
நாடக மேடையில் மாய யதார்த்தம்
கலைத்துறையை திரைத்துறை ஆக்கிரமித்தபோது நாடகம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
கலைத்துறையை திரைத்துறை ஆக்கிரமித்தபோது நாடகம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், திரைத்துறைக்குத் தேவையான கதைக்கரு, நாடக மேடைகளில் இருந்து வந்து கொண்டிருந்தது. வெற்றி பெற்ற நாடகங்கள் திரைப்படங்களாக மாறின.
திரைத் தொழில்நுட்பங்கள் வளர்ந்து, அதிகத் திறன் கொண்ட காமிராக்கள், ஒளிநுணுக்கங்கள் நடைமுறைக்கு வந்தபோது, திரைத்துறை காட்சி ஊடகம் என்றும், திரைமொழி காமிரா என்றும் ஆனது. அப்போது நாடகங்கள் குறையத் தொடங்கினாலும், சில நகைச்சுவை நாடகங்கள், தமிழில் கிரேசி, எஸ்.வி. சேகர் போன்றவர்களால் தொடர்ந்தன. ஆனால், இப்போது அதுவும் அரிதாக மாறிவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் நாடகத்தை ஏ.ஐ. உத்தியுடன் கையில் எடுத்திருக்கிறார் தாரிணி கோமல். இந்த உத்தியை சிறப்பாகக் கையாள முடியும் என்பதையும் 'என்று தணியும்' நாடகத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் , இந்தியாவுக்கு விடுதலை கொடுத்தது வரையிலான 300 ஆண்டு வரலாற்றை 1 மணி, 40 நிமிடங்களில் சித்திரிப்பதுதான் இந்த நாடகம்.
ஆங்கிலேயர் கப்பலில் வந்து இறங்கி, முகலாய மன்னரிடம் ஒப்பந்தம் போடுவது, அரசுக்குப் பாதுகாப்பு அளிக்க படைகளை நிறுத்துவது, வரி வசூல், தமிழகத்தில் வேலு நாச்சியார் , வட இந்தியாவில் ஜான்சி ராணி ஆகியோர் ஆங்கிலேயரை எதிர்ப்பது, பெரிய மருதுவின் ஜம்புத் தீவு பிரகடனம், மெக்காலே கல்விக் கொள்கை, ஜாலியன் வாலாபாக் படுகொலை , விக்டோரியாவின் நேரடி ஆட்சி, மகாத்மா காந்தி வருகை, ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை, கடைசியாக பிரிவினை மற்றும் விடுதலை என வரலாற்றின் சில பக்கங்களை மட்டும் காட்சிப்படுத்தி, அதனூடாக முழு வரலாற்றையும் சில வசனங்களில் சொல்லிச் செல்கிறது நாடகம்.
60 கதாபாத்திரங்கள். 19 நடிகர்கள். ஒவ்வொரு நடிகரும் குறைந்தது மூன்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிறப்பான ஒப்பனை. நடிகர்கள் பல வேடத்தில் நடித்ததை நாடகத்தின் முடிவில், நாடக மேடையில் டைட்டில் ஓட்டும்போது, நடிகரின் கதாபாத்திரங்களின் தோற்றத்துடன் காணும்போதுதான் தெரிகிறது. அவர்களது நடிப்புத் திறமையை மீண்டும் நினைத்து வியக்க முடிகிறது. அந்த அளவுக்கு அவர்கள் பாத்திரத்தில் ஒன்றிப் போயிருந்தனர். ஒப்பனைகளும் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மிக அழகாக, பொருத்தமாகக் கையாண்டுள்ளனர். மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பது திரையில் ஏ.ஐ . காட்சியாக திரையிடப்படுகிறது. அதே நேரத்தில் அரங்கில், ஆஷ் துரை தனது மனைவியுடன் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்க, வாஞ்சிநாதன் உள்ளே புகுவார். வசனங்கள் நடக்கும். துப்பாக்கியால் சுடுவார். மேடையில் இருள் சூழும். 'அதோ ஓடுகிறான் என்று குரல் கேட்கும். மீண்டும் துப்பாக்கிச் சத்தம். தன்னை சுட்டுக்கொண்டான் என்று சொல்லப்படும்.
ஜான்சி ராணி போருக்குப் புறப்படுவார். அவர் முகம் கொண்ட பெண்ணுருவம் ஏ.ஐ . தொழில்நுட்பத்தில் குதிரையில் சென்று சண்டையிடும் காட்சி திரையில் விரியும். அங்கே காயமடைந்தவுடன் ஜான்சி அரங்க மேடையில் வந்து விழுவார். வலி பொறுக்க முடியாமல் துடிப்பார். அப்போதும் போருக்குப் போகத் துடிப்பார். பின்புலத்தில் ஏ.ஐ. காட்சியில் கோட்டை முன்பாக இறந்து கிடக்கும் வீரர்கள் காட்சி இருக்கும்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஆங்கிலேயப் படை துப்பாக்கியால் சுடும். திரையில் மக்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். ஏ.ஐ . காட்சி. அரங்கத்திலும் ஆறு பேர் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். திரைக் காட்சிக்கு இணையாக மேடையிலும் அடிப்பட்டு பொத்பொத்தென்று விழுந்து இறப்பார்கள்.
காந்தி வருகையின் துறைமுகம், பகதூர் ஷா அரண்மனை, கர்சன் பிரபு அலுவலக அறை ஆகியவற்றை மிகத் துல்லியமாக திரையிடும்போது, மேடை அரங்கில் ஒரு நாற்காலி முன்பாக நடிகர்கள் சிறப்பாக நடிப்பது ஒருவித மாய யதார்த்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஆர்.எஸ்.மனோகர் தனது நாடக மேடையில் புராண காட்சிகளைக் கொண்டு வர பட்ட சிரமம் இனி இல்லை. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மிக எளிதாகச் செய்துவிட முடியும்.
இந்த ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் சமூக நாடகம், நகைச்சுவை நாடகங்களுக்கும் பயன்படுத்த முடியும். மீண்டும் நாடக அரங்குகளைத் துடிப்பாக்க முடியும்.
கோமல் தியேட்டர் இந்த நாடகத்தை மீண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் நடத்துகின்றனர். அதைத் தொடர்ந்து மும்பையிலும் இந்த நாடகத்தை நடத்தவுள்ளனர்.
தியாகிகளை நினைவூட்டும் ஒரு கலைப்பயணம்
'நான் ஓராண்டுக்கும் மேலாக பல புத்தகங்களைப் படித்து, பல உண்மைகளைச் சேகரித்து, இந்த நாடகத்தை வடிவமைத்து, வசனங்கள் எழுதியுள்ளேன். இது வெறும் நாடகம் அல்ல. சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை நினைவூட்டும் ஒரு கலைப்பயணம். எல்.இ.டி. காட்சி அமைப்புகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிப் பின்னணி, பாரதியாரின் பேரன் ராஜ்குமாரின் இசை எல்லாமும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். இளைய தலைமுறைக்கு இதைக் கொண்டு சேர்ப்பதே நோக்கம்' என்கிறார் நாடகத்தை எழுதி இயக்கியுள்ள தாரிணி கோமல்.
-திங்கள்செல்வன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவை ஆதரித்தால் ஒரு சொட்டுகூட கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை

மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்த முடிவை முதலில் அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு




