இந்த வார கலாரசிகன்
நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடக்கூடாது என்பார்கள். ஆனால் என்ன செய்வது? கடலலைபோல, ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவது வேலை வந்துவிடுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்னால், மூன்று சிறு புத்தகங்களுடன் ஒரு கடிதத்தையும் இ


நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடக்கூடாது என்பார்கள். ஆனால் என்ன செய்வது? கடலலைபோல, ஒன்றன் பின் ஒன்றாக ஏதாவது வேலை வந்துவிடுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்னால், மூன்று சிறு புத்தகங்களுடன் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார் திருமதி ராஜேஸ்வரி நடராஜன். தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் புதல்வி.
அந்தப் புத்தகங்களையும் கடிதத்தையும் பார்வை படும் இடத்தில் மேஜையில் வைத்துக்கொண்டேன். ஒன்றுக்குப் பத்து முறை அந்தப் புத்தகங்களைப் படித்தாகிவிட்டது. ஆனால், கடிதத்துக்குப் பதில் எழுதத்தான் இன்றுவரை முடியவில்லை. அடையாறு சாஸ்திரி நகரில்தானே வசிக்கிறார், நேரில் போய் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்துக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர சந்திக்க முடியவில்லை. மிக அருகில் ஆனால், மிகத் தொலைவில் என்பார்களே, அப்படி.
அவர் அனுப்பி இருந்த புத்தகங்களில் ஒன்று, நண்பர் பாஸ்கரத் தொண்டைமானுக்கு ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள். ரசிகமணி டி.கே.சி. ராஜேஸ்வரி நடராஜனுக்கு எழுதிய பேசும் கடிதங்கள் இன்னொன்று. கடிதம் எழுதுவது என்கிற நல்ல வழக்கத்தையே மின்னஞ்சலும், செல்பேசியும் அறவே அழித்துவிட்டன.
கடிதம் எழுதிவிட்டு பதிலுக்குக் காத்திருப்பதுகூட ஒரு சுகம். மின்னஞ்சலில், அந்த சுவாரஸ்யம் அறவே இல்லாமல் போய்விடுகிறது. ரசிகமணியின் கடிதங்களைப் படிக்கும்போதுதான் தெரிகிறது கடிதங்கள்கூட இலக்கியம்தான் என்பது.
டி.கே..சியின் அடி ஆழங்களையும், அவரது ஆளுமையினையும் அவரது கடிதங்களில்தான் காணமுடியும் என்கிற ஜஸ்டிஸ் மகாராஜனின் கூற்று நூற்றுக்கு நூறு நிஜம். ரசிகமணியின் கடிதங்கள் ஒருபுறம் இருக்க, ரசிகமணியின் "வட்டத்தொட்டி' பற்றி ராஜேஸ்வரி நடராஜன் தமது முன்னுரையில் செய்திருக்கும் பதிவு அதைவிட அருமை.
இன்றைய தலைமுறைக்கு அன்றைய வட்டத்தொட்டி பற்றித் தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று கேட்பவர்களுக்கு எனது பதில் - ஊருக்கு ஊர் அதுபோல "வட்டத்தொட்டி' அமையுமானால், மெகா சீரியல்களிலிருந்தும், வெட்டி அரசியல் வம்பளப்புகளிலிருந்தும் விடுபட்டு, உருப்படியான இலக்கியச் சர்ச்சைகள் நடைபெறுமே என்கிற நப்பாசைதான்.
ரசிகமணியின் வண்ணாரப்பேட்டை வீட்டில் ஒரு முற்றமாக இருந்த வட்டவடிவமான தொட்டுக்கட்டு அமைப்பில் டி.கே.சி.யின் அன்பர்கள் மாலை வேளைகளிலும், விடுமுறை நாள்களிலும் கூடுவார்கள். கல்லூரி மாணவர்களில் தொடங்கி, அறுபது வயதைக் கடந்த பெரியவர்கள் வரை இதில் கலந்து கொள்வார்கள். அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் என்று வட்டத்தொட்டிக்கு வளம் சேர்த்தவர்கள் பலர். எல்லோருக்கும் செவிக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கும் ருசியான விருந்து படைக்கப்படும்.
வட்டத்தொட்டிக்குத் தலைவரும் ஸ்தாபகரும் ரசிகமணி என்றாலும், இந்த "வட்டத்தொட்டி' அமைப்பதற்கும், தொடர்ந்து செயல்படுவதற்கும் உந்து சக்தியாக விளங்கியவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்தான். அரசு உயர் அதிகாரியாக இருந்த பாஸ்கரத் தொண்டைமான், எந்த ஊருக்கு மாற்றலாகிப்போனாலும் அங்கேயும் வட்டத்தொட்டியின் சிறப்புக் கூட்டம் கூடுவதுண்டு.
ரசிகமணியின் நண்பர் வட்டம் மிகப்பெரியது. ராஜாஜி, திருப்புகழ் மணி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, திவான் பகதூர் ஆவுடையப்பப் பிள்ளை, பேராசிரியர் கல்கி, வழக்கறிஞர் பால்நாடார், ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு, பெரியசாமித்தூரன் என்று அந்த நண்பர் குழாம் வட்டத்தொட்டியிலும் பங்கு பெறுபவர்கள். அந்தக் காலத்தில் இல்லாமல் போய்விட்டோமே என்கிற ஆதங்கம் எனக்குக் கொஞ்ச நஞ்சமல்ல.
