இந்தியக் கலைகளுக்கு, முக்கியமாக ஓவியங்களுக்கும், கலைஞர்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் ஆனந்த குமாரசாமி.
19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியக் கலைகள், இந்திய ஓவியங்கள் கலையம்சம் அற்றவை என்று மேலைநாட்டவரால் கருதப்பட்டன. இத்தகைய கருத்தை மாற்றிய அற்புத மனிதர் ஆனந்த குமாரசாமி.
'ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக் கலைகள்தான் சிறந்தவை என்று மூடிய மனத்துடன் மற்ற நாட்டு அவலங்களையும் கலையம்சங்களையும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு நாட்டின் ஓவியத்தையும் கலை, கலாசாரப் பண்புகளையும் அந்தந்த நாட்டு மக்களின் மனதைப் புரிந்துகொண்டு பார்த்தால்தான் மற்றவர்கள் அவற்றை ரசிக்க முடியும். காரணம், பார்ப்பவர்களுடைய மனத்தைப் பொறுத்தது.
அவர்கள் புரிந்துகொண்ட அந்த நாட்டின் கலாசாரத்தின் அளவைப் பொறுத்தது. நமது மனதுக்கு நாம் நமக்குப் பிடித்தது என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதையே ஓவியத்திலும் விரும்புகிறோம். அப்படி இல்லாமல் கறைபடியாத திறந்த மனதுடன் பார்த்தால் பிற நாட்டு ஓவியங்களையும் ரசிக்க முடியும். பாராட்ட முடியும்'' என்று சொல்லி குறை கூறியவர்களின் வாயை அடைத்தவர் ஆனந்த குமாரசாமி.
இலங்கையராகிய தந்தைக்கும், ஆங்கில தாய்க்கும் பிறந்த இவர், கீழை நாட்டுக்குரிய கற்பனைத் திறத்தையும் மேலை நாட்டுக்குரிய முழுமையையும் தம் பெற்றோரிடமிருந்து பரம்பரைச் சொத்தாகப் பெற்றவர்.
இவருடைய தந்தை ஸர். பொ. குமாரசாமி முதலியார். வழக்குரைஞரான இவர், கடந்த நூற்றாண்டின் இடைப் பகுதியில் இலங்கை மாகாண உறுப்பினராக இருந்தார். ஆசியாவின் முதன் முதலாக ஸர் பட்டம் பெற்றவர். தாயார் மிஸ் கெண்ட்டிஷ் புகழ் பெற்ற ஆங்கிலேயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியருக்கு 1877-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் ஆனந்த குமாரசாமி.
இதனால் ஆனந்த குமாரசாமியிடம் கீழை நாட்டுக்குரிய லட்சிய நோக்கும் மேலை நாட்டுக்குரிய பூர்வமான நோக்கும் இணைந்திருந்தன. இவர் சம்ஸ்கிருதத்தையும், பாலியையும், கிரீக்கும், லத்தீனும் தம் இளம் வயதிலேயே நன்றாகப் பயின்றிருந்தார். 'தாவரநூல்', 'நில நூல்' ஆகிய விஞ்ஞானத்துறையில் தாம் செய்த ஆராய்ச்சிக்காக இவர் முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.
இவர் இலங்கைக்குத் தம் 25-ஆம் வயதில் கனிப் பொருள் ஆராய்ச்சி இலாகாவின் இயக்குநராக வந்தார். ஆயினும் விரைவில் தமக்குரிய வேலை இன்னதென்பதைக் கண்டு கொண்டார். அது வரையில் கீழை நாட்டுப் பரம்பரைச் செல்வம் எத்தகையது என்பதைப் பற்றியே அன்று தெரியாது.
