இன்று வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம். தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 99-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கின்றன. அதில் கலந்து கொள்ள இயலவில்லையே என்கிற ஆதங்கம் என்னில் நிறைந்து நிற்கிறது.
தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்கும் தலையாய இலக்கிய அமைப்புகளில் ஒன்று தென்காசி திருவள்ளுவர் கழகம். மிகப் பழைமையான இலக்கிய அமைப்பு அதுதான். அதைவிடச் சிறப்பு என்னவென்றால், தென்காசி நீதிமன்ற வழக்குரைஞர்களின் குமாஸ்தாக்கள் இணைந்து தோற்றுவித்த அமைப்பு என்பது. அவர்கள் எந்த அளவுக்கு இலக்கிய ஆர்வலர்களாகவும், தமிழ்ப் பற்றாளர்களாகவும், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
1927-ஆம் ஆண்டு திருக்குறள் அட்டாவதானியார் சுப்பிரமணியதாசனின் வழிகாட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் முதலாவது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார்.
ரா.பி.சேதுப்பிள்ளை, மறைமலை அடிகள், நீதிபதி மகராஜன், குன்றக்குடி அடிகளார் என்று தென்காசி திருவள்ளுவர் கழகப் பேரவையை அலங்கரிக்காத தமிழறிஞர்களே இல்லை எனலாம்.
ஞாயிறு தோறும் 'திருக்குறள் ஆய்வு', மாதந்தோறும் திருக்குறள் முற்றோதல், அனைவரும் பயன்பெற நூலகம், திருக்குறள் குறித்த புத்தகங்கள் வெளியிடுதல் என்று கடந்த 99 ஆண்டுகளாக அந்தக் கழகம் முன்னெடுக்கும் ஆக்கபூர்வ பணிகள் ஏராளம்.
ஒவ்வோர்ஆண்டும் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் விழாவில் பங்கு பெறுவது என்பது பெரும் பாக்கியம். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத்
தென்காசி திருவள்ளுவர் கழகத்தைக் கட்டிக்காத்த, அதன் செயலாளராக இருந்த ஐயா சிவராமகிருஷ்ணன், கால் நூற்றாண்டுக்கும் மேலாக அதை வழிநடத்த உதவிய ஐயா முனைவர் தெ.ஞானசுந்தரம் இருவருக்கும் திருவள்ளுவர் கழகத்தின் நூற்றாண்டைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்பது என்னை வாட்டும் விசனம்.
தனக்குப் பின்னரும் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயல்பாடுகள் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடர, அதன் பொறுப்பை வழக்குரைஞரான கனகசபாபதியிடம் ஏற்கெனவே ஒப்படைத்திருந்தார் பெரியவர் சிவராமகிருஷ்ணன். அடுத்த ஆண்டு, கழகத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்.
''அண்ணா, தமிழினத்துக்குப் பெருமை சேர்த்திடும் விதத்தில் தேசிய அளவில் பெரிய பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத் தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்க வேண்டும். முதலாவது ஆண்டு விழாவுக்கு வ.உ.சி. தலைமை வகித்தார் என்றால், வ.உ.சி. கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் நூற்றாண்டு விழாவுக்குத் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்'' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார் செயலாளர் கனகசபாபதி.
அவரது விருப்பத்தை நான் எனது வேண்டுகோளாக குடியரசு துணைத் தலைவருக்கு வழிமொழிகிறேன். அவர் கலந்து கொண்டால் ஒட்டுமொத்த இந்தியாவுமே தென்காசியையும், திருவள்ளுவர் கழகத்தையும், அதன் மூலம் தமிழர்களையும் வியந்து பார்க்கும். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.
தென்காசி திருவள்ளுவர் கழகம் குறித்து எழுத முற்பட்டபோது எனக்கு இன்னொரு செய்தி பொறி தட்டியது. திருவள்ளுவர் திருநாள் குறித்த தவறான புரிதலுக்குத் தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சிகள் முற்றுப்புள்ளி வைக்கின்றன. ஆண்டுதோறும் கடந்த 99 ஆண்டுகளாக வைகாசி அனுஷம் அன்று நிகழ்ச்சி தொடங்குவதில் இருந்து, அதுதான் தொன்று தொட்டுத் திருவள்ளுவர் தினமாக இருந்திருக்க முடியும்.
