தெய்வத்தின் குரலைப் பதிவு செய்தவர்
தமிழில் ஒரு தனி நபரின் உரைகள், பேச்சின் பதிவுகள் இவ்வளவு பெரிய தொகுப்புகளாக வெளிவந்து, இவ்வளவு தூரம் பெருவாரியான மக்களைச் சென்றடைந்து ஒரு கருவூலமாகத் திகழ்கிறது என்றால் வியப்புதான். ஏழு பெரும் தொகுதிக


தமிழில் ஒரு தனி நபரின் உரைகள், பேச்சின் பதிவுகள் இவ்வளவு பெரிய தொகுப்புகளாக வெளிவந்து, இவ்வளவு தூரம் பெருவாரியான மக்களைச் சென்றடைந்து ஒரு கருவூலமாகத் திகழ்கிறது என்றால் வியப்புதான். ஏழு பெரும் தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல். "தெய்வத்தின் குரல்' - காஞ்சி மகாபெரியவரின் உரைத் தொகுப்புதான் இவ்வளவு சிறப்புகளையும் பெற்றுத் திகழ்கிறது.
உரைகளைத் தந்த மகான் போற்றப்பட வேண்டியவர் என்றால், அந்த உரைகள் எளியோருக்கும் சென்று சேரும் வகையில் தமக்கே உரிய பாணியில் தொகுத்துத் தந்த மனிதர், தமிழுலகில் போற்றப்பட வேண்டிய மாபெரும் மனிதர்தான்.
1935-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி. அன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் பிறந்த குழந்தை என்பதால், கணபதியின் திருநாமம் அந்தக் குழந்தைக்குச் சூட்டப்பட்டது. கடலூரில் பிறந்து, சாஸ்திரக் கடலாகத் திகழ்ந்த அந்தக் குழந்தைதான் பின்னாளில் தெய்வத்தின் குரலைப் பதிவு செய்த ரா.கணபதி.
2012 பிப்ரவரி மாத மகா சிவராத்திரி நாளில் தமது 75வது வயதில் சிவநாமம் கூறியபடியே இறையடி சேர்ந்த ரா.கணபதி, ஆன்மிகத் தமிழுலகுக்கு அளித்துள்ள பொக்கிஷங்கள் பல. அவற்றுள் முத்தாய்ப்பாகத் திகழ்வது "தெய்வத்தின் குரல்' தொகுப்பு. காஞ்சி மகாபெரியவர் வழங்கிய அருளுரைகளின் இந்தத் தொகுப்பைப் படிக்காத பெரியவர்களே இருக்க முடியாது.
மகாபெரியவரின் எண்ணங்கள் அவரின் இயல்பான நடையில், சொல் வேகத்தில் பரவலாகச் சென்றடைந்தது என்றால் அதற்குக் காரணமாக அமைந்தவர் ரா.கணபதி.
துவாபர யுகத்தில், மகாபாரத நூலை வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகராகிய கணபதி தம் ஒற்றைத் தந்தத்தை முறித்து எழுதியதைப்போல, கலியுகமாகிய இந்த நவீன அறிவியல் யுகத்தில், மனித குலத்துக்கு, ஆன்மிகவாதிகளுக்கு, கடவுளைத் தேடி, மனதை இறைவன்பால் செலுத்தும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாகத் திகழும் கருத்துகளை வேதம் போல் காஞ்சி மகாபெரியவர் சொன்னதை, இந்த கணபதி அதைத் தம் எழுத்துகளால் பத்திரப்படுத்தி அளித்தவர். இத்தகைய எழுத்துப் பணிக்காக, தன் வாழ்நாளை திருமணம் செய்துகொள்ளாமல், அந்த கணபதியைப் போன்று பிரம்மசாரியாகவே கழித்தார்.
