அறுபது விநாடிகளில் 61 பறவையினங்களை அடையாளம் கண்டு, அதன் பெயர்களைத் தெரிவித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி நிதன்யா.
குழந்தைப் பருவத்தில் இருந்தே பறவைகள் மீதான ஆர்வத்துடன் நிதன்யா இருந்தார். இதையறிந்த எம்.பி.ஏ. பட்டதாரிகளான அவரது பெற்றோர் அர்ஜூன், ஹரிதா இருவரும் ஊக்கப்படுத்தினர்.
சாதனை குறித்து ஹரிதாவிடம் பேசியபோது:
'நிதன்யாவுக்கு ஒன்றரை வயதிலேயே பறவைகள் மீது அதீத ஆர்வம் இருந்ததைக் கண்டேன். பறவைகளின் புகைப்படங்களைச் சேகரித்து அதனை நிதன்யாவுக்குக் காட்டி, அதன் பெயரை மட்டுமின்றி அதன் சிறப்புகளையும் விளக்கினேன். கைப்பேசியிலும், வீட்டில் உள்ள டிஜிட்டல் திரையிலும் பறவைகளின் விடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்தேன்.
பேசத் தொடங்கியதுமே பறவைகளின் ஒவ்வொரு பெயரையும் உச்சரிக்கத் தொடங்கினாள்.
நான்கரை வயதிலேயே 60 விநாடிகளில் 61 பறவையினங்களை அடையாளம் காட்டினாள். இவர் அடையாளம் காட்டியவைகளில் ஈமு கோழி, பென்குயின், கிவி ஆகியவை உயரப் பறக்க முடியாத பறவையினங்கள் என்பதால், அவை நீக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், 60 விநாடிகளில் 58 பறவையினங்களை அடையாளம் காட்டி கின்னஸ் உலகச் சாதனை படைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதற்கு முன்பாக 60 விநாடிகளில் 48 பறவையினங்களை அடையாளம் காட்டிய ஒன்பது வயதுச் சிறுவனின் சாதனையை நிதன்யா, தனது நான்கரை வயதில் முறியடித்துக் காட்டினார்.
தொடர்ச்சியாக, 60 விநாடிகளில் 60 பறவையினங்களின் பெயர்களை அடையாளம் கூறி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். பின்னர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதிவை திருச்சியில் நிகழ்த்திக் காட்டினார். இதற்கான சாதனை உறுதி செய்யப்பட்டு 2026 ஜனவரியில்தான் முடிவு அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில்தான் சான்றிதழும், பதக்கம் வந்து சேர்ந்தது.
நிதன்யாவின் விடாமுயற்சியே அவளுடன் இணைந்து என்னை இயங்கச் செய்தது. இணையவழியில் கர்நாடக சங்கீதமும் கற்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஓவியங்கள் வரைகிறார்'' என்கிறார் ஹரிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







