இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

நெரிக்கப்படும் குழந்தைப்பருவம்

நவீன நாகரிகத்தின் அசுர வளர்ச்சியும், பெருநகர கலாசாரத்தின் போக்கும் நம் கண் முன்னே பல உண்மைகளைப் பலிகடாவாக்கி வருகின்றன.

Published On :

ஆந்தை குமார்

நவீன நாகரிகத்தின் அசுர வளர்ச்சியும், பெருநகர கலாசாரத்தின் போக்கும் நம் கண் முன்னே பல உண்மைகளைப் பலிகடாவாக்கி வருகின்றன. அதில் மிக முக்கியமானது குழந்தைகளின் நிம்மதியான மற்றும் இயற்கையான பருவம்.

புத்தகங்களின் சுமைக்கும், பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகளுக்கும் நடுவே நசுங்கிப்போகும் சிறுவர்களின் உலகத்தை கன்னடத் திரையுலகில் கடந்த 2006-இல் வெளியான துத்துரி' திரைப்படமும், தமிழின் தவிர்க்க முடியாத குரலான இயக்குநர் ராமின் இயக்கத்தில் திரைக்கு வந்த பறந்து போ' திரைப்படமும் மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளன.

கலை ரீதியாகப் பாராட்டுப் பெற்றாலும், வணிக லாபங்களின் கணக்கில் இதுபோன்ற படைப்புகள் ஏன் ஓரம் கட்டப்படுகின்றன, சமூகம் இதனை எப்படிக் கடந்து செல்கிறது என்பது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும்.

கன்னட மொழியில் துத்துரி' என்றால் ஊதுகுழல் என்று அர்த்தம். ஆனால், அத்திரைப்படம் பேசிய விஷயம் வெறும் இசையைப் பற்றியதல்ல; மாறாக, நசுக்கப்படும் குழந்தைகளின் மெளன அழுகையைப் பற்றியது. இயற்கையான கிராமப்புறச் சூழலையும், கான்கிரீட் காடுகளின் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் ஒப்பிட்டு, குழந்தைகள் எவ்வாறு இயல்பான உலகத்தை இழந்துவருகிறார்கள் என்பதை அப்படம் விரிவாகப் பேசுகிறது.

மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்ட தற்காலக் கல்வி முறை, சிறுவர்களின் கற்பனைத் திறனையும், ஆக்கபூர்வமான சிந்தனையையும் எப்படிக் கொல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அதேவேளையில், மண் வாசனை மாறாத விளையாட்டுகள், நண்பர்களுடனான பகிர்வுகள் மற்றும் கவலைகளற்ற தூக்கம் ஆகியவற்றை இன்றைய தலைமுறை குழந்தைகள் முற்றிலுமாக இழந்துவிட்டனர் என்பதை இப்படம் துயரத்துடன் பதிவு செய்தது.

குழந்தைகளின் உளவியலைத் தொட்டுச் சென்ற இத்தகைய படைப்புகள் வெறும் பொழுதுபோக்கைக் கடந்து ஒரு சமூக ஆவணமாக மாறின. அதனால்தான், அண்மையில் (2026 ஆகஸ்ட்) தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக இப்படம் கல்வித்துறை சார்பில் திரையிடப்பட்டது. குழந்தைகளின் விளையாட்டு உரிமையை இப்படம் வலியுறுத்தியது.

இதேபோன்று இயக்குநர் ராம் இயக்கியுள்ள பறந்து போ' திரைப்படம், தந்தை-மகன் உறவின் வழியே இன்றைய குழந்தைகளின் உளவியல் சிக்கல்களைக் கண்முன்னே நிறுத்தியது. குழந்தைகள் பறக்க விரும்புவது திறந்த வெளியில்; ஆனால், சமூகம் அவர்களைப் பாதுகாப்பற்ற முட்கம்பிகளாலான கூண்டுகளில் அடைக்க முயல்கிறது. இந்த முரண்பாட்டை ராம் தனது தனித்துவமான இயக்கத்தில் மிக ஆழமாக வெளிப்படுத்தியிருப்பார். கல்வி வணிகமயமாக்கப்பட்ட ஒரு சமூகத்தில், குழந்தைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை அப்படம் மிகக் கூர்மையாக விமர்சித்தது.

