உலகச் சந்தையில் சென்னை தயாரிப்பு பேனாக்கள்!

மகாத்மா காந்தி, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களால் பிரபலமான பேனாக்கள் ஏராளம் என்பதால், இந்தியாவில் பேனாக்கள் நீண்டதொரு வரலாற்றை கொண்டுள்ளது.
உலகச் சந்தையில் சென்னை தயாரிப்பு பேனாக்கள்!
Published on
Updated on
3 min read

மகாத்மா காந்தி, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களால் பிரபலமான பேனாக்கள் ஏராளம் என்பதால், இந்தியாவில் பேனாக்கள் நீண்டதொரு வரலாற்றை கொண்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமான பவுன்டன் பேனா, அந்த நூற்றாண்டின் இறுதியில் பால்பாயின்ட் பேனா வருகையால் பொலிவிழக்கத் தொடங்கியது.

'வரலாறு தன்னை தானே மீண்டும் புதுப்பிக்கும்' என்ற வாக்கியத்துக்கேற்ப அண்மைக்காலமாகவே பவுன்டன் பேனாக்

களின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனை சென்னையில் அண்மையில் நடைபெற்ற பேனா கண்காட்சியில் பார்க்க முடிந்தது. ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் மட்டும் நடைபெற்று வந்த பேனா கண்காட்சியை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளது 'என்ட்லஸ்' நிறுவனம்.

ரூ.25 லட்சம் மதிப்பிலான முந்நூறுக்கும் மேற்பட்ட வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தயாப்டி பவுன்டன் பேனா, பேசுவதைக் காணொலியாகப் பதிவு செய்யும் பேனா, 125 ஆண்டுகள் பழமையான பேனாக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மகாத்மா காந்தியின் பரிந்துரையின்பேரில் தொடங்கப்பட்ட 'சுலேகா இங்க்' நிறுவனத்தைச் சேர்ந்த பேனா மை கண்காட்சியில் இடம் பெற்றது.

'என்ட்லெஸ்' நிறுவனத்தின் நிறுவனர்களான தீரஜ் நந்தூரி, ஆதித்யா பன்சாலி உலக அளவில் இந்திய பேனாக்களை கொண்டு செல்வதில் முனைப்பாக உள்ளனர்.

இதுகுறித்து தீரஜ் நந்தூரியிடம் பேசியபோது:

'கல்லூரிக் காலம் முதல் எழுதுபொருள்கள் மீது ஆர்வம் அதிகம். இருவரும் இணைந்து முதலில் குறிப்பேடுகளை வடிவமைத்து வெளியிட்டோம். அமெரிக்காவில் 2019-இல் வெளியிட்ட போது வெளியான ஒரு மாதத்தில் அனைத்தும் விற்பனையாகிவிட்டன. இதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு ஆச்சரியம் அளித்தது.

பின்னர், 'என்ட்லெஸ்' எனும் நிறுவனத்தை சென்னையில் தொடங்கினோம். முதலில் குறிப்பேடு வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில்,

2020-இல் பேனா வைக்கும் சிறிய பையை தோல், கற்றாழையில் இருந்து தயாரித்தோம். மேலைநாடுகளில் இந்தியா, சீனா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் தயாராகும் பொருள்கள் மீது நம்பிக்கை குறைவு. அதுபோல், இந்தியாவில் தயாராகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் குறைவு.

'இந்தியர்களாலும் நல்ல பொருள்களைத் தயாரிக்க முடியும்' எனும் இலக்கில் சென்னையைத் தளமாகக் கொண்டு எழுதுபொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தோம். இங்கு தயாராகும் பொருள்கள் முழுவதுமாக உள்நாட்டின் மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

பேனாக்கள் தயாரிப்பு: பின்னர், பேனா மை, பேனாக்களை தயாரிக்க ஆரம்பித்தோம். பேனா தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பேனாவின் ஒவ்வொரு அங்கத்தை உருவாக்கவும் பொறியியல் அறிவு அவசியமாகிறது.

