27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கண்ணே.. கண்ணே... கொஞ்சம் சிமிட்டு!

மனிதர்களுக்கு ஐம்புலன்களும் அவசியம்தான். அதிலும் கண்கள்தான் மெய்ப்பொருள் காணும் கருவி.

News image
Updated On :3 மே 2026, 4:01 am IST

தமிழானவன்

மனிதர்களுக்கு ஐம்புலன்களும் அவசியம்தான். அதிலும் கண்கள்தான் மெய்ப்பொருள் காணும் கருவி. பல நேரங்களில் கண்களோ பொய்ப் பொருளை விரும்பிப் பார்ப்பதால், பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எதைப் பார்த்தாலும் கண் சிமிட்டாமல் இருப்பதே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது. கண் பிரச்னையைச் சரி செய்ய எண்ணற்ற மருத்துவமனைகள், கிளினீக்குகள் இருந்தாலும், இலவசப்

பயிற்சியளிக்கும் வகையில் 'ஸ்கூல் பார் பெர்பெக்ட் ஐ சைட்' என்ற நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 1968- ஆம் ஆண்டில் இந்தப் பயிற்சி மையத்தை மருத்துவர் ஆர்.எஸ். அகர்வால் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர், ஸ்ரீஅன்னையின் முயற்சியால், இந்தப் பயிற்சி மையம் அரவிந்தர் ஆசிரமத்தின் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தூரப் பார்வை, கிட்டப் பார்வை என்று எத்தனையோ வகையில் சரியான பார்வையைத் தொலைக்கும் மனிதர்களுக்கு இந்த நிறுவனத்தினர் மனித நேயம் காட்டுகின்றனர். ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையிலும் கண் சிமிட்டுவதை அவர்கள் விளக்குகின்றனர்.

இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் சந்தோஷ் அம்மையார் கூறியது:

'இப்போதெல்லாம் கைப்பேசி, கணினி, பல்வேறு திரைகளைத் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் கண் பாதிப்பை சரிசெய்ய எங்கள் நிறுவனத்துக்கு வருகை தருவது அதிகரித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட நேரம் புத்தகம் வாசிப்போர் சரியான தூரத்தில் புத்தகத்தை வைத்து வாசிக்கவில்லையென்றாலும் கண் குறைகள் ஏற்படும். இந்தத் தூர இடைவெளி ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

தூரப் பார்வை, கிட்டப் பார்வை, புத்தகம் வாசிக்கும்போது ஏற்படும் பிரச்னைக்கான கண் பார்வை உள்ளிட்ட எல்லா வகையான கண் பிரச்னைகளையும் தீர்க்கும் வகையில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

'+' அல்லது '-' என்று எந்த வகையான கண்ணாடி அணிந்துள்ளவர்களும் இங்கு வரலாம். பெரும்பாலும் இங்கு வருபவர்கள் ஏற்கெனவே மருத்துவர்கள் அளித்திருக்கும் பரிந்துரைச் சீட்டுடன்தான் வருவார்கள். அது இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட நபருக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து விடுவோம்.

Story image

பயிற்சி முறை

பொதுவாக, 8 முதல் 10 வகையான பயிற்சியை 7 வயது முதல் 25 வயதுள்ள இருபாலருக்கும் அளிக்கிறோம். சிலருக்கு குறைகளைப் பொறுத்து பயிற்சிகள் மாறுபடும். கூட்டம் அதிகமாக இல்லையென்றால் மற்ற வயதினருக்கும் உதவி செய்கிறோம்.

கண் தசைகளில் ஏற்படும் தளர்வுகளைப் போக்கவும், வலுப்படுத்தவும்தான் பயிற்சி அமைகிறது. ஒரு வாரத்துக்கு அளிக்கப்படும் பயிற்சியை வீட்டுக்குச் சென்று ஒரு சில பயிற்சிகளைத் தொடருமாறு சொல்லிக் கொடுப்போம். நீண்ட நாள்களுக்குப் பயிற்சியைத் தொடர்ந்தால், முன்னேற்றம் ஏற்படும்.

கண்கள் மூடிய நிலையில் சூரிய சிகிச்சை, சாதாரண தண்ணீரில் கண்களைக் கழுவுதல், உள்ளங்கையால் கண்ணை மறைத்தல், கண்ணோடு தொடர்புடைய கை, கால்களில் உள்ள பகுதிகளில் அக்குபிரஷர், ஊசலாட்டம், பந்து பயிற்சி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அட்டை அல்லது புத்தகம் வாசித்தல், கண் அசைவுகள், மூடிய நிலையில் கண்களுக்கு நீராவி சிகிச்சை, மூடிய நிலையில் சாதாரண தண்ணீரில் நனைத்த துணி சிகிச்சை உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம். இந்தப் பயிற்சிகளின் போது கண்டிப்பாக கண் சிமிட்ட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

கோடைக்கால விடுமுறை நெருங்குவதால், பயிற்சிக்காக நிறையப்பேர் வருகை தருவார்கள். உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் இங்கு வரலாம். குறிப்பாக, சென்னை, பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகம் பேர் வருகின்றனர். அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகை அல்லது தனியாக அறை எடுத்துத் தங்கிக் கொண்டு இந்தப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

திங்கள்கிழமை விடுமுறை. மற்ற அனைத்து நாள்களிலும் காலை 8 முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 5 மணி வரையிலும் செயல்படும்.

கண் பிரச்னை உள்ளவர்கள் கீரைகள், முளைகட்டிய தானியங்கள், பால், ஆரஞ்சு நிறப் பழங்கள், கொட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் சந்தோஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.