மேற்கத்திய நாகரிகத்தை வலிய புகுத்துவதினால் கீழை நாட்டுப் பண்பாட்டுக்கு அழிவு நேருவதைத் தெளிவாக உணர்ந்தார். மிகவும் வேதனையுற்றார். பின்னர் தம் வேலையை உதறித் தள்ளி விட்டு இந்திய ஓவியம், கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம், வரலாறு ஆகியவற்றைத் தீவிரமாக ஆராய விரும்பி முழு மனதுடன் ஈடுபட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக நுட்பமான ஆராய்ச்சியும், சமநிலையிலிருந்து எடை போடும் திறனும் எல்லாவற்றையும் விருப்பு வெறுப்பற்றுக் காணும் குணமும் இவரிடம் மிகுந்திருந்தன.
இவர் அமெரிக்காவில் இருந்தாலும் ஹிந்துவாகவே வாழ்ந்தார். சந்தனமும் குங்குமமும் அணியாத நாளே இல்லை. நாகரிக, நவீன அடிப்படை மின் சாதனங்களைக் கூடப் பயன்படுத்தாமல் எளிமையாக இருந்தார். ' வாழ்க்கையில் நவீன வசதிகள் அதிகமாக ஆகக் கலாசார சீரழிவு ஏற்படும்' என்பது ஆனந்த குமாரசாமியின் கருத்து.
ஆனந்த குமாரசாமியின் சாதனைகள் எண்ணற்றவை. ஐரோப்பாவிலும் கீழை நாடுகளிலும் நெடும் பயணங்களை மேற்கொண்டார். தம்முடைய புத்தகத்துக்குரிய பல ஆதாரங்களைச் சேகரித்தார். 1917-இல் இந்திய ஓவியங்களை பெருமளவில் மிகுந்த சிரமத்துடன் திரட்டி அதைக் காட்சிப்படுத்த காசிமா நகரில் ஓர் இடம் கேட்ட போது, அவருக்குக் கிடைக்கவில்லை.
அவர் திரட்டிய ஓவியங்களின் மதிப்பை இந்தியாவில் யாரும் உணரவில்லை. ஆனால் பாஸ்டனில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. ஒரு ஆர்ட் கேலரி அதற்காகவே கட்டப்பட்டது. பாஸ்டனில் உள்ள நுண் கலைக் காட்சிச் சாலையில் இந்திய பார்ஸிய முகம்மதியக் கலை ஆராய்ச்சியாளராக இவரை நியமித்தார்கள்.
இவருடைய உதவியினால் பாஸ்டன் மியூஸியத்துக்குக் கிழக்கு நாட்டுக் கலைப் பொருள்கள் ஏராளமாகக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.'உலகில் மிகச் சிறந்தவைகள் அவை' என்று இன்றளவும் கருதுகிறார்கள்.தம்முடைய தெளிவான வாதத்தாலும் திருத்தமான ஆராய்ச்சியாலும் இந்தியக் கலையை உலகப் பெருங்கலைகளில் ஒன்றாக உயர்த்தி மாபெரும் வெற்றிக் கண்டார்.
இவருக்கு முன்பு இந்தியக் கலைகளைப் பற்றி எழுதிய இ.பி.ஹாவெல் என்பவர் தத்துவ பாஷையில் பேசினார். வின்சென்ட் ஸ்மித் என்ற மற்றொரு அறிஞர் வெறும் வரலாற்றைக் குறிப்பிடுபவராக இருந்தார். ஆனால் ஆனந்த குமாரசாமியோ உண்மையான, உயர்ந்த, உன்னதமான ரசனை மிகுந்த அறிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். இந்தியப் பெண்கள்தான் நம்முடைய பண்பாட்டைக் காப்பாற்றுபவர்கள் என்பதும் இவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
'ஆனந்த குமாரசாமியின் எழுத்தைப் படிக்கிறவர்கள் சாக்ரடீஸ், பிளேட்டோ, வியாசர், சங்கரர் ஆகியவர்களில் யாரோ ஒருவருடைய நூலைப் படிப்பது போன்ற எண்ணத்தைப் பெறுவார்கள்'' என்ற வரிகள் உலகப் புகழ் பெற்ற அறிஞர்கள் கூற்றாக இருந்தது.
