மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

பயிர்களை கண்காணிக்கும் 'உழவன் விழி'

மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்பார்கள். அதை பெற்றோர் நிறைவேற்ற வழிகாணுவார்கள்.

ரோஹன்

Updated On :

மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்பார்கள். அதை பெற்றோர் நிறைவேற்ற வழிகாணுவார்கள். ஆனால், கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நெய்வேலியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ரோஹன், தனது தந்தை சக்திவேலுவுக்குச் சொந்தமான நிலத்தில் விளைந்த பயிர்களின் பூச்சித் தாக்குதலை நொடிப்பொழுதில் எச்சரிக்கவும், அதற்குத் தீர்வை வழங்கவும் 'உழவன் விழி' என்ற செயலியைக் கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவர் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் 12-ஆம் ஆண்டு தேசிய இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றுள்ளார்.

விருது பெற்ற மகிழ்ச்சியில் ரோஹன் கூறியது:

'எள் செடிகள் பூச்சிகள் பாதிப்பால் முழுவதும் சேதமடைந்ததை என் தந்தை கூறியது என்னை மிகவும் பாதித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்று விஞ்ஞானியாக வேண்டும் என்பது எனது கனவு.

இதற்காக சிறு வயது முதலே தேடல்களை ஆரம்பித்தேன். எனது ஜவஹர் பள்ளியில் உள்ள அடல் திங்கரிங் ஆய்வகத்தில் இதற்கான மின்னணுச் சாதனங்கள், அல்ட்ரா சவுண்ட் சென்சார்கள், அதன் பயன்பாடு குறித்துத் தெரிந்து கொண்டேன். அதை கோடிங் உதவியுடன் இணைப்பதைக் கற்றறிந்து, பயிர் பாதுகாப்புக் கருவியை உருவாக்கினேன்.

'இன்ஃப்ரா ரெட்' கதிர்கள் மூலம் பயிர்களை 2 ஏக்கர் பரப்பளவில் கண்காணிக்கும் கருவியை 7 அடி உயரக் கம்பத்தில் பொருத்திவிட்டால் போதும்... அதில் உள்ள சென்சார் கருவிகள் பயிர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும். பயிர்களில் சேதம் ஏற்பட்டால் உடனடியாக விவசாயியின் கைப்பேசிக்கு எச்சரிக்கை தகவல் சென்றுவிடும்.

இதற்காக நான் உருவாக்கிய 'உழவன் விழி' செயலியில் விவசாயியின் பயிர் பரப்பு வரைபடத்தில் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். என்ன நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதற்கு என்ன மருத்து பயன்படுத்த வேண்டும் என்ற தீர்வையும் அந்தச் செயலியில் கண்டறியலாம். இதை விவசாயிகள் ஒலி வடிவிலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

3 ஆண்டுகளில் இந்தக் கண்டுபிடிப்பை செய்தேன். இதற்கு ரூ. 5 ஆயிரம் வரையில் செலவானது. பள்ளியின் படிப்பு நேரத்துக்குப் பிறகும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ஆய்வுக்கு நேரத்தைச்செலவிட்டேன். இதற்கு எனது தந்தையும், தாயும் பக்க பலமாக இருந்தார்கள்.

சிறு கையடக்க செயற்கைக்கோள்

எனது அடுத்தகட்ட ஆய்வில் சிறு கையடக்க செயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். மல்டி ஸ்பெட்ரா கேமரா பயன்பாடுடன் இயங்கும் இந்தச் செயற்கைக்கோள் கடல் மட்டத்தின் 400 அடி உயரத்தில் இருந்து உழவன் விழி செயலிக்காகச் செயல்படும் வகையில் அமையும். இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் விஞ்ஞானிகளின் உதவி தேவைப்படுகிறது'' என்றார் ரோஹன்.

'ரோஹனின் ஆய்வுக்குத் தேவையான அடுத்த கட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்'' என ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் உறுதி அளித்தார்.

ரோஹனின் தந்தை சக்திவேல் கூறியது:

'நெய்வேலியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள சோலை கவுண்டபாளையம் கிராமத்தில் விவசாயம் செய்கிறேன். அங்கு நான் சந்திக்கும் பாம்புக் கடி, நீர்ப் பிரச்னை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை, சாதாரண முருங்கைக் கீரைக்கே பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது போன்ற விஷயங்களை எனது மகனிடனும், நண்பர்களிடமும் அவ்வப்போது பகிர்வேன்.

இவை எல்லாம் சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ரோஹன் மனதில் பதிந்து, விவசாயிகளுக்கான கண்டுபிடிப்புக்கு அச்சாரமிட்டது. உலகளாவிய பல்கலைக்கழகத்தில் எனது மகன் பயின்றாலும், அவனது பணி நம் நாட்டுக்காகவே இருக்கும்'' என்றார் சக்திவேல்.

நாடு முழுவதும் 2,000 மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில், நிகழாண்டு ரோஹனின் 'உழவன் விழி' செயலிக்கு விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் அமைப்பான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முதலிடம் வழங்கியது.

இதற்கான விருதை ரோஹனுக்கு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் வழங்கி, 'விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் கிராமங்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நகர மக்களிடம் இல்லாத பெரும் உந்துசக்தி அவர்களிடம் உள்ளது'' என்றார்.

படம் : ஏ.எஸ். கணேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.