இத்தகைய அரிய படைப்புகள் ஏன் வெகுமக்களிடம் உரிய அங்கீகாரம் பெறுவதில்லை என்ற கேள்வி சில தரப்பில் மட்டும் எழுகிறது என்பதுதான் சோகம். ஹாலிவுட் தொடங்கி எல்லா திரையுலகமும் இன்று முழுக்க முழுக்க ரூ. நூறு கோடி வசூல் கிளப்ப, ரத்த சகதியில் அதிரடிச் சண்டை மற்றும் பொழுதுபோக்கு சூத்திரங்களை மட்டுமே நம்பியுள்ளன. சமூகத்தை விழித்தெழச் செய்யும் கலைப் படங்களுக்குத் திரையரங்குகளில் உரிய காட்சிகளும் நேரமும் மறுக்கப்படுவதும், பார்வையாளர்களின் ரசனை ரீதியான சுருக்கமும் இதுபோன்ற அரிய படைப்புகளின் வெற்றியைப் பறித்துவிடுகின்றன.

ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களின் அதிவேக ரீல்ஸ் கலாசாரத்துக்கு அடிமையாகிவிட்ட இன்றைய தலைமுறை பார்வையாளர்கள், சற்று நிதானமாக உட்கார்ந்து சிந்திக்க வைக்கும் உணர்வுபூர்வமான கதைகளைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டனர்.

ஒருகாலத்தில் பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களின் படங்களில் குழந்தைகள் இயற்கையான பாத்திரங்களாக வலம் வந்தனர். அது மட்டுமின்றி குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகளும், அவர்களின் உலகத்தை முழுமையாகப் பிரதிபலிக்கும் படைப்புகளும் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் உலகத்தையும் அவர்களின் உளவியலையும் வணிகத் திரைவட்டத்தைத் தாண்டி மிக ஆழமாகப் பதிவு செய்ததில் மணிரத்னத்தின் இயக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குடும்பச் சூழலை உணர்வுபூர்வமாகப் பேசிய அஞ்சலி', கிராமத்துப் பள்ளிக்கூடத்துச் சிறுவர்களின் எதார்த்தமான நட்பு மற்றும் சண்டைகளைப் பாண்டிராஜ் பாணியில் தத்ரூபமாக மீட்டுக் கொண்டுவந்து தேசிய விருதுகளை வென்ற பசங்க', குடிசைப் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் பிட்சா சாப்பிட ஆசைப்படுவதைக் கொண்டு வறுமைக்கும் குழந்தைகளின் கனவுகளுக்கும் இடையேயான யதார்த்தத்தைப் பேசிய மணிகண்டனின் காக்கா முட்டை', ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பையும் இன்றைய கல்வி முறை குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தையும் மிக ஆழமாக விவரித்து தேசிய விருதைப் பெற்ற ராமின் தங்க மீன்கள்' போன்ற படங்கள், தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த அரிய பொக்கிஷங்களாக இன்றும் நிலைத்து நிற்கின்றன.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் வணிகக் கணக்கீடுகள் அந்த மரபை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிட்டன. முன்னரே சொன்ன கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் திரையரங்கச் சந்தையும், எளிமையான உணர்வுபூர்வமான கதைகளைக் காட்டிலும் அதிரடித் திரைப்படங்களை ஊக்குவிக்கும் சூழலும், குழந்தைகளை மையப்படுத்திய கலை வடிவங்களுக்கு மரண அடி கொடுக்கின்றன.

மேற்படி துந்துரி' மற்றும் இயக்குநர் ராமின் பறந்து போ' போன்ற படங்கள் வெறும் வசூல் ரீதியான தோல்வியை மட்டும் சந்திக்கவில்லை; மாறாக, நல்ல படைப்புகளை அடையாளம் காணத் தவறிய தமிழ்ச் சமூகத்தின் ரசனை வறட்சியையே அவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ அனுமதிக்கும் சமூகச் சூழலை உருவாக்குவதே, காலத்தின் கட்டாயமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.