக்கியுள்ளேன். 'வங்கம்' என்ற பக்கத்து கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான கிணற்றைப் புதுப்பித்தேன். இருபது பாழடைந்த கிணறுகளை மீட்டெடுக்கவும், மழைநீர் சேகரிப்பு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.

அதனால்தான் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, பதிவான 5,300 வாக்குகளில், 80 சதவீதம் வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

86 வயது தந்தை, 79 வயது தாயாரைப் பராமரிக்க நான் கிராமத்தில் தங்கினேன். அது என்னை மக்களுடன் நெருக்கமாக வைத்திருந்தது. எனது கிராமத்தை 'ஒரு மாதிரி கிராமமாக' உருவாக்க இருக்கிறேன். 27ஆவது முயற்சியாக, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளேன். தேர்ச்சி பெற்று 'விடாமுயற்சி பலன் தரும்' என்று கிராம மக்களை நம்பவைப்பேன்' என்கிறார் நீல் தேசாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com