எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் பல வகையிலும் ஒற்றுமை உண்டு. எனக்கு காபி, டீ எதுவும் பிடிக்காது. எம்.ஜி.ஆருக்கும் அப்படித்தான். எம்.ஜி.ஆருக்கு ராசியான எண் 7. எனக்கும் ராசியான எண் 7 தான். எங்களது கார் எண்கள் கூட 7-இல் தான் வரும். எனது நட்பு எம்.ஜி.ஆரிடம் மட்டுமின்றி, அவரது குடும்பத்திலும் இருந்தது.
எனது பிறந்த நாளுக்கு எப்போதுமே முதல் வாழ்த்து எம்.ஜி.ஆருடையதுதான். நேரில் அதிகாலையிலேயே வந்து வாழ்த்துத் தெரிவிப்பார். என் தாயார் சத்யநாராயணா பூஜை செய்வார். அதில் அவர் கலந்து கொள்வார். சாவித்திரி, ஜெமினி ஆகியோரும் நேரில் வருவார்கள். ஆயிரம் பேர்களாவது வாழ்த்தி விட்டு செல்வார்கள். அனைவருக்கும் உணவு தயார் செய்து கொடுப்பது என் வழக்கம்.
பத்மினியின் கணவர் ராமச்சந்திரனும் என்னுடைய கணவர் ஹர்ஷாவும் நல்ல நண்பர்கள். பத்மினியும் நானும் ' தேனும் பாலும்' படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பின் இடையில் பத்மினியின் கணவருக்கு அமெரிக்காவில் 'ஹார்ட் அட்டாக்' என்ற செய்தி வந்தது. ஹார்ட் அட்டாக்கிற்கு பிறகு ' நீ அமெரிக்காவுக்கே வந்துவிடு'' என்று அவர் கணவர் யோசனை சொல்லியிருக்கிறார் போலும்.... பத்மினிக்கு இங்கிருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போவதில் சிரமமிருந்தது. அவராக முடிவெடுக்க முடியவில்லை.
அவர் சிவாஜியை யோசனை கேட்டார். அவரோ என்னைக் கைகாட்டி விட்டார். பத்மினி என்னிடம் கேட்டார். நான் வயதில் சிறியவள் திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. ஆனாலும் பத்மினியைப் பார்த்து '' உங்களுக்கு இப்போது வயது என்ன?'' என்று கேட்டேன். '' நாற்பது'' என்றார். '' வயது ஏற ஏற சினிமாவில் வாய்ப்புகள் குறையும். கிளாமர் போய் விடும். வயதான பிறகு சான்ஸþம் குறையும். கதாநாயகி வேடங்கள் கிடைக்காது. கதாநாயகியையோ கதாநாயகனையோ சார்ந்த வேடங்கள்தான் தருவார்கள். அதனால் நீங்கள் இப்போதே நடிப்பதை விட்டு விட்டு அமெரிக்கா சென்று கணவரை கவனியுங்கள்'' என்றேன்.
அமெரிக்கா சென்ற பத்மினி அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். எனக்குச் சரியான நேரத்தில் சரியான முடிவைச் சொன்னாய். என் கணவரும் இப்போது நன்றாக இருக்கிறார்.'' என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
மார்ச் 1, 1967 அன்று எனது திருமணம் நடைபெற்றது. பெங்களூரு உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற திருமணத்திற்கு அப்படியொரு மக்கள் கூட்டம். சென்னையில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற்ற ரிசப்ஷனிலும் அப்படித்தான். ஏகப்பட்ட கூட்டம். திரையுலகமும் திரண்டு வந்திருந்தது.
பெங்களூரில் நடைபெற்ற திருமணத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியும் அவர் கணவர் சதாசிவமும் கலந்து கொண்டார்கள். எம்.எஸ். அம்மா கலந்து கொண்டது மட்டுமில்லாமல் அவர்களது கச்சேரி அன்றைக்கு இருந்தது. அவர்கள் எனது திருமணத்தில் வந்து பாடியதைப் பெரும் பேறாக நினைக்கிறேன்.
வாரத்தில் ஐந்து நாள்கள் - திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடிப்பேன். சனி மற்றும் ஞாயிறுகளில் பெங்களூரு வந்து விடுவேன். அந்த இரண்டு நாள்களும் ஸ்ரீஹர்ஷாவுக்கு மட்டும் என்று வைத்திருந்தேன். சில சமயங்களில் ஸ்ரீஹர்ஷா சென்னை வந்து விடுவார். இப்படி ஒரு ஏற்பாட்டில் நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். இதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. சுமுகமாகவே இருந்தது.
