திரைப்படப் பாடலின் தந்தை உடுமலை நாராயணகவி

தமிழ்நாட்டில் பேசும்படம் பிறந்து சற்று வளர்ந்த காலம் 1931. அதையொட்டி 1934-ஆம் ஆண்டு முதல் சினிமா பாடல் எழுதத்தொடங்கி விட்டவர் நாராயணகவி. திரைப்படப் பாடலாசிரியராகவும், நாடக எழுத்தாளராவும் விளங்கியவர்.
திரைப்படப் பாடலின் தந்தை உடுமலை நாராயணகவி

தமிழ்நாட்டில் பேசும்படம் பிறந்து சற்று வளர்ந்த காலம் 1931. அதையொட்டி 1934-ஆம் ஆண்டு முதல் சினிமா பாடல் எழுதத்தொடங்கி விட்டவர் நாராயணகவி. திரைப்படப் பாடலாசிரியராகவும், நாடக எழுத்தாளராவும் விளங்கியவர். அற்புதமான சீர்திருத்தப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்.

 ÷நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் என்றால், "திரைப்படப் பாடலின் தந்தை' உடுமலை நாராயணகவி எனத் துணிந்து சொல்லலாம். கவிஞர் கம்பதாசனுக்கு முன்னாலேயே சமதர்மக் கொள்கைகளைத் தம் பாடல்வழி பரப்பியவர். நீண்ட காலம் திரைத்துறையைத் தம் கைக்குள் அடக்கி வைத்திருந்தவரும் இவரே.

 ÷கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம்-பூளாவாடி கிராமத்தில் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பிறந்தார்.

 ÷இவருடைய தாய்-தந்தையர் இளமையிலேயே இறந்துவிட்டதால், இவர்தம் சகோதரரால் வளர்த்து ஆளாக்கப்பட்டார். இளமையில் மிகுந்த வறுமையில் வாடிய இவர், தீப்பெட்டி விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றினார்.

 ÷ திரையுலகுக்கு வரும் முன்னர், இவர் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக கவிதைகளை எழுதி வெளியிட்டார். இளம் வயதிலேயே கவிதைகள் எழுதியதோடு நாடகங்களிலும் நடித்து வந்தார்.

 ÷உள்ளூர் கோயில் திருவிழாவின்போது மேடை நாடகங்கள் நடத்தி நடித்தும் இருக்கிறார். நாடகக்குழு ஒன்றில் சேர்ந்து நடித்ததோடு பாடவும் செய்தார்.

 ÷"கவிராயர்' எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப்பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள் என்பது ஒன்றே இவரது புகழுக்குச் சிறந்த சான்றாகும். அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் இவர்.

 ÷வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, பராசக்தி, மனோகரா ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய இவர், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத் தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதி பராசக்தி, தேவதாஸ் ஆகிய திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

 ÷தொடக்க காலத்தில் ஆன்மிகப் பாடல்களை எழுதிய இவர், பின்னர் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி, அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பினார்.

 ÷கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு, "கிந்தனார்' கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ 10,000 பாடல்கள் எழுதியுள்ளார். இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். எதையும் தாங்கும் இதயம் படைத்தவர், பிறருக்கு உதவுகின்ற நல்ல மனம் படைத்தவர். திரையுலகில் தனக்கென ஒரு தனி மதிப்பையும் புகழையும் உண்டாக்கிக் கொண்டவர்.

 ÷அன்றைய காலகட்டத்தில் திரைப்படம் பிறந்து வளர்ந்து வரும் நிலையில் அதை வளரச் செய்த பெருந்தகையாளர். இவரைப் பண்பின் சிகரம் என்றே சொல்லலாம்.

 ÷அந்நாளில், மாடர்ன் தியேட்டர்ஸýக்கும் நிறையப் பாடல்களை எழுதித்தந்தார்.

 ÷இப்போதெல்லாம் பாடல்களே இல்லை; இசைதான் இருக்கிறது. அதுவும் மேலைநாட்டுக் கணினியில். ஆனால், அன்று பாடல்கள் இருந்தன; இசை இருந்தது; இனிமையாக இருந்தது. அதனால்தான் அன்றைக்கு எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன.

 ÷1954-ஆம் ஆண்டில் "இரத்தக்கண்ணீர்' படத்தில் இவர் எழுதிய "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?' என்ற பாடலை முணுமுணுக்காதவர்களே கிடையாது. 1956-ஆம் ஆண்டு வெளியான "மதுரை வீரன்' படத்தில் உழைப்பவர்களுக்கெனப் பாடிய "சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்' என்ற பாடல் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு மாபெரும் புரட்சி செய்த பாடலாசிரியர்களுள் இவரே முதன்மையானவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்களே!

 ÷கவிஞர் உடுமலை நாராயணகவி 1952-ஆம் ஆண்டில் "விவசாயி' படத்தில்,

 ""நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்

 நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்''

 என்னும் பாடலில்,

 ""பார்முழுதும் மனிதகுலப் பண்புதனை விதைத்து

 பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து

 போர் முறையைக் கொண்டவர்க்கு

 நேர் முறையை விதைத்து''

 என்றெல்லாம் கருத்து விளைச்சலை விதைத்து மானுடப்பயிரை வளர்ப்பதற்கு நற்பணி செய்துள்ளார். புதிய உத்திகளைக் கையாண்ட கவிஞர் உடுமலை நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.

 ÷தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த உடுமலை நாராயணகவி, நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டடார்.

 ÷"பில்லி, சூன்ய' விவகாரங்களைக் கூடக் கண்டித்துப் பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இவர் பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவராக இருந்தபோதும், இவர்தம் பாடல்களில் மொழிப்பற்று, இனப்பற்று, மனிதப்பற்று நிறைந்த பாடல்களைப் புனைந்துள்ள கவிஞரை கொங்கு மண்டலத்தின் கிடைத்தற்கரிய மாமணி என்றே சொல்லலாம்.

 ÷உடுமலை நாராயணகவியின் குரு, உடுமலை முத்துசாமிக் கவிராயர். நாராயண கவிக்கு தமிழ் இலக்கணப் பயிற்சி அளித்தவர்களுள் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர்.

 ÷உடுமலை நாராயணகவிக்கு இரண்டு பெருமைகள் உண்டு. முதலாவது, சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவையோடு சொன்ன பாடலாசிரியர் இவர் ஒருவரே. அடுத்து, திருக்குறள் சிந்தனைகளை தமிழ்த் திரைப்படப் பாடல்களில் அதிகம் கலந்து பிரசாரம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு.

 ÷தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், இவர் பெயரால் "உடுமலை நாராயண கவி மணிமண்டபம்' ஒன்றை அமைத்தது. இங்கு உடுமலை நாராயண கவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக இடம்பெற்றுள்ளன.

 ÷இவர்தம் 82-வது வயதில், 1981-ஆம் ஆண்டில் காலமானார்.

 ÷31.12.2008-ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல்துறை இவருக்கு "நினைவு அஞ்சல்தலை' வெளியிட்டது. அந்நாளில் பெரிய திரைப்படத் தயாரிப்பாளராக விளங்கிய சி.எஸ்.ஆர்.சுப்புராமன், திரையுலகில் இவருக்குப் பேராதரவு தந்து, இவரின் திரையுலக வளர்ச்சிக்கு மிகவும் துணைபுரிந்ததை இவர் கடைசிவரைக்கும் மறவாமல் அவர்பால் நன்றி பாராட்டி வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com