40 நாள்களில் முப்பது லட்சம் பனை விதைகள் நடவு
நிலத்தடி நீரைக் காப்பதோடு, இயற்கைப் பேரிடர்களில் காக்கும் இயற்கை அரணான பனை மரங்கள் அளிக்கும் பயன்கள் எண்ணிலடங்காதவை.
சி. ராஜசேகரன்
நிலத்தடி நீரைக் காப்பதோடு, இயற்கைப் பேரிடர்களில் காக்கும் இயற்கை அரணான பனை மரங்கள் அளிக்கும் பயன்கள் எண்ணிலடங்காதவை. இதனால் பனையை 'மாநில மரம்' என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சிறப்புடைய பனை மரங்கள் 15 கோடிகளுக்கு மேல் இருந்தன. தற்போது ஐந்து கோடி அளவுக்கே உள்ளன. பனையைக் காக்கவும், வளர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், தொண்டு நிறுவனத்தினரும் பனை விதைகள் சேகரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
பனை விதைகள் சேகரிப்பைத் தொடங்கி, அதைப் பிரபலமாக்கியவர் 'கிரீன் நீடா' சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு. ராஜவேலு. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுடன் ஒரு கோடி பனை விதை நடும் இயக்கத்தைச் செய்து வரும் இவர், பனைக் காப்பாளராக அறியப்படுகிறார்.
செப். 23-இல் தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரையிலான 40 நாள்களில் சுமார் 30 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டு, அந்தத் தகவல் தமிழக அரசின் பசுமை இயக்க போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நீடாமங்கலத்தைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:
'சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 'கிரீன் நீடா' அமைப்பைத் தொடங்கி, குளம் தூர்வாருதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தோம். 2018-ஆம் ஆண்டில் கஜா புயல் வீசியபோது, பனை மரங்கள் மட்டும் சேதம் அடையவில்லை. பனை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சேதங்கள் குறைவாக இருந்தன. இதனால் பேரிடர் பாதிப்புகளைத் தவிர்க்க பனை மரங்களை வளர்ப்பது அவசியம் என்று அறிந்தோம்.
2019- ஆம் ஆண்டில் நீடாமங்கலம் அருகே கானூர் கிராமத்தில் 1,000 பனை விதைகளையும், 2020-இல் ரிஷியூர் ஊராட்சி, நீடாமங்கலம் முதல் வாழாச்சேரி வரை 12 கி.மீ. தொலைவுக்கு 25 ஆயிரம் பனை விதைகளையும், 2021- இல் துளசேந்திரபுரம் ஏரியைச் சுற்றி 50 ஆயிரம் பனை விதைகளையும் விதைத்தோம்.
2022- இல் நீடாமங்கலத்தில் பனைத் திருவிழாவை நடத்தினோம். 2023-இல் கிழக்குக் கடற்கரையில் 1,076 கி.மீ. தொலைவுக்கு 60 லட்சம் பனை விதைகளும், 2024-இல் காவிரிக் கரையோரத்தில் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை 40 லட்சம் பனை விதைகளும், 2025-இல் டெல்டா மாவட்டங்களில் 1.04 கோடி பனை விதைகளும், 2026-இல் தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளும் விதைத்துள்ளோம்.
இதன்தொடர்ச்சியாக, ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி இயக்கத்தை நிகழாண்டில் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாளான செப்டம்பர் 24-இல் காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கத்தில் அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்.
இந்த இயக்கத்தில் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், நாட்டு நலப்பணித் திட்டம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு, என்.டி.எஸ்.ஓ., வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், சிப்காட் ஆகியவற்றுடன் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளும் பனை விதை நடும் பணியில் பங்கெடுத்து வருகின்றனர்.
பனையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறியும் வகையில் நாட்டுநலப்பணித்திட்ட நாளில் தொடங்கினோம். இதில், பள்ளி, கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
பனையானது, மண் அரிப்பை தடுக்கவல்லது என்பதால், ஏரிகள், ஆறுகள், வாய்க்கால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களிலும், சாலையோரங்களிலும் பனை விதையை விதைத்து வருகிறோம். காஞ்சிபுரத்தில் அமைச்சர் தொடங்கிய நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நாட்டு
நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் பல்வேறு இடங்களில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
நாங்கள் பனைவிதைகளைச் சேகரித்து, அவற்றை வெறுமனே குழிகளில் நிரப்புவதோடு நின்று விடவில்லை. அதனை தமிழ்நாடு அரசின் பசுமை இயக்க போர்ட்டலில் பதிவு செய்கிறோம். மேலும், பனை விதைகள் கன்றுகளாகத் துளிர்த்து, மரமாக வளரும் வரை அவைகளைக் கண்காணித்து வருகிறோம்.
