அரிய படைப்புகளால் வாசகர்களுக்கு விருந்து அளித்தவர் அலெக்ஸாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியரான இவர், 'மூன்று வீரர்கள்', 'மான்டி கிறிஸ்தோவின் பிரபு' போன்ற பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியவர். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பல படைப்புகள் இன்றும் வாசகர்களைக் கவர்கின்றன.
டூமாஸூக்கு இயல்பாகவே சண்டை போடும் குணம் இருந்து வந்தது. தனது நான்காம் வயதில், தந்தை இறந்தபோது, அவரைக் கொன்று விட்ட கடவுளுடன் சண்டை போடுவதற்காக மயானத்தின் படிகளிலேயே ஏற ஆரம்பித்துவிட்டார். டூமாஸை சமரசப்படுத்துவற்காக அவரது தாய் படாதபாடு பட்டார். துன்பங்களைத் தாங்கிக் கொண்டு அன்றாடப் பிரச்னைகளை எதிர்த்து சமாளிப்பதே டூமாஸின் வாழ்க்கையில் இயல்பாக இருந்தது. இந்தத் தன்மை அவரது நாவல்களில் வரும் கதாபாத்திரங்களிலும் பிரதிபலித்தது.
ஏழையாகவே வாழ்வைத் தொடங்கிய டூமாஸ், தனது சொந்த ஊரில் முன்னேற வாய்ப்பில்லை என்று கருதி பாரிஸூக்கு போக நினைத்தபோது அதற்கும் போதிய பணம் இல்லை. 'பில்லியர்ட்ஸ்' விளையாட்டில் திறமை பெற்ற அவர், மற்றவர்களிடம் பந்தயம் வைத்து அவர்களை வென்று போதிய பணம் சேர்த்துகொண்டு பாரிஸூக்கு சென்றார்.
அங்கே பல நாடகங்களை எழுதிக் குவித்தார். ஆனால், அந்தத் துறைக்கு முற்றிலும் புதிய வரவான அவருடைய படைப்புகளை நாடக உலகம் கௌரவிக்க மறுத்துவிட்டது. மனம் தளராது தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.
ஒருநாள் திடீரென்று அதிர்ஷ்ட தேவதை கண் திறந்தார். 'கிறிஸ்டின்ராணி' என்ற அவரது நாடகத்தை ஒரு நாடகக் குழு அரங்கேற்ற இசைந்தது. நடிகர்கள் தேர்வாகி, ஒத்திகைகளும் நடக்க ஆரம்பித்துவிட்டன.
இந்த நாடகம் பெரிதும் வெற்றியைத் தரும் என்று பலரும் எண்ணினர். ஆனால், டூமாஸ் எழுதிய இந்தக் கதையையே இன்னொரு வயது முதிர்ந்த எழுத்தாளரும் நாடகமாக்கியிருந்தார். வறுமையில் வாடிய அவர் தன்னுடைய ஒரு நாடகத்தையாவது பாரிஸில் மேடை ஏற்ற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.
இதையறிந்த டூமாஸ் மேடை ஏறவிருந்த தன்னுடைய நாடகத்தைப் பெருந்தன்மையோடு திரும்பப் பெற்று, அந்த நாடகம் நடத்தும் உரிமையை முதிர்ந்த எழுத்தாளருக்கே அளித்துவிட்டார். பின்னர், அவர் எழுதிய 'மூன்றாம் ஹென்றி' என்ற நாடகம் டூமாஸூக்கு பெரும் வரவேற்பைஅளித்ததோடு, புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தொடர்ந்து, அவர் நாடகங்களையும், சரித்திர நாவல்களையும் எழுதினார்.
