உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

தமிழ்நாட்டில் டிராகன் சாகுபடி!

சீனாவை வேறு எந்தத் துறையிலும் இந்தியா மிஞ்ச முடிகிறதோ, இல்லையோ டிராகன் பழ உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கும் என்று அடித்துச் சொல்லலாம்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:29 pm IST

சீனாவை வேறு எந்தத் துறையிலும் இந்தியா மிஞ்ச முடிகிறதோ, இல்லையோ டிராகன் பழ உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கும் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் டிராகன் பழ உற்பத்தி அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பாலமதி முருகன் கோயில் அருகே அமைந்துள்ள விவசாய நிலம். சுற்றிலும் பசுமை போர்த்திய இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில்தான், வித்தியாசமான விவசாயப் புரட்சி சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. இங்கு விளைவது நம் ஊர் பாரம்பரிய பயிர் அல்ல; வெளிநாடுகளில் இருந்து வந்து நம் மண்ணில் வேரூன்றியிருக்கும் 'டிராகன் ஃப்ரூட்' கொடிகள்.

பல் மருத்துவர் ஆனந்த ராஜ் விவசாயத் துறையிலும் தடம் பதித்துள்ளார். அவர் கூறியது :

'வாரத்தில் இரண்டு நாள்கள் பண்ணைக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அரை ஏக்கர் நிலத்தில் 'டிரெலிஸ்' முறையில் டிராகன் ஃப்ரூட் சாகுபடியை 2024-இலிருந்து செய்துவருகிறேன். டிராகன் செடி மெக்சிகோவிலிருந்து மொராக்கோ வந்தது. மொரோக்காவிலிருந்து தைவான் நாட்டில் பயிரானது. பிறகு சீனா முழுவதும் வியாபித்துள்ளது. காரணம், உலக நாடுகளிலிருந்து டிராகன் பழங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புதான்.

டிராகன் கொடி கள்ளிச் செடி வகையைச் சேர்ந்தது. இதரச் செடிகள் மாதிரி தண்ணீர் அதிகம் தேவை இல்லை. குறைந்த நீர் போதும். ஒரு வருடம் மழையே பெய்யாவிட்டாலும், பட்டுப் போகாமல் வளரும் திறன் கொண்டது. ஆனால், செடியின் வேர்ப் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றால், செடி அழுகிவிடும். இதைப் பூச்சிகள் தாக்காது. அதனால், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தேவையே இல்லை. நிலத்தில் நடப்படுகிற தண்டு, நாலஞ்சு வருடம் காய்ந்தச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட தண்டாக இருக்க வேண்டும். அப்பதான் பூப் பூத்துக் காய்க்கும். இல்லையென்றால் 5 வருடம் ஆனாலும்கூட பூப் பூக்காது. டிராகன் கொடி, பிரண்டைக் கொடி மாதிரி இருக்கும். காற்றில் சாயாமல் இருக்க கல் தூண், மூங்கில் போன்றவற்றைப் பயன்படுத்தி தாங்கிகள் கொடுத்தும், இரண்டு கொடிகளைப் பின்னிப் பிணைந்தும் வளர்க்கிறோம்.

4-5 வருடம் வயதுடைய முதிர்ந்த செடிகளிலிருந்து தண்டுகள் வாங்கப்பட்டு நடப்படுவதால், நட்ட ஒரே வருடத்தில் பூப் பூத்துக் காய்க்க ஆரம்பிக்கிறது. இடையில் கொடியை வெட்டி விட்டு கவாத்து செய்ய வேண்டும். அப்போதுதான் கிளைகள் பிரிந்து விரிந்து பரவும். மே மாதத்தில் பூக்கத் தொடங்கும் இந்த டிராகன் செடி, நவம்பர் மாதம் வரை காய்க்கும். பழத்தின் எடை 250 கிராம் முதல் அதிகபட்சம் 750 கிராம் வரை இருக்கும். செயற்கை உரம் போட்டால் ஒன்றரை கிலோ எடையுள்ள பழமும் கிடைக்கும்.

நான் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துகிறேன். டிராகன் பழத்தை வெட்டினால், உள்ளே சதை வெள்ளை நிறத்தில் கரும் புள்ளிகளுடன் காணப்படும். இந்த வகை பழங்கள் சுவை உப்பு சப்பு இல்லாமல் இருக்கும். எனது பண்ணையில் விளையும் டிராகன் பழங்கள் உள்ளே குங்குமச் சிவப்பு நிறத்தில் இனிப்புச் சுவையுடன் இருக்கும். நான் இந்த வகை பழங்கள் மட்டுமே விளைவிக்கிறேன்.

ஆனந்த ராஜ்

ஆனந்த ராஜ்

சந்தையில் டிராகன் ஃப்ரூட் விலை அதிகம். கிலோ இருநூறு முதல் முந்நூறு ரூபாய் வரை விற்கிறது. அதே சமயம், விவசாயத்தில் முக்கியப் பிரச்னையாக இருப்பது விளைச்சலை விற்பனைக்கு விடுவதுதான். தரகர்களை நாடினால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காது. இதைக் கருத்தில் கொண்டு, 'கோ ஃப்ரூட்டி' என்ற பிராண்ட் பெயரில், 'ஃபார்ம் டு ஹோம்' என்ற முறையில் பழங்களை விற்பனை செய்து வருகிறேன். இதற்காக 120 விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளேன். வெளியே 300 ரூபாய்க்கு விற்கப்படும் டிராகன் ஃப்ரூட், எங்களிடம் விலை குறைவாகக் கிடைக்கும். 500 ரூபாய்க்கு டிராகன் பழம், மலையில் விளையும் வாழைப் பழம், பப்பாளி, ஆரஞ்சு தலா ஒரு கிலோ தொகுப்பாக வழங்குகிறோம். டிராகன் பழத் தோலையும் காய வைத்து பொடி செய்து அல்லது பச்சையாகவே டீ போட்டு குடிக்கலாம்' என்கிறார் ஆனந்த ராஜ்.

-பனுஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.