1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கூடினார்கள் என்று கூறப்படுவது தவறான செய்தி.
1921-ஆம் ஆண்டு மறைமலை அடிகள் இலங்கைப் பயணத்தில் இருந்ததாகப் பதிவு செய்கிறது அவரது மகன் மறை. திருநாவுக்கரசின் 'மறைமலை அடிகள் வரலாறு'.
ஆனால், 1935-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினரால் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. மறைமலை அடிகள் தலைமையேற்ற அந்த மாநாட்டில் திரு.வி.க., தெ.பொ.மீ., பாலூர் கண்ணப்ப முதலியார், எஸ்.வையாபுரிப் பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பிறந்தார் என்கிற தனது கருத்தை மறைமலை அடிகள் வெளியிட்டாரே தவிர எந்தவிதத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் இன்றுவரை விழா எடுக்கப்படுகிறது. 1963 ஏப்ரல் 14-ஆம் நாள் சென்னை ராயப்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் முதல் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில நிதியமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலமும், திமுக தலைவர் அண்ணாவும் கலந்து கொண்டனர். அப்போதுதான் திருவள்ளுவர் பிறந்த நாளன்று அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் முன்மொழியப்பட்டது.
1966-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதியை (அன்று வைகாசி அனுஷம்) வள்ளுவர் தினமாகக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
1967-இல் நடைபெற்ற இரண்டாவது திருக்குறள் மாநாட்டில், ராயப்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தார் அதற்காக எம்.பக்தவத்சலத்துக்கும்
அண்ணாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முன்னதாக 1926-இல் தொடங்கப்பட்ட தென்காசி திருவள்ளுவர் கழகம் வைகாசி அனுஷ தினத்தைத்தான் திருக்குறள் தினமாகக் கருதி இருக்கிறது என்பதில் இருந்து, தொன்றுதொட்டு அதுதான் அவரது பிறந்த தினமாக இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகிறது. தவறு திருத்தப்பட்டு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷமாக மாறுவது எப்போது?
இந்த வாரத்தை முழுமையாகவே திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்குமே ஒதுக்கிவிடலாம் என்று தீர்மானித்தேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் வ.வே.சு. ஐயரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகத்தில் இருந்து கிடைத்த ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
இந்திய அரசு 1960-ஆம் ஆண்டிலேயே திருவள்ளுவருக்குத் தபால்தலை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. 1995 ஜனவரி 1 முதல் 5 வரையில் தஞ்சையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது, திருவள்ளுவர் உருவம் பொறித்த ரூ. 5 சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் முன்னோடியாக 1817-இல் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது.
1796-இல் சென்னை ராஜதானியில் ஆட்சித் தலைவராக இருந்தார் ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ். 'மின்ட்' எனப்படும் தங்கசாலையின் மேலாளராக இருந்த எல்லிஸ் துரை தமிழ் ஆர்வலர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முற்பட்டவர். 1807-இல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நாணயம் தயாரிக்கும் 'மின்ட்' அவரது மேற்பார்வையில் நிறுவப்பட்டது.
1616-இல் உருவான பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் 200-ஆவது ஆண்டைச் சிறப்பிக்க சில சிறப்புத் தங்க நாணயங்கள் வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தங்கசாலையின் தலைமைப் பொறுப்பில் எல்லிஸ் துரை இருந்ததால், திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட நான்கு தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் இரண்டு நாணயங்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும், இரண்டு கொல்கத்தா அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்படுகின்றன.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான வேடிக்கை, 1817-இல் கிழக்கிந்தியக் கம்பெனியார் தங்க நாணயங்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டனர்.
கவிஞர் தமிழ
கனின் 'கறுப்பு நதி' தொகுப்பில் இடம் பெறும்
இந்தக் கவிதை
வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
முடிவுகள் வந்த பின்னரே
வாழ்க்கைத் தேர்வின்
வினாத்தாள்
முன் வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகத் திருவிழா

வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 42- ஆம் ஆண்டு நிறைவு விழா

‘பெங்களூரில் ஜூலை 5இல் 7ஆவது உலக திருக்குறள் மாநாடு’
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்