ஒரு பேனாவை வடிவமைக்கும்பட்சத்தில், அதை தயாரிக்கும் சாதனங்கள் இந்தியாவில் குறைவு. அதனால், பேனாவில் ஒரு சில பொருள்கள் மட்டும் ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்றோம். இதை இங்கு தயாரிப்பதைவிட இறக்குமதி செய்வது விலை குறைவாக உள்ளது. மற்றபடி ஒரு பேனாவின் வடிவமைப்பு, உற்பத்தி அனைத்தும் சென்னையில் செய்யப்படுகிறது.

பேனா கண்காட்சி: தற்போது உலகச் சந்தையில் பவுன்டன் பேனா மை பிரபலம் அடைந்துள்ளது. சுமார் 30 நாடுகளில் 600-க்கும் மேற்பட்ட கடைகளில் பேனா மையை விநியோகிக்கிறோம். நாட்டிலேயே எழுதுபொருள் அதிகம் விற்பனையாவது தமிழ்நாட்டில்தான். அதிலும் பவுன்டன் பேனா தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகிறது.

இதனை கொண்டாடும் வகையில் கடந்த இரு ஆண்டுகளாக பேனா கண்காட்சியை நடத்தி வருகிறோம். உலகிலேயே ஜப்பானில் தான் மிகப் பெரிய பேனா கண்காட்சி நடத்தப்படும். அதில் மொத்தமாக 3 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொண்டனர். ஆனால், சென்னையில் நடைபெற்ற பேனா கண்காட்சியில் ஒரு நாளில் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மூன்று நாள்கள் நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

புதிய தொழில்நுட்பம்: தற்போதைய நவீன உலகில் பேனா பயன்படுத்துவது அதிக அளவில் குறைந்து வருகிறது. அதிலும், குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி மிகவும் அவசியம். அப்போதுதான், சிறு வயது முதல் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். ஒரு எழுத்தை காகிதத்தில் கொண்டு வரும்போது அது நிஜமாகிவிடும்.

பேனா கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேனாவை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது வரை பவுன்டன்பேனா மட்டும்தான் அறிமுகம் செய்து வருகிறோம்.

1960 காலகட்டத்தில் பேனாக்கள் பல்வேறு வடிவமைப்புகளில் வெளியாகின. பின்னாளில் பேனாக்களில் புதிய வடிவமைப்புகள் வருவதில்லை. தற்போது புதிய வடிவமைப்புகளில் பேனாக்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

எந்த பேனா பயன்படுத்தலாம்? பொதுவாக, பேனாக்களை இருவகையாக பிரிக்கலாம். பால்பாயின்ட் போன்ற நிப் இல்லாத பேனா பயன்படுத்தினால் எழுத்து அளவு, வடிவத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. பேனா வாங்கும்போது, எப்படி இருக்கிறதோ அப்படி தான் பயன்படுத்த முடியும். குறிப்பு எடுக்கவும், விரைவாக எழுதவும் இத்தகைய பேனா சிறந்தது.

அதுவே பவுன்டன் பேனா எனப்படும் நிப் வைத்த பேனா பயன்படுத்தும் போது, பல்வேறு அளவிலான டிப் (எழுதும் முனை) வாங்கி கொள்ளலாம். அதை சிறிது மாற்றியமைக்கும்போது எழுத்தில் பல்வேறு வடிவத்தை கொண்டு வரமுடியும். ஒரு தலைமுறை கடந்தும்கூட பயன்படுத்த முடியும்.

அதை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்ப அதன் நிப் மென்மையாகி கொண்டு வரும். இதனால், எழுத்து மேலும் அழகாகும். இதில் விரும்பிய நிறத்தில் மை பயன்படுத்த முடியும். இதில் உள்ள குறைபாடு என்றால், அதிக நேரம் திறந்து வைத்தால் நிப்பில் உள்ள மை உறைந்து விடும். மேலும், ஒவ்வொரு முறையும் மை நிரப்ப வேண்டும். ஒருவர் தனது பயன்பாடுக்கு ஏற்ற வகையில் பேனாவை தேர்வு செய்யலாம்' என்கிறார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com