கி. ஸ்ரீதரன்
தமிழ் மாதங்களில் தனிச் சிறப்புடைய சித்திரையில் பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டை தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். கோடையை இனிமையாக்க இளநீர், பனை நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, தென்னங்கீற்றுக் கொட்டகை போன்றவற்றை இயற்கை அளிக்கிறது.
ஆன்மிகம் போற்றும் மாதம்: நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் 'பெரியபுராணம்', ஞானசம்பந்தரும், அப்பரும் 'திருப்பதிகம்' அருளத் தொடங்கியது, ராமானுஜர் அவதரித்தது போன்ற சிறப்புகள் சித்திரை திருவாதிரை நாளுக்கு உண்டு.
சைவம் போற்றும் மங்கையர்க்கரசியார், விறன்மிண்டர், தில்லைவாழ் அந்தணர், இசை ஞானியார், திருக்குறிப்புத் தொண்டர் போன்றோரும், வைணவம் போற்றும் மதுரகவி ஆழ்வார், எங்களாழ்வார், உய்யக்கொண்டார், திருமலைநம்பி போன்றோரின் அவதார திருநட்சத்திரங்களும் இந்த மாதத்தில்தான் வருகின்றன.
விழாக்கள்: கோயில்களில் திருவிழாக்கள், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நாகை அருகேயுள்ள திருவாய்மூர் கோயிலில் 'வட்டணை ஆடல் உடையார்' என்ற ஆடவல்லான் திருமேனிக்கு சித்திரைத் திருவிழா நாளில் வீதி உலா நடைபெற்றதை மூன்றாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கூறுகிறது.
திருச்செங்காட்டங்குடி கோயிலில் சித்திரை பரணி நாளில் சிறுதொண்டர் பெருமையை எடுத்துக் கூறும் 'அமுது படையல் விழா' நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்துள்ள காவாந்தண்டலம் கோயில்களில் சித்திரை திருவாதிரை, சித்திரை விசு ஆகிய விழா நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான திருவாதிரை நாளை சித்திரை மாதத்தில் கைலாயமுடையார் கோயிலில் கொண்டாடியதாக சோழமாதேவி கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோடைக் காலத்தில் குளிர்ச்சியாக இருக்க தண்ணீர் சுற்றி நிரம்பியுள்ள மரங்கள் அடர்ந்த தோப்புகளில் உள்ள மண்டபங்களில் இறைவன் எழுந்தருளும் 'வசந்த விழா' நடைபெறுகின்றன. ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளுக்கு சித்திரைப் பெருவிழாவில் 16-ஆம் நாள் விழாவன்று இளநீர் அமுது படைக்கும் வழக்கம் உள்ளது.
சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கு சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை மாம்பழம் படைக்க தானம் அளித்ததாக இரண்டாம் ராஜ ராஜசோழன் கல்வெட்டு கூறுகிறது.
தண்ணீர்ப் பந்தல்: கோயில்களில் 'தண்ணீர்ப் பந்தல்கள்' அமைக்கப்பட்டு, பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகேயுள்ள உக்கல், உத்திரமேரூர், திருச்சி அருகேயுள்ள திருச்செந்துறை, திருப்பராய்த்துறை போன்ற இடங்களிலும், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலிலும் நிறுவப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன. தண்ணீர்ப் பந்தலைப் பராமரிக்கத் தானமாக அளிக்கப்பட்ட நிலம் 'தண்ணீர்ப்பந்தல் பற்று' என்று அழைக்கப்பட்டதை திருவேள்விக்குடி கோயில் கல்வெட்டின் மூலம் அறியலாம்.
கூத்துகள், நடன, நாடகங்கள்: திருவாரூர் கோயிலில் 'வீர அனுக்க விஜயம்', தஞ்சாவூர் கோயிலில் 'ராஜராஜேஸ்வர விஜயம்', கடலூரில் 'பூம்புலியூர் நாடகம்', திருவாவடுதுறையில் 'திருமூல நாயனார் நாடகம்' போன்றவை நடைபெற்றுள்ளன.
இதேபோல், சாக்கைக் கூத்து, தேசிக் கூத்து, சாந்திக் கூத்து போன்ற கூத்துகளும், நடன நாடகங்களும் நடைபெற்றதை திருவேங்கைவாசல், காமரசவல்லி, பழுவூர் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
தமிழ்க்கூத்து: கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகேயுள்ள மானம்பாடியில் நாகநாத சுவாமி கோயிலில் 15 நாள்கள் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின்போது தமிழ்க்கூத்தை விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராஜ பயங்கர ஆச்சாரியன் என்பவர் ஐந்து முறை நடத்தியதாகவும், இக்கூத்தை நிகழ்த்தியவர்களுக்கு 'கூத்தாட்டுக் காணி'யாக நிலம் அளிக்கப்பட்டதாகவும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறுகிறது.
(தொல்லியல் துறை - பணி நிறைவு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சோழர் கால கல்வெட்டு

தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுப்பு

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை

கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