ராஜேஸ்வரி நடராஜனுக்கு பதில் எழுத முடியாத எனக்கு இதையெல்லாம் எழுத முடிகிறதே என்று கேட்டு விடாதீர்கள். ஒரு வகையில் இதுவேகூட பதில்தான். தபால் செலவு மிச்சம்!
******
தர்மபுரியில் எனக்கு ஓர் அற்புதமான நண்பர் கிடைத்திருக்கிறார். அவரை மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த ஒரு விழாவில்தான் முதலில் சந்தித்தேன். சிலரைப் பார்த்த மாத்திரமே பிடித்துவிடுகிறது. ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு. இவருடனான எனது நட்பும் அப்படிப்பட்டதுதான். அந்த நண்பர் வேறு யாருமல்ல, தர்மபுரி தமிழ்ச்சங்கச் செயலாளர் டாக்டர் கூத்தரசன்.
தர்மபுரி சென்று விட்டால் இவரது விருந்தோம்பல்தான். அவரது வீட்டிலிருந்து வரும் மல்லிகைப் பூப்போன்ற இட்லிக்காகவும், காரசாரமான இட்லிப் பொடிக்காகவும் அடிக்கடி தர்மபுரி சென்று வந்தால்கூடத் தவறில்லை.
டாக்டர் கூத்தரசன் லேசுப்பட்டவர் அல்ல என்பதை அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த அவரது தந்தை தகடூராரின் சிறுகதைத் தொகுப்பான "சேறும் சோறும்' புத்தகத்தைப் படித்தபோது தெரிந்துகொண்டேன். ஒரு சமூக சிந்தனாவாதியின் மகன் என்பதைவிடப் பெரிய பாக்கியம் உலகில் என்னதான் இருக்க முடியும்?
கா.சி. கிருட்டிணன் என்பதுதான் தகடூராரின் இயற்பெயர். "தகடூரான்' என்ற புனைபெயரில் சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நாடகங்கள், இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், சுயமுன்னேற்ற நூல்கள் பல படைத்த சிறந்த படைப்பாளர் அவர்.
தனது தந்தையாரின் படைப்புகளை ஆண்டுதோறும் தொகுத்து வெளியிடுகிறார் அவரது மகன் கூத்தரசன். 33 சிறுகதைகள் அடங்கிய "சேறும் சோறும்', பல வார, மாத இதழ்களில் 1970 முதல் 1995-ஆம் ஆண்டுவரை வெளியான தகடூராரின் படைப்புகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் எந்த இதழில் பிரசுரமானது என்கிற விவரத்தையும் இணைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
******
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உந்துதலே இல்லாமல் சமூகத் தொண்டாற்றி வருபவர் பலர். இவர்கள் இருப்பதால்தான் மழை பெய்கிறது. இன்றும் சமுதாயத்தில் தர்மம் நிலை பெற்றிருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டியவர் சேலம் ரா.ஜானகிராமன்.
""நல்லதைப் பற்றிச் சிந்திப்பதும் நல்லதை எடுத்துச் சொல்வதும் அறச்செயல்கள். ஆதலால் நல்லதையே சிந்திப்போம்; நல்லதையே சொல்வோம்'' என்பதைத் தனது வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு செயல்படுபவர் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ரா.ஜானகிராமன்.
அப்படி இவர் என்னதான் செய்கிறார் என்றா கேட்கிறீர்கள்? தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஒரு தொகுப்பு நூலை ஆண்டுதோறும் அன்பளிப்பாக வெளியிடுகிறார். இதன் மூலம் இதுவரை 41 படைப்பாளிகளை அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த விவரமெல்லாம் "சிந்தனை வயல்' என்கிற அந்தத் தொகுப்பு, புத்தக மதிப்புரைக்காக வந்தபோதல்லவா தெரிகிறது.
இளம் படைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதுடன் நின்றுவிடுவதில்லை ஜானகிராமன். உணவுப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதுபோல விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா, பெரும்பான்மையாக ஏழைகளும், நடுத்தர மக்களும் வாழும் நமது நாட்டில் ஏன் மக்கள் பெரும் பணக்காரர்களையே தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள், பொருளாதார வளர்ச்சிதான் உண்மையான மனிதகுல வளர்ச்சியா? - என்பதுபோன்ற 10 கேள்விகளை சமுதாயத்தின் முன் வைத்து, அதற்கான பதில்களை இளைஞர்களிடமிருந்து பெற்றுத் தமது "சிந்தனை வயலி'ல் பிரசுரிக்கிறார்.
விமர்சனத்துக்கு அனுப்பித் தரப்பட்டிருக்கும் ரா.ஜானகிராமனின் "சிந்தனை வயல்' தொகுப்பில், "சுற்றுச்சூழல்' பற்றி சா.சுல்தான் இப்ராஹிம் எழுதியிருக்கும் ஒரு கவிதை -
வெட்டப்பட்ட மரங்களால்
வெப்பமானது புவிப்பந்து
துளிமழையும் நனைக்கவில்லை
துயருண்ட விளை நிலத்தை...
தொழிற்சாலைப் பெருக்கத்தினால்
சுருங்கிப் போனது சுவாசக்காற்று
பாலித்தீன் குப்பைகளால்
பலியாகும் வனவிலங்கு
பட்டியலோ நெடுந்தொடராய்...
ஓசோனில் ஓட்டையிட்டும் ஓயவில்லை
மண்ணில் மாசோட்டம்
தொழிற்நுட்ப வளர்ச்சியென
தொலைக்கிறோம் இயற்கையினை
இழந்தபின் இயலுமா
சுற்றுச்சூழலைச் சீரமைக்க....?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...