இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகாபாரத காலங்களில் இருந்தே அறியலாம். அதிலும், இலங்கைத் தமிழர் மரபானது அகத்தியர் காலத்துக்கு முன்பாகவே இருந்ததற்கான ஆவணங்களை அந்த நாட்டு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அத்தகைய தமிழ் பாரம்பரியமிக்க இலங்கை மண்ணில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களால் தமிழர்களின் பாரம்பரிய ஆவணங்கள் பல அழிக்கப்பட்டன.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசு தற்போது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படியே பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் இலங்கைப் பயணம் அமைந்தது. இவர்களது பயணத்தைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள தமிழ் பாரம்பரிய அடையாளங்களின் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. அதன் முன்னோட்டமாக இலங்கையில் உள்ள தமிழ் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளை எழுத்து வடிவமாக்கி, நூல்களாக்கும் முயற்சியை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் முன்னெடுத்துள்ளது.
இந்திய-இலங்கை அறக்கட்டளை நிதியம் மூலம் இலங்கையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவப் பீடத்தைச் சேர்ந்தோர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளைப் படிக்கவும், படியெடுத்து எழுத்துருவில் அவற்றை மாற்றவும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 9 நாள்கள் அளிக்கப்பட்ட பயிற்சியில் திரிகோணமலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புல முதல்வர் மருத்துவர் கே.டி.சுந்தரேசன், சித்த மருத்துவப் பீடத்தின் துறைத் தலைவர் வ.அவரதன், முதுநிலை விரிவுரையாளரான மாத்தளையைச் சேர்ந்த கன.தர்ஷினி, நோய்நாடல் சிகிச்சைப் பிரிவின் தலைவருமான மட்டக்களப்புப் பகுதி கல்முனையைச் சேர்ந்த பாலமனோகரி உதயணன் ஆகியோர் பயிற்சியை முடித்தனர்.
பயிற்சியில் பங்கேற்றோரிடம் பேசினோம்.
மருத்துவர் கே.டி.சுந்தரேசன்
இலங்கையில் 1929- ஆம் ஆண்டே லங்கா சித்த மருத்துவ மையம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய அருங்காட்சியகத்தில் சுமார் 5 ஆயிரம் ஓலைச்
சுவடிகள் உள்ளன. இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரிந்தபோது, 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள் இருந்ததாகக் கணக்கிட்டிருப்பதுடன் அதில் 300 ஓலைச்சுவடிகள் தமிழ், சம்ஸ்கிருதம் சார்ந்தவையாக இருந்தது.
யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் அதிகமாக உள்ளன. அந்த ஓலைச்சுவடிகளில் பரராஜசேகரம் எனும் மன்னர் தொகுத்தளித்த ஓலைச்சுவடியே தற்போது பழமையான தமிழ் சித்த மருத்துவ ஓலைச்சுவடி நூலாகக் கருதப்படுகிறது. அந்த நூலில் 12 ஆயிரம் பாடல்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், அதில் 7 ஆயிரம் பாடல்களுக்கே அர்த்தம் கண்டறியப்பட்டுள்ளது.
பரம்பரை பரம்பரையாக சித்த மருத்துவம் பார்த்தவர்கள், அதற்கான ஓலைச்சுவடிகளை தங்கள் உயிரையும்விட மேலானதாகப் பாதுகாத்து வருகின்றனர். அதனால், அவர்களிடமிருந்து அவற்றை நம்மால் பெற்று தொகுத்து நூலாக்க எளிதில் முடியாத நிலையுள்ளது.
இலங்கைத் தமிழர் கல்வெட்டுகள் குறித்த முக்கிய ஆய்வுகளை பேராசிரியர் பத்மநாபன் மேற்கொண்டுள்ளார். இலங்கைத் தமிழர்களின் சித்த மருத்துவப் பாரம்பரியமும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கரோனா பாதிப்பு தொடங்கி, அண்மைக்காலமாகப் பரவும் நோய்களுக்கு நிரந்தரத் தீர்வு காண சித்த மருத்துவ முறை சிகிச்சை அவசியமாகிறது.
சித்த மருத்துவப் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் வித்யா தர்ஷினி:
திரிகோணமலைப்பகுதியில் அகத்தியர் வந்த பகுதியை கங்கை வழி' என அழைத்துள்ளனர். தற்போது கங்குவேலி' என மாற்றி அழைக்கின்றனர். அங்கு சித்தர்கள் அதிகமாக இருந்ததற்கான கல்வெட்டுகளும், ஓலைச்சுவடி ஆதாரங்களும் இருக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது அவசியமாகிறது.
சித்த மருத்துவப் பீட நோய் நாடல் பிரிவின் தலைவர் பாலமனோகரி:
இலங்கைத் தமிழர் கடைப்பிடித்த சித்தமருத்துவமுறையானது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியிருப்பதை பல்வேறு சித்த மருத்துவநூல்கள் மூலம் அறிய முடிகிறது. 2007- ஆம் ஆண்டு இலங்கையில் இரு பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவப் பிரிவு தற்போதுதான் தரம் உயர்த்தப்பட்டு சித்த மருத்துவப் பீடமாக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் பங்களிப்பு அதிகமாகும்.
சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன்
சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளில் யாப்பிலக்கண வடிவில் குறிப்புகள் இடம் பெற்றிருப்பதால், இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு தமிழ் இலக்கணத்தோடு, ஓலைச்சுவடிகளை வாசித்து பொருள் புரியும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான மொழி சார்ந்த பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் முனைவர் சே.கரும்பாயிரம்
தமிழ் பாரம்பரியத்தையும், ஆன்மிக கலாசாரப் பண்பாட்டையும் ஒருங்கிணைக்கும் சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் இலங்கையில் ஏராளமாக உள்ளன. அத்தகைய நிலையில், அதன் உள்ளடக்கத்தை அறியும் வகையிலான பயிற்சியே இலங்கை விரிவுரையாளர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி இலங்கைத் தமிழரின் சித்த மருத்துவப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
படங்கள்: ஆர். கிருஷ்ணராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரம்பரிய மருத்துவ சேவைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

முதுகுவலிக்கான முக்கிய காரணிகளும்! மருத்துவ ஆலோசனைகளும்! | அறிவியல் ஆயிரம்

2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்: தேசிய மருத்துவ ஆணையம்






