ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:03 am IST

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான உணவை உறுதி செய்யவும் ஐ.நா. சபை இந்தத் தினத்தை அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.

உணவு, விவசாய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இந்த நாளில் விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்த ஆண்டுக்கான (2026) மையக் கருத்து சுமையிலிருந்து தீர்வுவரை-எங்கும் பாதுகாப்பான உணவு' என்பதாகும். இந்த மையக் கரு உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களின் சுமையைக் குறைப்பதற்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.

உணவே மருந்து:

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளாகும். இருப்பிடமும், உடைகளும் கூட இல்லாமல் இருந்திடலாம். ஆனால், மனிதர்கள் உயிர் வாழ உணவு இன்றியமையாதது. அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரமும் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச் சத்தானது உணவில் கிடைப்பதால், உணவே மருந்து' என்பார்கள்.

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.' என்ற திருக்குறளும் உண்டு.

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளியை அளித்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை' என்பது இந்தக் குறளின் பொருள்.

உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே நஞ்சு' என்ற நிலை தற்போது காணப்படுகிறது. வீடுகளில் தயாரித்து உண்ணப்படும் உணவைத் தவிர, உணவகங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து பெறப்படும் உணவுகளின் பாதுகாப்பு நம்பகத் தன்மை வாய்ந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தரமற்றவை, காலாவதியானவை, சுகாதாரமற்ற சூழலில் தயாரிப்பு, உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் தூய்மைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் என உணவுப் பாதுகாப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

கல்வி நிலையங்கள், தொழிலகங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுகாதாரமற்ற உணவு விநியோகித்தது அல்லது அங்கு சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது போன்ற செய்திகளை அவ்வப்போது காண நேரிடுகிறது.

பாதுகாப்பற்ற உணவால் வயிற்றுப்போக்கு, புற்றுநோய் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நோய்களை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், தொற்றுகள், ஒட்டுண்ணிகள், ரசாயனப் பொருள்கள் இருக்கலாம்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் சுமார் 60 கோடி பேர் அசுத்தமான உணவை உட்கொண்ட பின்னர் நோய் வாய்ப்

படுகின்றனர். இதில் கணிசமானோர் உயிரிழக்கின்றனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள், மோதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

மனித ஆரோக்கியத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் தரமற்ற, பாதுகாப்பற்ற உணவுகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பிரச்னைகளுக்கான காரணங்கள்

சாலையோர உணவகங்கள், சிற்றுண்டிக் கடைகளில் திறந்தவெளியிலும், கழிவுநீர்க் கால்வாய்களின் அருகிலும் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாகவும், அவற்றை உண்பவர்களுக்கு சுகாதாரப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், காலாவதியான உணவுப் பொருள்களை மீண்டும் சூடேற்றி விநியோகித்தல், காலாவதியான அசைவப் பொருள்களில் உணவைத் தயாரிப்பது, பூச்சிகள் விழுந்துவிட்டால் அதை மட்டும் எடுத்துவிட்டு, உணவை விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளே தரமற்ற உணவுகளுக்குக் காரணங்களாக உள்ளன. ரயில் பயணிகளுக்காக உணவைத் தயாரிக்கும் கூடங்களில் பூச்சிகள் இறந்து கிடந்ததாகக் குற்றச்சாட்டுகள் பலமுறை எழுந்துள்ளன.

பாதுகாப்புக்கான வழிகள்

வீடுகளில் உள்ளவர்களும், நிறுவனங்களில் பணிபுரிவோர், கல்லூரி மாணவர்கள் உணவுத் தேவைகளுக்கு உணவு ஆஃப்' வழியில் பதிந்து, தங்கள் இடத்துக்கு உணவு விநியோகிப்பாளரை வரவழைக்கின்றனர். அந்த உணவிலும் பாதுகாப்பு உள்ளதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பொட்டலங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் அறிய வேண்டியது அவசியம். சிறிய, பெரிய, உயர்தர உணவகங்களில் உணவு தயாரிப்பு, பாத்திரங்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் சுகாதாரமான முறையில் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நிலையும் அவசியமாகிறது.

தரமற்ற உணவை உண்ட பின்னர், ஃபுட் பாய்சன் ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், அஜீரணம், ஒவ்வாமை, வயிற்றுவலி, குடல் பிரச்னை, வாந்தி, சோர்வு, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது.

இவையெல்லாம் வாடிக்கையாளர்களாலும், உணவக உரிமையாளர்களாலும் மாற்றிவிட முடியாது.

மத்திய, மாநில அரசுகள் தனிக் கவனத்தை எடுப்பது அவசியமாகிறது.

இனி செய்ய வேண்டியவை

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. சிறந்த நடைமுறைகளைத் தெரிந்துகொண்டு அனைவரும் ஒன்றிணைந்து உணவு மூலம் பரவும் நோய்களின் சுமையைக் குறைத்தால் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் பாதுகாப்பு, ஆரோக்கியம், சுகாதாரத்தையும் தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து, ஜூன் 7-இல் உணவுப் பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடலாம்.

இந்த நாளில் மட்டுமல்லாது, அனைத்து நாள்களிலும் இந்த விழிப்புணர்வை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது உணவு விற்பனை வியாபாரிகள், உணவகங்களில் சென்று சிறிய, பெரிய நிறுவனங்கள் என பாரபட்சம் காட்டாமல், அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான உணவு விநியோகம் குறித்து அறிவுறுத்தவும் வேண்டும்.

வீடுகளில் உணவு தயாரிக்கும்போது சுகாதாரப் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சுற்றுலா, பணிச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்வோரும், பல்வேறு காரணங்களால் குடும்பத்தைவிட்டு வெளியிடங்களில் இருப்போர் உணவகங்கள், விடுதி சிற்றுண்டிகள், கேண்டீன்கள், சாலையோர உணவு விற்பனை கடைகள் உள்ளிட்டவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

அவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.