என்ஸைக்ளோபீடியா - பிரிட்டானிகாவின் 14-ஆம் பதிப்புக்குக் கீழை நாட்டுக் கலையைப் பற்றி அற்புதமாக எட்டுக் கட்டுரைகளை இவர் எழுதினார். அந்தக் கலைக் களஞ்சியம் தமது 13-ஆம் பதிப்பு வரையில் இந்தியக் கலை ஆசியக் கலை எதைப் பற்றியும் குறிப்பிடாமல் இருந்ததுதான் ஆச்சரியம்.
அமெரிக்காவின் நேஷனல் என்ஸைக்ளோ பீடியாவுக்கு கீழை நாட்டுக் கலைகளைப் பற்றி எழுதும்படி இவரை வேண்டினார்கள். புகழ் பெற்ற வெப்ஸ்டரின் 'நியூ இண்டர் நேஷனல் டிக்ஸனரி' யில் சேர்ப்பதற்கு
'இந்தியாவிலிருந்து வந்த சொற்கள்' என்ற பகுதியைப் பதிப்பிக்கும் வேலையை இவரிடமே கொடுத்து விட்டார்கள். சகோதரி நிவேதிதையும், இவரும் சேர்ந்து, இந்து பெüத்த புராணக் கதைகள் என்ற பெரிய நூலை எழுதினார்கள். ஆந்திர அறிஞர் ரத்ன கோபாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து 'அபிநயதர்ப்பணம்' என்ற அரிய நூலை மொழிப் பெயர்த்துப் பதிப்பித்து வெளியிட்டார் ஆனந்த குமாரசாமி.
வாழ்நாள் முழுவதும் இவர் தம் சொந்த வாழ்க்கையைப் பற்றி எங்கும் எதையும் சொன்னதில்லை. தம் வாழ்நாள் முழுவதும் தம் கலைத் தொண்டிலேயே ஆழ்ந்து போயிருந்தார். இவர் எழுதிய நூல்கள் மொத்தம் 60. இவருக்கும் ரத்னா தேவிக்கும் பிறந்த பிள்ளை பெரிய நாவலாசிரியராகத் திகழ்வார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் விமான விபத்தில் அவர் உயிர் இழந்தார்.
ஆனந்த குமாரசாமியின் மகள் ரோகிணி சங்கீதத்தில் வல்லவர். ஆனால் மேற்கத்திய நாகரிகம் அவரைக் கவர்ந்து கொண்டது. அவரின் மற்றொரு புதல்வராகிய ராமன் இளம் பருவத்தில் ஹரித்துவார் உள்ள குருகுலப் பல்கலைக்கழகத்தில் படித்து அமெரிக்காவில் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் நினைவுச் சின்ன ஆஸ்பத்திரியில் ரண சிகிச்சை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
நல்ல வேளையாக ஆனந்த குமாரசாமி எழுதி வைத்தும் வெளிவராமல் இருந்த பல நூல்களை இவருடைய குடும்பத்தினர் பதிப்பித்து வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கண்டு ஆனந்த குமாரசாமி பெரிதும் இன்புற்று மகிழ்ந்தார். அதன்பின்னர் இந்திய தூர கிழக்குக் கலைப் பகுதிக்கு கியூரெட்டாக நியமனம் பெற்றார். ஒரு மாதமே அப்பணியில் இருந்தவர் தமது 70-ஆவது வயதில் 9.9.1947-இல் மறைந்தார்.
இவர் எழுதிய புத்தகங்களும், ஏராளமான கட்டுரைகளும் இந்தியக் கலைகளைப் பற்றிய மேனாட்டவரின் கருத்துக்களை அடியோடு மாற்றின என்பதே ஆனந்த குமாரசாமியின் உன்னதமான போற்றுதலுக்குரிய பெரும் சேவையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.