கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

முதுமையில் இளமையை நினைத்த புலவர்!

சங்ககாலத்தில் தொடித்தலைவிழுத்தண்டூன்றினார் என்றொரு பெயரில் முதுபெரும்புலவர் வாழ்ந்திருந்தார். அவர் ஒருநாள் வலுவான தடியை ஊன்றியவராய் இருமிக் கொண்டும் அதிகம் பேச முடியாமல் சிலசொற்களைக் கூறிக் கொண்டும் ம

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:10 am

சங்ககாலத்தில் தொடித்தலைவிழுத்தண்டூன்றினார் என்றொரு பெயரில் முதுபெரும்புலவர் வாழ்ந்திருந்தார். அவர் ஒருநாள் வலுவான தடியை ஊன்றியவராய் இருமிக் கொண்டும் அதிகம் பேச முடியாமல் சிலசொற்களைக் கூறிக் கொண்டும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்த சிலர், ""புலவரே உங்கள் உள்ளத்தில் எதைப்பற்றி இப்பொழுது எண்ணிக் கொண்டுள்ளீர்கள்?'' என்று கேட்டனராம்.

அதற்கு அப்புலவர், ""என் இளமைக்கால நிகழ்ச்சிகள்தான் அடிக்கடி நினைவிற்கு வருகின்றன. அவற்றில் ஒன்று எங்களூரில் மருத மரத்தையுடைய பெரிய நீர் நிலையில் அம்மரத்தின் தாழ்ந்துள்ள கிளையிலே ஏறி, அதனைச் சார்ந்துள்ள மடுவில் "துடும்' எனக் குதித்து மூழ்கி அடியிலுள்ள மணலை விளையாட்டுச் சிறுவருடன் எடுத்து வந்த கல்லாத என் இளமைக்காலம் இப்பொழுது எங்கே போயிற்று என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என்று பதிலளித்தாராம். பின்னர் அக்கருத்தையே பின்வரும் பாடலாகப் பாடினாராம்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று, திணிமணல்

செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ

தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,

தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,

மறைஎனல் அறியா மாயம்இல் ஆயமொடு

உயர்சினை மருதத்துறை உறத்தாழ்ந்து,

நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிக,

கரையவர் மருள, திரையகம் பிதிர,

நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,

குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

அளிதோ தானே யாண்டுஉண்டு கொல்லோ

தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,

இருமிடை மிடைந்த சிலசொல்

பொருமூ தாளரேம் ஆகிய எமக்கே (புறம் 243)

மேற்பாட்டு புறநானூற்றில் பொதுவியல் என்னும் திணையில் கையறுநிலை என்னும் துறைப் பொருளில் உள்ளது. புலவர், தன்முதுமைப் பருவத்திலே சென்ற தன் இளமைப் பருவத்தை எண்ணி, அது கழிந்து போனதற்கு வருந்தினார் என்ற கருத்தை மிக அழகாக உளவியல் சிந்தனையுடன் காட்டியுள்ளார். இப்பாடற்கருத்து முதுமைப் பருவத்தினர் பலருக்கும் பொருத்தப்பாடுடையதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.