தண்ணீரை சேமிப்போம்!
சென்னையைச் சேர்ந்த 'எர்த்ஃபோகஸ்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், 130- க்கும் மேற்பட்ட கட்டடங்களில் தண்ணீர்க் கசிவைக் கண்டுபிடித்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கிறது.
சென்னையைச் சேர்ந்த 'எர்த்ஃபோகஸ்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், 130- க்கும் மேற்பட்ட கட்டடங்களில் தண்ணீர்க் கசிவைக் கண்டுபிடித்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கிறது. அருண் சுப்ரமணியன் - ரிஷிவந்தன் ஆகியோரால் 2019- ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நீர்- தொழில்நுட்ப நிறுவனம், வணிகக் கட்டடங்களில் நீர் நுகர்வைக் கண்காணிக்கவும், கசிவுகளைக் கண்டறியவும், ஆவியாதல் மூலம் இழக்கப்படும் நீரை மீட்டெடுக்கவும், அன்றாடப் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
அருண் சுப்ரமணியன் கூறியது:
'எங்கள் நிறுவனம் வாட்டர்ஓஎஸ், ஈக்கோவேப்யூர், வாட்டர்ஃபோகஸ் என்ற மூன்று யுக்திகளைக் கையாளுகிறது. பொதுவாக தண்ணீர்க் குழாய் நிமிடத்துக்கு சுமார் 10 லிட்டர் முதல் 12 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும். அந்த தண்ணீரை வாளியில் பிடிக்கும்போதோ அல்லது பயன்படுத்தும்போதோ... ஒன்று முதல் இரண்டு லிட்டர் நீர் வீணாகும். இதனை தடுக்க, நீரின் ஓட்டத்தை நிமிடத்துக்கு அரை லிட்டர் என்ற மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்கக் கூடிய 'நீர் திறப்பி'யை உருவாக்கினோம். தேவைப்படும் அளவு நீரை மட்டும் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
கரோனா காலத்தில் அடிக்கடி கைகளைக் கழுவுவது அவசியமானதால், இந்தத் தயாரிப்பு கவனத்தை ஈர்த்தது. 'காக்னிசன்ட்' போன்ற பெரு நிறுவனங்களிலிருந்து ஆர்டர்கள் கிடைத்தன. 'வாட்டர்ஓஎஸ்' முறை மூலம், கசிவுகள் பெரிய பிரச்னைகளாக மாறுவதற்கு முன்பே கண்டறிகிறோம். ஸ்மார்ட் சென்சார்கள் மூலம், கசிவுகளைக் கண்டுபிடித்து கசிவை நிறுத்துகிறோம்.
'ஈக்கோவேப்யூர்' முறை குளிரூட்டும் கோபுரங்களிலிருந்து தண்ணீரை மீட்டெடுக்க உதவுகிறது. அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் கோபுரங்கள், தண்ணீரை ஆவியாக அனுமதிப்பதன் மூலம் வெப்பத்தை அகற்றுகின்றன.
கேப்சர் தொழில்நுட்பம், கண்ணுக்குத் தெரியும் நீராவிப் புகையை உருவாக்கும் குளிரூட்டும் கோபுரங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் புகை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மேற்பரப்பின் மீது கடந்து செல்லும்போது, நீர்த்துளிகள் ஒன்றுகூடி நீராகி மீண்டும் குளிரூட்டும் அமைப்புக்குள் விழுகின்றன. அதனால் ஒரே தண்ணீர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. எர்த்ஃபோகஸ், குளிரூட்டும் கோபுரங்களிலிருந்து நீரை மீட்பதற்காக, கன்வெர்ட் என்ற இரண்டாவது அணுகுமுறையையும் உருவாக்கி வருகிறது.
'வாட்டர்ஃபோகஸ்'ஸின் நோக்கம், காற்றூட்டிகள் பொருத்தப்பட்டு குழாய்களில் நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதோடு, வலுவான நீரோட்டத்தையும் அளிக்கச் செய்து, குழாயில் நீர் பயன்பாட்டைக் குறைப்பதுதான். காற்றூட்டிகளைப் பொருத்தினால் மக்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களை மாற்றச் சொல்லாமலேயே... தண்ணீர் பயன்படுத்துவதை குறைக்கச் சொல்லாமலேயே பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறையும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

