ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பாரம்பரியம் காப்போம்...

பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களான கோட்டைகள், அரண்மனைகள், சிற்பங்கள், ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள், ஈமச்சின்னங்கள், ஓலைச்சுவடிகள், கோயில்கள், மண்டபங்கள், செப்பேடுகள், நாணயங்கள் உள்ளிட்டவையே ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமையும் புகழையும் சேர்ப்பவையாகும்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 10:30 pm

பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களான கோட்டைகள், அரண்மனைகள், சிற்பங்கள், ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள், ஈமச்சின்னங்கள், ஓலைச்சுவடிகள், கோயில்கள், மண்டபங்கள், செப்பேடுகள், நாணயங்கள் உள்ளிட்டவையே ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமையும் புகழையும் சேர்ப்பவையாகும். முன்னோர் விட்டுச் சென்ற பொருள்களும், இடங்களும்தான் பாரம்பரிய சொத்துகளாகும்.

இவை நாட்டின் கலாசாரம், காலம், நிலப்பரப்பு, பண்பாட்டை பிரதிபலிக்கக் கூடியவை. இவற்றைப் பராமரிக்கவும், ஊக்குவிக்கவும் பன்னாட்டு அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

'உலகில் 1,052 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றில் 814 கலாசாரம் சார்ந்தவை. 203 சின்னங்கள் இயற்கை சார்ந்தவை. மற்ற 35 சின்னங்கள் பொதுவானவை. இத்தாலியில் 53 சின்னங்களும், சீனாவில் 52 சின்னங்களும், இந்தியாவில் 35 சின்னங்களும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன' என்கின்றனர்.

இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 18-இல்

உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 1982-ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டு, 1983-இல் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.

பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே ஒவ்வொருவரின் பொறுப்புணர்வாகும். கலாசாரத் தலங்களின் மதிப்பைப் பாதுகாத்தல், அதற்கு ஏற்படும் பாதிப்பு, அதற்கான நடவடிக்கைகள், பாராட்டல், மதித்தல் போன்றவற்றை இந்த நாள் ஊக்குவிக்கிறது.

நுழைவுக் கட்டணம் இல்லை

உலகப் பாரம்பரிய தினமான ஏப்.18-இல் புராதன நினைவுச் சின்னங்களைப் பார்வையிட எந்தவித நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படாது எனத் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வளமான கலாசாரப் பாரம்பரியத்தை பார்வையாளர்கள் ஆராய்ந்து பார்க்கச் செய்வதால், பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது சந்ததியினரை பாரம்பரிய நினைவுச் சின்ன பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறவேண்டும்.

Story image

நாட்டின் பெருமையை பறைசாற்றும் தாஜ்மஹால்

இந்தியாவில் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் முகலாய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக, 17-ஆம் நூற்றாண்டில் கட்டிய காதல் சின்னமான தாஜ் மஹால் உலகப் புகழ் பெற்றது. கலைத்திறன், கைவினைத் திறன், வெள்ளைப் பளிங்குக் கல்லறை போன்றவை சிறந்த கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகும்.

அஸ்ஸôமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா, ஒடிஸ்ஸôவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோனார்க் சூரியனார் கோயில், மத்தியப் பிரதேசத்துக்கு உள்பட்ட போபாலுக்கு அருகே பேரரசர் அசோகரால் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த நினைவுச் சின்னமான சாஞ்சி ஸ்தூபி, பிகாரின் புத்த கயாவில் உள்ள மகா போதி ஆலயம், குஜராத்தின் சம்பானோர்-பவனத் தொல்லியல் பூங்கா, மகாராஷ்டிரத்தின் அஜந்தா, எல்லோரா குகைகள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்கள் சிறப்பு வாய்ந்தவைகளாகும்.

தமிழ்நாட்டில்...

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர்களால் கட்டப்பட்ட பாறை குடைவரைக் கோயில்கள், கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்டவை யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டவை. மாமல்லபுரம் அருகே கடலோர கிராமமான சாளுவன்குப்பத்தில் 2004-ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்த கோயில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13-16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாண்ட மலைக் கோட்டையான செஞ்சிக் கோட்டையானது பல்லவர், சோழர், விஜய நகர நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்களால் ஆளப்பட்டு, சுமார் 800 ஆண்டு வரலாற்றைக் கொண்டது.

