தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜபண்டிதர் இலக்கண இலக்கியப் பெரும்புலவர்களான விசாகப்பெருமாள் ஐயர், சரவணப்பெருமாள் ஐயர் ஆகியோரின் மாணாக்கர்களுள் ஒருவர். அப்பெரும்புலவர் இருவரும் சென்னை மாநிலக் கல்லூரி பள்ளிக்கூடமாக இருந்த காலத்தில் அதில் பணியாற்றியவர்கள். சந்திரசேகர கவிராஜபண்டிதர் பல்லாண்டுகள் சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியார் ஓய்வுபெற்ற பின் ஆறுமாத காலம் கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்துள்ளார். அவர் உ.வே.சாமிநாதையரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். "தமிழ்த் தாத்தா' தம் ஐயங்கள் சிலவற்றை அவரிடம் கேட்டறிந்தது உண்டு என்று குறித்துள்ளார் என்றால், அவர் எப்படிப் பட்ட அறிஞர் என்பதனைச் சொல்லவும் வேண்டுமா?
சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்குப் பழம் புலவர்களின் வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் மிகுந்த ஆர்வம். பல்லாண்டுகள் உழைத்துத் "தனிப்பாடல் திரட்டு' ஒன்றை வெளியிட்டார். அத்திரட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஒன்று "ஊரைச் சுடுமோ' என்பது. அவர் மிகவும் முயன்று சேகரித்துப் பதிப்பித்த பாட்டு அது.
அது குறித்து உ.வே.சா. எழுதியுள்ள "பிச்சைப்பாட்டு' என்னும் கட்டுரையில் தெரிவிக்கும் செய்திகள் சுவையானவை.
"கவிராஜ பண்டிதர் வடசென்னைப் பகுதியில் வண்ணார்பேட்டையில் சஞ்சீவிராயன் தெருவில் வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் ஓரளவு தமிழ் அறிந்த இராப் பிச்சைக்காரன் ஒருவன் தெம்மாங்கு, வெண்ணிலாப் பாட்டு, பராபரக்கண்ணி முதலிய தமிழ்ப் பாட்டுகளைப் பாடிப் பிச்சை கேட்பது வழக்கம். அன்று பால்போல் நிலவொளி காய்ந்து கொண்டிருந்தது. அவன் நிலவு பற்றிய பாடல் ஒன்றை இசையோடு பாடிச் சென்றான். "ஊரைச் சுடுமோ' என்னும் தொடரையே திரும்பத் திரும்பப் பாடியபடி அடுத்தத் தெருவிற்குள் நுழைந்தான். அத்தொடரைக் கேட்டு மயங்கிய கவிராஜ பண்டிதர் அவனைத் தொடர்ந்து சென்று பாட்டு முழுவதையும் சொல்லுமாறு வேண்டினார். அவன், "உலகந் தனைச்சுடுமோ; ஆரைச் சுடுமோ அறியேனே' என்னும் அடுத்த இரண்டு தொடர்களைப் பாடினான்.
அதற்குமேல் பாட்டு நினைவுக்கு வரவில்லை. அவன் பாடியதைக் கொண்டு அப்பாட்டு ஓர் இனிய வெண்பா என்பதனை உணர்ந்தார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லையே என்று அவர் உள்ளம் ஏங்கியது. எஞ்சிய பகுதி நினைவுக்கு வந்தால் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். அவனும் "சரி'யென்று தலையாட்டிவிட்டுச் சென்றான்.
நான்கு நாள் கழிந்திருக்கும். அவன் பாட்டு முழுவதையும் பாடியவாறு பிச்சைகேட்டு வந்தான். அவருக்குப் புதையல் கிடைத்தது போல் மகிழ்ச்சி; பரிசு கொடுத்து அவனைப் பாராட்டினார்.
""ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா''
என்பதே அப்பாட்டு. பின்பு அதனைத் தாம் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டில் சேர்த்துக் கொண்டார். அது காதலுற்ற பெண்ணொருத்தியின் பேச்சு. "மலை போன்ற வட்டமான மார்பகங்களைக் கொண்ட மங்கையர்களே, நெருப்பை வீசும் இந்த வட்டமான நிலவு ஊர் மக்களைச் சுடுமா? உலகத்தில் உள்ளவரையே எரித்துவிடுமா? யாரைச் சுடுமோ தெரியவில்லையே?' என்று தன் தோழியைப் பார்த்து வினவுகிறாள். "இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலவொளியை வெறுத்துக் கூறியது' என்று பாட்டு எழுந்த சூழலை உ.வே.சா., குறித்துள்ளார். யார் பாடியது என்னும் குறிப்பு அப்பொழுது தெரியவில்லை போலும்!
1945-ஆம் ஆண்டையொட்டி, உலகநாத முதலியார் என்பவர் தம் "பி.நா. சிதம்பர முதலியார் அண்டு பிரதர்ஸ் வித்தியா ரத்நாகரம் பிரஸ்' வாயிலாக உரையோடு "தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலினை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பாடல்களுக்கு உரையினைத் திருச்சுழியல் ஆஸ்திக மத சித்தாந்த அவதானி எம். வீரவேற்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதில், ஊரைச் சுடுமோ என்னும் பாட்டு இடம்பெற்றுள்ளது.
இன்றைக்குச் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை நாட்டில் பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் பாடிய தனிப்பாடல்களுள் ஒன்றே இப்பாடல். ஆசிரியர் யார் என்று தெரியாத நிலையில், அதன் சுவையில் உள்ளம் பறிகொடுத்த சந்திரசேகர கவிராஜபண்டிதர்க்குத் தம்மைச் "சொக்க வைத்த வெண்பாவை' இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பது தெரிந்திருந்தால், எப்படி ஆனந்தக் கூத்தாடியிருப்பார் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