பனையைப் பாதுகாக்க வேண்டும் அரசின் அதிரடி நடவடிக்கையால் பனை மரங்களை வெட்டுபவர்கள் குறைந்துவிட்டனர். வணிக நோக்கத்துக்காகவும், செங்கல் சூளைகளுக்காகவும் முதிர்ந்த பனை மரங்களை வெட்டுவதை முழுமையாகத் தடுக்க
வேண்டும். பனை மரங்களைக் காக்கும் வகையில், பனைப் பாதுகாப்புப் படையை அமைக்க அரசு முன்வர வேண்டும். மேலும், கடுமையான சட்டங்களை இயற்றி, அனுமதியின்றி வெட்டுவோருக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
பனை மரங்களின் பயன்கள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் அவற்றின் பங்கு குறித்து விழிப்புணர்வு கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும். பனை மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதோடு, சிறிய பனங்கன்றுகளைப் பராமரிக்க வேண்டும்'' என்கிறார் ராஜவேலு.
பனையின் பயன்கள் ஏராளம்...
'பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது', 'காவோலையைப் பார்த்துப் பச்சையோலைச் சிரித்ததாம்', 'ஆயிரம் தென்னை சாய்ந்தாலும் ஒரு பனை சாய ஒரு வாரம் புயல் அடிக்க வேண்டும்', 'பத்து பனைமரங்கள் இருக்கும் இடத்தில் கிணற்று நீர் வற்றாது', 'பனைக்குப் பத்தடி ...' என்பவை பனையை வைத்துக் கூறப்படும் சொலவடைகளாகும்.
பனைமரங்கள் அடர்வனத்தில் இருப்பதைவிட மனிதர்கள் வாழும் பகுதியிலேயே இருக்கும். சராசரி 36 மீ. முதல் 42 மீ. வரை உயரமுடையது. வெள்ளம், புயல், சுனாமியைத் தாங்கும் சக்தியுடையவை. வறட்சியைத் தாங்கியும் வளரும். மணல், களிமண், உவர் மண் என எந்த மண்ணிலும் ஆணி வேர்த் தொகுப்பு இல்லாமல், சல்லி வேர் தொகுப்பு 60 அடியில் இருந்து 100 அடி வரை அகலத்திலும், 20 அடியிலிருந்து 30 அடி வரை ஆழத்துக்கும் செல்லும்.
நுங்கு, பதநீர், பனஞ்சாறு, பனங்கிழங்கு, பனம்பழம் எனப் பனையிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் ஏராளம். இவைகளிலிருந்து கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, ஒடியல் புட்டு, ஒடியல் கூழ் உள்ளிட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்க முடியும். கோடை காலத்தில் உடலின் மீது நுங்குவைத் தடவுவதால், வியர்க்குரு பாதிப்பைத் தடுக்கலாம். உடல் சூட்டைத் தணிக்கவும், குடல், வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் பதநீர் பயன்படுத்தப்படுகிறது.
பழங்காலத்தில் கூரை வேயவும், வீடுகளைக் கட்டவும் பனை மரங்கள் பேருதவியாக இருந்தன. மேலும், தட்டிகள், பின்னல், அலங்காரப் பொருள்கள், பனைஓலை, முறம், கூடை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் பிரபலமானவை.
பனை ஓலையின் ஆயுள்காலம் சுமார் 400 ஆண்டுகள் என்பதால், பழங்காலத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இன்னமும் பொக்கிஷங்களாகப் பாதுகாப்பாக உள்ளன.
சேர மன்னர்கள் பனம்பூ மாலையை அடையாளமாக அணிந்தனர். வள்ளல் பாரி பனையைத் தன் சின்னமாக வைத்திருந்தார். புற்றாளி, புற்பதி, போந்து, பெண்ணை, தாளி, தருவிராகன், கரும்புறம், காமம், தாலம், ஓடகம் என்று இலக்கியங்களில் பனை மரம் அழைக்கப்படுகிறது. பனை உண்மையில் மரமல்ல, அது புல்லினத்தைச் சேர்ந்தது எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
பனையோலைக் காத்தாடி, பனைஓலை மட்டையில் அமர்ந்து இழுப்பது, பனங்காய்களில் தள்ளு வண்டி செய்வது ஆகியன சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த விளையாட்டுகளாகும்.
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை எரிக்க பனையே பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் பானை துழாவுவதற்கு பனைமட்டை துடுப்புகள் பயன்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