தன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொண்டு தவித்த எழுத்தாளர்களுக்கு டூமாஸ் சரியான பதில் கூறுவார். அவரை ஏளனம் செய்யும் நோக்கத்துடனோ, சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனோ யாராவது வந்தால் டூமாஸின் சூடான பதிலைக் கேட்டு அவர்கள் ஒதுங்கிவிடுவர். ஓய்வின்றி எழுத்துப் பணியைச் செய்துகொண்டிருந்தார் டூமாஸ். நண்பர்கள் யாராவது அவரைக் காண வந்தால் கூட ஒரு கையை அசைத்துகொண்டே, இன்னொரு கையில் எழுதிக் கொண்டே இருப்பார்.
தன்னை மறந்த நிலையில் தனது கதாபாத்திரங்களுடன் கலந்து வாழ்ந்தார் டூமாஸ். அவர்களுடன் பேசி விளையாடினார். அவர்களின் உரையாடல்களையே எழுதினார்.
ஒருநாள் அவருடைய அறையில் இருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. அவரைக் காண வந்த நண்பர் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேலைக்காரனிடம், 'உன் எஜமான் யாரோ ஒருவருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். நான் பிறகு அவரைச் சந்திக்கிறேன்'' என்றார். அதற்கு பணியாளர், 'ஐயா என் எஜமானுடன் இப்போது யாரும் இல்லை. அவர் தனது கதாபாத்திரங்களுடன்தான் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்'' என்று கூறி, அவரை டூமாஸின் அறைக்கு அழைத்துச் சென்றார் பணியாளர்.
பேச்சுவாக்கில் டூமாஸூடன் அவரது நண்பர், 'நீங்கள் எவ்வாறு கதைகளை உருவாக்குகிறீர்கள்?'' என்று கேட்க, ''அது எப்படியோ எனக்கு தெரியாது. ஒரு பிளம் மரத்தில் போய் அது எப்படிப்பட்ட பழங்களைக் கொடுக்கிறது என்று கேளுங்களேன்'' என்று பதிலளித்தார்.
டூமாஸ் ஏராளமாகச் சம்பாதித்தார். அதைக் காட்டிலும் தாராளமாகச் செலவழித்தார். அவருக்கு நண்பர்கள் அதிகம். தன் மாளிகைக் கதவுகளை அவர் திறந்தே வைத்திருந்தார். விருந்துகள் அடிக்கடி நடைபெறும். அழைத்தவர், அழையாதவர்.. என்று பலர் வருவார்கள். டூமாஸ் அவற்றை பொருள்படுத்தவே இல்லை. டூமாஸின் தாராளப் போக்கின் காரணமாக, அவருக்கு அதிக அளவில் கடன் பிரச்னை ஏற்பட்டது. நீதிமன்ற அமீனாக்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது, அவர்களுடன் டூமாஸ் மோதலில் ஈடுபட்டார்.
ஒருமுறை டூமாஸின் நண்பர் ஒருவர் வந்து, 'இறந்துப் போன ஒரு ஏழையின் சவத்தை அடக்கம் செய்ய நன்கொடை கேட்டார். 15 பிராங்குகளை உடனே எடுத்துத் தந்த டூமாஸ், 'இறந்தது யார்?'' என்று கேட்க, நண்பர், 'ஒரு அமீனா'' என்று பதிலளித்தார். உடனே டூமாஸ். 'இதோ இன்னொரு 15 பிராங்குகள். இன்னொரு அமீனாவையும் சேர்த்து அடக்கம் செய்யுங்கள்!'' என்றார். அமீனாக்கள் மீது அவருக்கு அவ்வளவு கோபம்.
'இத்தாலிப் புரட்சி' நடைபெற்றுகொண்டிருந் தபோது, அதில் தீவிரமாகப் பங்கேற்ற டூமாஸ் தனது செல்வத்தையெல்லாம் கரிபால்டியின் இயக்கத்துக்கே அளித்துவிட்டார்.
ஒருநாள் டூமாஸின் அருமை சிநேகிதி லாரா, குதிரையில் இருந்து அடிபட்டு இறந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார். பிரமைப் பிடித்தவர் போலானார். அப்போது அவரது எழுத்துப் பணியும் திடீரென்று முடிவு பெற்றது.