முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் 16 ஆண்டுகளாக, திருக்குறளை ஒளி வீசச் செய்து வருகிறது 'குறளகம்' அமைப்பு.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆ.விசுவநாதன் என்ற தமிழ்க்குழவி, 2010- ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் திருக்
குறளை மாணவ, மாணவியர்களின் மத்தியில் கொண்டு சேர்த்திடும் வகையில் 'குறளகம்' எனும் திருக்குறள் வாழ்வியலாக்கப் பயிற்சி மையத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதற்காக அவர் தனது ஓய்வூதியம், சேமிப்புத் தொகையையே நிதி ஆதாரமாகக் கொண்டுள்ளார்.
நாகர்கோவில் கீழராமன்புதூரில் செயல்படும் 'குறளகம்' பணிகள் குறித்து அவரிடம் பேசியபோது:
'பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாள்களிலும் இலவசமாக திருக்குறள் வாழ்வியலாக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாதம் ஒருமுறை திருக்குறள் சிந்தனை முற்ற நிகழ்வு, பேச்சுத்திறன், ஆளுமை வளர்க்கும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தின விழாவில் கையெழுத்துப் போட்டிகள், குறள்சார் ஓவியப் போட்டிகள், திருக்குறள் எழுதுதல், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபெறுகின்றனர். நிகழாண்டில் 1,210 பேர் பங்கேற்றனர்.
பிரணாப் பாராட்டு
குறளகத்தில் பயிற்சி பெற்ற 72 மாணவ, மாணவியர் 1330 திருக்குறளையும் மனனம் செய்து ஒப்பித்து, தமிழ்நாடு அரசின் பரிசான ரூ.10 ஆயிரம் பெற்றுள்ளனர். இதுதவிர, இல்லத்தரசிகள் 4 பேரும் 1330 குறட்பாக்களையும் ஒப்பித்து, விருதுகளையும், பொற்கிழிகளையும் பெற்றுள்ளனர்.
2015- ஆம் ஆண்டில் குறளக மாணவியரான ராமன்புதூர் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற செ.ஆஸ்மிஜெனிபர், திருவட்டாறு எக்ùஸல் பள்ளி மாணவி ஜெ.ச.மேதா ஆகியோர் புதுதில்லியில் திருக்குறளை ஒப்புவித்து, அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பாராட்டு பெற்றுள்ளனர்.
குறளகத்தில் இலவசமாக ஹிந்தியும் கற்றுத் தரப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
குறளகத்தின் ஆண்டுவிழாவில் தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். ஜனவரி 1, 16 -ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பெற்றோர்களுக்குப் பரிசுகளை அளிக்கிறோம்.
திருக்குறள்வழி திருமணங்கள், விழாக்கள்
திருக்குறள் வழியில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. அதன்படி திருமண அரங்கில் திருவள்ளுவர் படம், நிறைநாழி நெல், பூக்கள் வைக்கப்பட்டு, குறளக மாணவர்களின் முற்றோதலுடன் தொடங்குகிறது. மண
மகன் வீட்டார் மணமகளுக்கு சீர் அளித்து, அவர் திருமணப் புடவையைக் கட்டி வரும் நேரத்துக்குள் குறளக மாணவர்கள் திரு
மணத்துக்கான 4 அதிகாரங்களைப் பாடி, புகழ் அதிகாரத்தோடு நிறைவு செய்கின்றனர். பின்னர், அறிஞர் அல்லது மணமகனின் தந்தை தாலி எடுத்துக் கொடுக்க, மாப்பிள்ளை பெண்ணுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பார். தொடர்ந்து அறிஞர்கள் திருக்குறள்களைக் கூறி மணமக்களை வாழ்த்துவர்.
இவ்வாறு மூவருக்குத் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு, பெயர்சூட்டு விழா, புதுமனை புகுவிழாக்களும் குறள் வழியில் செய்யப்பட்டு வருகின்றன.
இல்லந்தோறும் திருக்குறள்
பெண்கள், மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து 1330 குறட்பாக்களையும் பிழையின்றி எழுதி, குறளகத்தில் ஒப்புவித்தால் அவர்களுக்குச் சான்றிதழும், பரிசும் வழங்கப்படுகின்றன.
கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. 'திருக்குறள் பன்முகப் பார்வை', 'இலக்கியங்களில் திருக்குறள் கருத்தியல்கள்', 'வள்ளுவம் காட்டும் வாழ்வியல் திருக்குறள் உரை வளம்' ஆகிய நூல்கள் குறளகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
திருக்குறள் சார்ந்து குறள் மணம், குறள்வளம், குறள் மணமாலை, குறள் நலம், குறள் உரைக்கோவை, திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ், திருக்குறள் அமிழ்தம் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை நான் (தமிழ்க்குழவி) எழுதி வெளியிட்டுள்ளேன்.
குறளகத்தில் 2500- க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளன. எனது பணிகளைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகள் வழங்கிய சுமார் 65 விருதுகளை இதுவரை பெற்றுள்ளேன்'' என்கிறார் தமிழ்க்குழவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









