தமிழில் மருத்துவத்தை எழுதி புரிய வைப்பது இன்றளவும் பெரும் சவால்தான். சிக்கலான சொல்லாடல்களை எளிய மக்களுக்கு விளங்க வைப்பதற்கு எழுத்தில் பெரிய சாகசத்தை நிகழ்த்த வேண்டும். அதை அரை நூற்றாண்டாக வெற்றிகரமாக நிகழ்த்தி, லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவப் பகுத்தறிவை ஏற்படுத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த முதுநிலை பொதுநல மருத்துவ நிபுணர் எஸ்.அமுதகுமார்.
இடையறா மருத்துவப் பணிகளுக்கு நடுவில், துளியும் உற்சாகம் குறையாமல் பல நூல்களை வெளியிட்டதற்காகவே அவருக்கு 'கலைமாமணி' விருதை தமிழ்நாடு அரசு வழங்கிக் கெளரவித்துள்ளது.
அவருடனான நேர்காணல்.
நோயாளிகளுடன் எழுத்து வழியே உரையாட வேண்டும் என்ற எண்ணம் வந்தது எப்படி?
பிணியைத் தீர்ப்பது மட்டும் மருத்துவரின் பணியல்ல. அதனைத் தடுத்து நிறுத்துவதும் கடமை. அதை உணர்ந்ததாலேயே விழிப்புணர்வை எழுத்து மூலம் ஏற்படுத்தி வருகிறேன். 1975-ஆம் ஆண்டில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்
எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே எழுதத் தொடங்கிவிட்டேன். 'நாட்டுப்புறங்களில் வீட்டு பிரசவம்' என்ற தலைப்பில் பாதுகாப்பான பிரசவச் சிகிச்சைகளின் அவசியம் குறித்து தினமணி சுடரில் 1976-இல் எனது கட்டுரை வெளியானது.
இன்றைக்கும் சமூக வலைதளங்களைப் பார்த்து சிலர் சுய பிரசவம் மேற்கொள்வதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. அதனால் ஏற்படும் பாதகங்களையும், உயிரிழப்புகளையும் பார்க்கிறோம். தலைமுறைகள் கடந்தாலும் சில விஷயங்கள் குறித்த புரிதலை தொடர்ச்சியாக ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு பல முன்னணி இதழ்கள், நாளிதழ்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
மருத்துவ எழுத்துகள் சந்தேகங்களைத் தீர்க்குமா?
நிச்சயம் தீர்க்கும். நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைச் சந்திக்கும் என்னைப் போன்ற மருத்துவர்களுக்கு, மக்களுக்கு எத்தகைய சந்தேகங்கள் எழும் என்பது நன்றாகத் தெரியும். அதற்கு இடமளிக்காத வகையிலும், அதனை நிவர்த்தி செய்யும் வகையிலுமே கட்டுரைகள் இருக்க வேண்டும். அதைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன். சில நேரங்களில் ஒருவரது உடல்நிலை சார்ந்த தனித்துவமான கேள்விகள் எழக் கூடும்.
நான் மாணவராக இருந்தபோதே அகில இந்திய வானொலியில் மருத்துவத் துறை ஜாம்பவான்களுடன் ஏறத்தாழ 500 நேர்காணல்களை நடத்தியிருக்கிறேன். தனித்துவமான சந்தேகங்களுக்கு மருத்துவ வல்லுநர்களின் பதிலைப் பெற்றுத் தந்துள்ளேன். தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.
மருத்துவ மொழி மக்களுக்கு அந்நியமாக உள்ளதே?
மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் நோயின் பெயர்களையும், மருந்துகளின் மூலக் கூறு பெயர்களையும் மக்களிடம் திணிக்க வேண்டிய தேவையில்லை. நோயின் பொதுப் பெயரையும், எவ்வாறு அதை சரிசெய்யும் வழிமுறையையும் மிக சுலபமாக மக்களுக்கு புரிய வைக்க முடியும்.நோயாளிகளிடம் நேரடியாக பேசுவதன் மேம்பட்ட உரைநடை வடிவம்தான் மருத்துவ எழுத்துகள். ஆகவேதான் என்னால் 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுத முடிந்தது. பல நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பல மறுபதிப்புகளையும் கண்டுள்ளன.
இன்றைக்கு சமூக வலைதளங்கள் 'மருத்துவ வீடியோக்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. . இன்னும் மருத்துவ எழுத்துகள் அவசியமா?
கண்டிப்பாக அவசியம். எத்தனை செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள், சமூக வலைதளங்கள் வந்தாலும் மக்களின் வாழ்வுடன் கலந்தது வாசிப்புப் பழக்கம் மட்டும்தான். பொழுதுபோக்கு அம்சங்களுடனும், கவன ஈர்ப்புடனும் ஒரு மருத்துவத் தகவலை சமூக வலைதளங்கள் வாயிலாக கடத்தினால் அது மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்காது. மாறாக, எழுத்தை வாசிக்கும்போதுதான் நமது எண்ண ஓட்டம் முழுவதும் அதில் ஆழ்ந்திருக்கும். அந்த கருத்துகள் மூளை நியூரான்களுக்குள் பயணிக்கும்.
பார்வையில் பதிவது அல்ல விழிப்புணர்வு. மூளையில் பதிய வேண்டும் அதுதான் விழிப்புணர்வு. அதை உணர்ந்து கொண்டால் மருத்துவ எழுத்துகள் எக்காலத்துக்கும் அவசியம் என்பது தெளிவாகிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஏஐ’ நுட்பத்தில் தண்டுவட அறுவை சிகிச்சை: சென்னையில் சா்வதேச மருத்துவ மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு எலக்ட்ரீஷியன் சிகிச்சை அளிக்கும் காட்சியால் பரபரப்பு

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஆயுா்வேத மருத்துவம்- மாணவா்களுக்கு குடியரசுத் தலைவா் யோசனை

நோய் சிகிச்சை மட்டுமல்ல; தடுப்புமே அவசியம்: மருத்துவா் தினத்தை முன்னிட்டு நிபுணா்கள் வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



