என்று ஆன்றோர் கூறிய பொருள் சிற்சில மொழிகளை ஒப்பிட்டு நோக்குவார்க்கும் இனிது விளங்கும். பண்டைக் காலந்தொட்டு நூல் வழக்கினும் உலக வழக்கினும் திருத்தமடைந்து மக்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வனவாய்ப் போதரும் பழைய மொழிகள் சிலவேயாம். இப்பழைய மொழிகளுள் தமிழ்மொழியை ஒழித்து ஒழிந்தவற்றிற் பெரும்பாலன உலகவழக்கின்றி இறந்தொழிந்தன. தீஞ்சுவை விளைக்கும் முப்பழத்தினும் இனிய மெல்லிய ஓசை இன்பம் வாய்ந்த செந்தமிழ் மொழியோ, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன் இளமை கெடாது கழிபெரு மகிழ்ச்சியோடும் உலவி வருதலை உற்று நோக்குங்கால் அதனை வழங்கிவந்த நன் மக்கள் எவ்வளவு நுண்ணறிவும், எவ்வளவு அமைதியான தன்மையும், எவ்வளவு நாகரிகமும் உடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதை அறிகின்றோம்.