"ஜனரஞ்சக எழுத்தாளர்' ஜாவர் சீதாராமன்!

புராண, சரித்திரக் கதைகளிலிருந்து தமிழ் சினிமா சமூக, குடும்பக் கதைகளுக்கு மாறிய காலகட்டத்தில் திரையுலகில் நுழைந்து, கதை, நடிப்பு என இரு தளங்களிலும் அறிவாற்றலுடன் செயல்பட்டுப் புகழ் பெற்றவர்களுள் ஜாவர்
"ஜனரஞ்சக எழுத்தாளர்' ஜாவர் சீதாராமன்!

புராண, சரித்திரக் கதைகளிலிருந்து தமிழ் சினிமா சமூக, குடும்பக் கதைகளுக்கு மாறிய காலகட்டத்தில் திரையுலகில் நுழைந்து, கதை, நடிப்பு என இரு தளங்களிலும் அறிவாற்றலுடன் செயல்பட்டுப் புகழ் பெற்றவர்களுள் ஜாவர் சீதாராமனும் ஒருவர்.

 சொந்த ஊர் திருச்சி; இயற்பெயர் சீதாராமன். தந்தை நடேச ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். தந்தையாரின் விருப்பப்படி சீதாராமன் எம்.ஏ., பி.எல்., படித்தார். ஆனால், வழக்குரைஞர் ஆகாமல் கலைஞனாகத் தடம்பதிக்க திரையுலகில் அடியெடுத்து வைத்தார். "மிஸ் மாலினி' என்னும் படத்தில் ஒரு வேடமேற்று முதன் முறையாக அறி

 முகமானார்.

 விக்டர் ஹீயூகோவின் "லா மிஸரபில்லா' என்னும் பிரெஞ்சு நாவலை, "ஏழைபடும் பாடு' என்னும் தலைப்பில் முதன் முதலாக கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழிபெயர்த்தார். அந்நாவலைப் படமாக்கத் திட்டமிட்டபோது, "ஒளிப்பதிவு தந்தை' என்றும், "உயர்ந்த இயக்குநர்' என்றும் அழைக்கப்பட்ட கே.ராம்நாத், நாவலில் வருகின்ற முக்கிய பாத்திரமான "ஜாவர்' என்கிற முரட்டுப் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சீதாராமனையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். படம் பெரும் வெற்றியடைந்தது. அன்றிலிருந்து சீதாராமன், "ஜாவர்' சீதாராமன் என்று பிரபலமானார்.

 இயக்குநர் எஸ்.பாலசந்தர் ஜூபிடர் பிக்சர்ஸýக்காக "கைதி' என்னும் படத்தின் கதை, இயக்கம், இசை பொறுப்புகளை ஏற்றிருந்தார். கதை விவாதத்துக்கு எஸ்.பாலசந்தர் தன்னுடன் ஜாவர் சீதாராமனையும் அழைத்துச் சென்றார். ஜூபிடர் முதலாளிகளை ஜாவர் சீதாராமனின் கதை ஆச்சரியப்பட வைத்தது. "கைதி' படத்தின் திரைக்கதை அமைப்பில் ஜாவரின் பங்களிப்பு கணிசமாக இருந்தது; படமும் வெற்றிபெற்றது.

 நடிகர்கள் சந்திரபாபுவும், ஸ்ரீராமும் ஜாவரின் நெருங்கிய நண்பர்கள். ஓய்வு நேரங்களில் நிறைய ஆங்கில நாவல்களைப் படிக்கும் பழக்கம் ஜாவர் சீதாராமனுக்கு உண்டு.

 ஏ.வி.எம். தயாரித்த "அந்த நாள்' படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் இன்ஸ்பெக்டர் வேடத்தையும் ஜாவர் சீதாராமன் ஏற்றார். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன்னால் ஜாவர் சீதாராமன் கதையை விவாதித்து விவரித்தபோது செட்டியார் பிரமித்துப்போனார். ஜாவரின் படைப்பாற்றலில் செட்டியாருக்கு நம்பிக்கை வளர்ந்ததால் கதையைப் பொறுத்தவரை ஜாவரின் கருத்துதான் இறுதியானது என்பது ஏ.வி.எம்.மின் முடிவானது.