வேத நூல்களில், உபநிடதங்களில் கூறப்பட்ட கருத்துகளை, கதைகளை, அவை சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை மிக எளிய வடிவில் மகாபெரியவர் சொல்ல, அவற்றை ஆவணப்படுத்திய ரா.கணபதி, எழுத்திலும் எளிமையைக் கையாண்டார். படிக்கும் வாசகர்கள் மகாபெரியவரிடம் இருந்து அந்நியப்பட்டு விடாமல், அவர் நேரில் பேசுவது போலவும்; தான் அதைக் கேட்பது போலவும் உணரச்செய்ய வேண்டும் என்ற உத்தியைக் கையாண்டார். இதுவே அந்தத் தொகுப்பின் வெற்றியாக
அமைந்தது.
"மோட்ச தேவதை ரத்தினக் கம்பளம் விரித்து என்னை அழைக்கிறாள்' என்று சொல்லி, தாம் மறைவதற்கு ஒரு வாரம் முன்பு ஆன்மிகத்தை மூச்சாகக்கொண்ட அந்த பிரம்மச்சாரி, மருந்து மாத்திரை உட்கொள்வதை நிறுத்தி விட்டார் என்று கூறப்படுகிறது.
ஓர் எழுத்தாளனாக, தொகுப்பாளனாகத் தன்னை வெளிப்படுத்திய ரா.கணபதி சுமார் 10 ஆண்டுகள் "கல்கி' இதழில் பணியாற்றியுள்ளார். பின்னர் 30 ஆண்டுகள் சுதந்திர எழுத்தாளனாகப் பல்வேறு பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். அறுபதுகளில் கல்கியில் "ஜய ஜய சங்கர' என்ற தொடர் வெளிவந்து பெரும் வரவேற்புப் பெற்றது. அந்த ஆன்மிகத் தொடர் அவருடைய வாழ்நாளில் பல்வேறு சாதனைகளுக்கும் அச்சாணியாக அமைந்தது. நிரந்தர வேலை, நிரந்தர வருமானம் என்று பெரிதாக எதுவும் இல்லாத நாள்களில் காஞ்சி மகாபெரியவரின் ஆசியில் கடினமான பல கட்டங்களையும் அவர் கடந்து வந்தார். அவருடைய எழுத்துலக வாழ்நாளில் சிறிதும் பெரிதுமாக கிட்டத்தட்ட 35 நூல்கள் எழுதியிருப்பார். புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா, மீராபாய், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், சாரதா அன்னை, மகாத்மா காந்தி என்று பலரையும் சரித்திர நாயகர்களாகத் தம் நூல்களில் பதிவு செய்துள்ளார். "அறிவுக் கனலே அருட் புனலே' என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்காக அவர் தொகுத்தளித்த நூல், ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களால் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளுக்கு இணையாகப் போற்றப்படுகிறது.
திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார், பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆகியோரைப் பற்றி அவர் பதிவு செய்துள்ளவை பெரும் வரவேற்பு பெற்றவை. ரா.கணபதி இசையறிவு பெற்றவர். இசை நுணுக்கங்களை ரசித்து வெளிப்படுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது.
ஒருமுறை அறிஞர் அண்ணா இவரது எழுத்து நடையைப் பாராட்டியிருந்தார். "தன் வரலாறு' தொகுப்பு நூலில், அண்ணா தம் தாயாரின் மறைவு குறித்து எழுதிய அஞ்சலிக் கட்டுரையில், இது குறிப்பிடப்
பட்டுள்ளது.
அப்போது கல்கியில் ரா.கணபதி ஆதிசங்கரரின் வரலாற்றைத் தொடராக எழுதிவந்தார். அதில், சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மறைந்தபோது அவர் பட்ட துயரத்தை ரா.கணபதி வெளிப்படுத்தியிருந்த விதம் தம்மைப் பெரிதும் கவர்ந்ததாகவும், தம் தாயார் மறைந்தபோது அதைத் தாம் உணர்ந்ததாகவும் அண்ணா வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு, வேற்று முகாமில் இருக்கும் ஒருவரைக்கூட கவர்ந்திழுக்கும் தன்மையுடன் கணபதியின் எழுத்து திகழ்ந்தது.
"என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே' என்ற திருமூலரின் வாக்கிற்கிணங்க, தன்னை இறைவன் படைத்ததே தெய்வத்தின் குரலைப் பதிவு செய்வதற்கே என்று வாழ்ந்து மறைந்த பெருந்தகை ரா.கணபதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...