16-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் கீழ் பொம்மி நாயக்கரால் கட்டப்பட்ட பிரம்மாண்ட வரலாற்றுச் சின்னமான வேலூர் கோட்டை பிரம்மாண்ட கருங்கல் சுவர்கள், அகழி, ஜலகண்டேஸ்வரர் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகியவற்றைக் கொண்ட

மதச்சார்பற்ற கட்டடக் கலையாகும். இந்தக் கோட்டையில்தான் 1806-ஆம் ஆண்டில் நாட்டின் முதல் சிப்பாய் புரட்சி ஏற்பட்டது.

முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில், இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், நீலகிரி மலை ரயில், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்றவை சிறப்புவாய்ந்தவையாகும்.

ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் கிடைக்கும் பல்வேறு பொருள்கள் நமது பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கின்றன.

சீனப் பெருஞ்சுவர்

உலகின் மிக நீண்ட பிரம்மாண்ட தற்காப்புச் சுவரான சீனப் பெருஞ்சுவர், கி.மு. 7-ஆம் ஆண்டு முதல் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை பல அரசர்களால் கட்டப்பட்டது. மங்கோலியா உள்ளிட்ட வடக்குப் பகுதி படையெடுப்பாளர்களிடமிருந்து சீனாவைப் பாதுகாக்க கோட்டைகளுடன் சுமார் 21,195 கி.மீ. நீளமுடைய இந்தச் சுவர் செங்கல், கற்கள், மண்ணால் கட்டப்பட்டது.

ஈரானில் அதிகம்தான்

உலகப் பாரம்பரிய சின்னங்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக ஈரான், பண்டைய பாரசீக நாகரிகத்தின் மையமாக உள்ளது. பெர்சேபோலிஸ், கோலஸ்தான் அரண்மனை, எக்ஸ்பஹான் நகரின் நக்ச்-இ-ஜஹின் சதுக்கம், பாம் கோட்டை உள்ளிட்டவை மிக முக்கியமான சின்னங்களாகும். அகாமனிசியப் பேரரசின் தலைநகரமான பெர்சேபோலிஸ், ஈரானின் மிகப் பிரபலமான தொல்பொருள் தளமாகும்.

பாம் கோட்டை உலகின் மிகப் பெரிய அடோப் (செங்கல்) கட்டடம் பண்டைய பாலைவன கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறது. சொல்டானியே கோபுரம் உலகின் மிக உயரமான செங்கல் கோபுரங்களில் ஒன்று. நக்ஷ் இ-ஜஹான் சதுக்கம் (எஸ்ஃபஹான்) சிறப்பு வாய்ந்தது. கோலஸ்தான் அரண்மனை போன்ற சில நினைவுச் சின்னங்கள் போரால் சேதமடைந்துள்ளன.

Story image

அதிசயமான 'கொலோசியம்'

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ள கொலோசியம் பழைமையான சுமார் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திறந்தவெளி விளையாட்டரங்கம் ரோமானியப் பொறியியலின் அடையாளமாகத் திகழ்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நவீன விளையாட்டரங்க வடிவமைப்புக்கு அடிப்படையாக, அதை பிரதிபலிப்பதாக உள்ளது.

பொறியியல் திறனுக்குச் சான்றான 'பிரமிடு'

எகிப்தியர்களின் அறிவு, பொறியியல் திறனின் சான்றாக, அற்புதங்களில் ஒன்றாக 4,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரமிடு கட்டடக் கலை விளங்குகிறது.

அக்ரோபோலிஸ் கோட்டை

கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏதென்ஸில் உள்ள ஓர் உயரமான பாறைக் குன்றின் மீது அமைந்துள்ளது பண்டைய கோட்டையான அக்ரோபோலிஸ்.

இது யுனெஸ்கோவின் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமாகும். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பார்த்தீனன், எரெக்தியன், ப்ரோபிலேயா, அதீனா நைக்கி போன்ற மிகச்சிறந்த பண்டைய கிரேக்க கட்டடக் கலை சின்னங்கள் இங்குள்ளன.

இதுதவிர, கம்போடியாவில் பழைமையான அங்கோர்வாட் கோயில், நியூயார்க் துறைமுகத்தில் உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவி சிலை உள்ளிட்ட உலகில் எண்ணற்ற பாரம்பரிய சின்னங்களைக் கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.