எனக்கு இந்திராகாந்தி மீது மிகுந்த அபிமானம் உண்டு. அதை எம்.ஜி.ஆரும் அறிவார். அதனாலேயே புவனேஸ்வரியின் (வளர்ப்பு) மகளுக்கு இந்திரா என்று பெயர் வைத்து இருக்கிறேன். மகனுக்கு கவுதம் ராமச்சந்திரன் என்று பெயரிட்டு உள்ளேன்.
என் திருமணத்தின்போது நேரில் வந்து வாழ்த்திய திலீப்குமார், என் கணவரிடம் '' உங்கள் மனைவி நடிப்பதை நிறுத்தி விடாதீர்கள். அவர் மிகவும் திறமைசாலி. அவர் சினிமாவில் தொடர்ந்து இயங்க வேண்டும்'' என கேட்டுக் கொண்டார். என் கணவரின் மரணத்தின்போதும் எனக்கு ஆறுதல் கூறி தேற்றியவர் திலீப்குமார். 'பைகாம்' படத்துக்குப் பின் நான் அவரோடு சேர்ந்து நடிக்காவிட்டாலும் நட்புக்கு மரியாதை தந்தவர் திலீப்.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அம்மா இறந்தபோது ஜெயலலிதாவை சந்தித்து ஆறுதல் சொன்னேன். அது அவரது மனதை லேசாக்கியது. ''என் அக்கா உடனிருந்து ஆறுதல் சொன்னது போல் உணர்கிறேன்.'' என்றார்.
என் கணவர் இறந்த போது அவர் எனக்கு ஆறுதல் கூறி தைரியமூட்டினார்.
1996-ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தோற்றபோது நான் இந்திராகாந்தி தோற்ற உதாரணம் கூறி, ஆறுதல் சொன்னேன்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஏழ்மையானவர்கள் நிறைந்த பகுதியில் கல்லூரி ஒன்று அமைந்தால் நல்லது என்று கோரிக்கை வைத்தேன். அதனை உடனே நிறைவேற்றினார். அதன்படி கல்லூரி தொடங்கி அங்கு என்னை அழைத்து நன்றி கூறினார்.
நான் மலையாள மொழியில் மட்டும் நடிக்கவில்லை. அப்படி வந்த வாய்ப்புகளைத் தவிர்த்தேன். காரணம் எந்த வேடமானாலும் முழுக்க மூடி நடித்துப் பழகிய எனக்கு, மலையாள கலாசாரப்படி உடையணிந்து நடிக்க கேட்டதை என்னால் ஏற்க இயவில்லை. அப்படி நடிப்பது தவறில்லை என்றாலும் அந்த சமயம் ஏதோ என் மனம் இசையவில்லை.
தெலுங்கில் என்.டி.ராமராவ் என்னை அறிமுகம் செய்தார். 'பாண்டுரங்க மகாத்மியம்' படப்பிடிப்பில் என்.டி.ஆர். எனக்கு அறிமுகமானார். அதன் பின் என்.டி.ஆரின் சொந்தப் படம் உள்ளிட்ட பல படங்களில் நான் நடித்தேன். என்.டி.ஆர் என்னை எப்போதும் 'சரோஜா காரு' என்பார். என்னை மட்டுமல்ல வயது வித்தியாசம் பாராமல் எல்லோரையும் அவர் அப்படித்தான் அழைப்பார்.
சிவாஜியுடன் முதல் என்பதாக ' பாகப் பிரிவினை'யைத்தான் சொல்ல வேண்டும். அந்தப் படத்தில் நான் நடித்தபோது ஒரு சம்பவம். ஒரு நாள் கொஞ்சம் சோகத்துடன் நின்றிருந்தேன். என் முகத்தைப் பார்த்த சிவாஜி '' என்ன சரோஜா, சோகத்துடன் இருக்கிறாய்?'' என்று கேட்டார். ''இல்லை, அடுத்த காட்சியில் நான் பிரசவ சீனில் நடிக்க வேண்டும். நான் சின்னப் பொண்ணு. இன்னமும் கல்யாணமே ஆகாதவள், எனக்கு எப்படி பிரசவம் பற்றி தெரியும்? அதுதான் யோசனை'' என்றேன்.
மறுகணமே '' அட... இதுக்குப் போயா குழம்பறே?'' என்றபடியே அந்த இடத்திலேயே படுத்து விட்டார் சிவாஜி. கவனியுங்கள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தது ஒரு மரத்தடி. அங்கே கீழே சிறு குறு குச்சிகளும் மரத்துண்டுகளும் கிடந்தன. ஒரே புழுதி வேறு. எதைப் பற்றியும் கவலைப்படாத சிவாஜிஅங்கு படுத்து ஒரு பெண் பிரசவத்தின்போது எப்படியெல்லாம் துடிப்பாள் என்பதை நடித்துக் காட்டினார்.