 ஏ.வி.எம். தயாரித்த "களத்தூர் கண்ணம்மா', "குழந்தையும் தெய்வமும், "ராமு' முதலிய படங்களுக்கு ஜாவர் சீதாராமன்தான் திரைக்கதை-வசனம் எழுதினார். அந்தப் படங்கள் மாபெரும் வெற்றியடைந்து, தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படமாக்கப்பட்டன.

 ஏ.வி.எம். தவிர வெளி நிறுவனங்களும் ஜாவரை அணுக, "ஒரே வழி' என்கிற படத்துக்கு ஜாவர் கதை-வசனம் எழுதி, படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பி.எஸ்.வீரப்பா தயாரித்த "ஆலயமணி', "ஆண்டவன் கட்டளை', "ஆனந்த ஜோதி' ஆகிய படங்களுக்கும் ஜாவர்தான் திரைக்கதை வசனம் எழுதினார்.

 அக்காலத்திய பிரம்மாண்ட இயக்குநர் எம்.வி.ராமன், தன்னுடைய இந்திப் படங்களுக்கு ஜாவரையே கதை-திரைக்கதை எழுதச் சொன்னார். ராஜேந்திரகிஷன் என்பவர் இந்திப்பட உலகின் மிகப்பெரிய வசனகர்த்தா. அவருக்கு ஜாவரின் எழுத்தின் மீது அலாதிப் பிரியம். ஜாவரை "குருஜி' என்றே அழைப்பார். தன் படங்களின் கதைகளை ஜாவரிடம் விவாதித்து ஜாவரையே ஆங்கிலத்தில் வசனமெழுதச் சொல்லி அதை இந்தியில் மொழிபெயர்த்துக் கொள்வார். ஜாவரின் புகழ் இந்திப் படவுலகிலும் வேகமாகப் பரவியது.

 வீனஸ் பிக்சர்ஸýக்காக "பிராஸ் பாட்டில்' என்கிற ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, "பட்டணத்தில் பூதம்' என்ற கற்பனைக் கதையை ஜாவர் உருவாக்கினார். படம் வசூலில் வரலாறு படைத்தது. வீனஸýக்காக ஜாவர் இந்தியில் பங்களித்தப் படம் "சூரஜ்'.

 சினிமாவில் வெற்றிபெற்ற ஜாவர் சீதாராமன், பிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதினார். குமுதத்தில் அவர் எழுதிய "மின்னல் மழை மோகினி', "உடல் பொருள் ஆனந்தி', "பணம் பெண் பாசம்', "நானே நான்' ஆகிய தொடர்கதைகள் வெகுஜன ரசனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ஜாவர் சீதாராமன் திரைப்படம் எடுக்க விரும்பினார்; அதுவும் இந்தியில் எடுக்கத் திட்டமிட்டார். அப்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "பணமா பாசமா' படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் இந்தி உரிமையை ஜாவர் பெற்றார். "பணமா பாசமா' படத்தை "பைசா யா பியார்' என்னும் தலைப்பில் இந்தியில் தயாரித்து ஜாவரே படத்தையும் இயக்கினார்.

 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜாவர் சீதாராமன், அந்தப் படம் (பைசா யா பியார்) தணிக்கை முடிந்த தினத்தன்று, 1971-ஆம் ஆண்டு

 காலமானார்.

 தமிழ்த் திரையுலக எழுத்தாளர் வரலாற்றில் மேலை நாட்டு ஆங்கிலக் கதைகளை தமிழரின் வாழ்வியல் பண்புக்கேற்ப மாற்றியமைத்து, வெகுஜன ரசனையை நிறைவு செய்வதில் வெற்றிபெற்ற ஜாம்பவான் ஜாவர் சீதாராமன் என்பது மறுக்க முடியாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com