ஸ்ரீ ஹர்ஷா இறந்து நான்கு வருடங்கள் வரை சிவாஜி என்னைப் பார்க்கவே இல்லை. ''நெத்தியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. இப்படிப்பட்ட சரோஜாவை பார்க்க விரும்பவில்லை'' என தன் மனைவி கமலாம்மாளிடம் சொல்லியிருக்கிறார் சிவாஜி.
எனக்கு ஜெமினியுடன் மட்டுமல்ல. அவர் குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கணவர் ஸ்ரீ ஹர்ஷா இறந்த செய்தி கேட்டதுமே ஜெமினி வந்து விட்டார். என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென்று அழுது விட்டார். ' ஆடிப்பெருக்கு' படத்தில் இதே மாதிரி ரோல்தான். திருமணம் ஆன சில நாள்களிலேயே புருஷன் செத்துப் போயிருவாரு. நான் விதவை ஆயிருவேன். ' ஆடிப்பெருக்கு' மாதிரியே ஆயிருச்சே' என்று அழுதார் ஜெமினி.
பி.சுசீலா எனக்கு நெருங்கிய தோழி. எனது படப்பிடிப்பு ஏதாவது ஒரு தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்றால் ஸ்டூடியோவின் இன்னொரு பகுதியில் பாடல்களின் பதிவு நடந்து கொண்டிருக்கும். அங்கு பி.சுசீலா பாடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் ஆஜராகி விடுவேன். நான் இருக்கிறேன் என்றால் அவர் வந்து விடுவார். நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்.
என் சமகால பெஸ்ட் டைரக்டர் ஸ்ரீதர். அவருடைய டைரக்ஷன் மட்டுமல்லாது அவர் எழுதும் வசனங்களும் பிடிக்கும். பேசுவதற்கு சுலபமாக இருப்பதே காரணம்.
'ஓடி விளையாடு பாப்பா', 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', 'மணப்பந்தல்', 'ஆலயமணி', 'பாசமும் நேசமும்' மற்றும் 'குல விளக்கு' என, எஸ்.எஸ்.ஆருடன் நான் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள். எனக்கு எஸ்.எஸ்.ஆரிடம் வியக்கும் குணம் அவரது சிரித்த முகம். துளி கூட கோபமே வராது. ஜோக் அடிச்சு சிரித்துக் கொண்டே இருப்பார்.
ஜெமினி, ஏவி.எம். வாகினி உள்ளிட்ட நிறுவனங்களில் பல படங்கள் நடித்திருந்தாலும், 100 படங்களுக்கு மேல் தயாரித்த மார்டர்ன் தியேட்டர்ஸ் நிறுவன படங்களில் நடித்ததில்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடிக்க அழைப்பு வந்தும் அதை ஏற்க முடியவில்லை. அவர்கள் தயாரிப்பில் மூன்று படங்களில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு படத்தில் நடிக்க மொத்தமாக தேதி கொடுத்து விட வேண்டும். இப்படி நிபந்தனைகள நிறைய இருந்ததால், மற்ற படங்களை தியாகம் செய்ய முடியாமல் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களைத் தவிர்த்தேன்'' என்றார்.
2002-இல் நாகேஸ்வரராவ் என்னை அழைத்து ஹைதராபாத்தில் அவரது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 'நாகேஸ்வரராவ் விருது' கொடுத்தார். வாழ்த்தி பேசும் போது ''நடிக்கும்போது, கேமிரா இயங்குவதற்கு முன் சரோஜாதேவி அமைதியாக இருப்பார். நடிக்க ஆரம்பித்தால் நம்மை தூக்கி சாப்பிடுவார் அப்படியொரு திறமை கொண்டவர்'' என்று பாராட்டினார்.
கன்னடத்தில் முதன் முதலில் பத்மஸ்ரீ பெற்ற முதல் நடிகை நான்தான். பத்மஸ்ரீ மட்டுமல்ல பத்மபூஷணையும் பெற்றேன். கர்நாடகத்தில், தமிழகத்தில் எல்லா விருதுகளையும் பெற்றேன். நான் என்றைக்கும் விருதுகளைத் துரத்திக் கொண்டு போனதில்லை. எனது வேலையை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அரசும் ஜனங்களும் தானாக விருதுகளை வழங்கினர்.
இதயக்கனி எஸ். விஜயன் எழுதிய ' நான் சரோஜாதேவி பேசுகிறேன்!' புத்தகத்திலிருந்து...
நூல் வெளியீடு: அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.