நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

"கொன்றை வேந்தன்' வெண்பா!

"கொன்றை வேந்தன்' தொடர்களை ஈற்றடியாக வைத்து "கொன்றை வேந்தன் வெண்பா' என்ற நூல் ஒன்று

News image
Updated On :2 பிப்ரவரி 2013, 8:39 pm

செ. இராசு

"கொன்றை வேந்தன்' தொடர்களை ஈற்றடியாக வைத்து "கொன்றை வேந்தன் வெண்பா' என்ற நூல் ஒன்று பாடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், உலகபுரம் என்ற ஊரில் வாழ்ந்தவர் சிவமலை. அவருடைய தந்தையார் முத்தித் திருமலை. முத்தித் திருமலை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலையின் தங்கை பார்வதியின் கணவர். செல்வம் மிக்க குடும்பம். சிவமலையைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வெள்ளோடு காசிலிங்கப் புலவர் இயற்றிய நூலே "கொன்றை வேந்தன் வெண்பா'.

இந்நூலின் ஏட்டுச் சுவடியைக் கண்டறிந்து பெற்றவர் புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர். ம.ப.பெரியசாமித் தூரன் குழுவினர் நடத்திய "காலச்சக்கரம்' இதழில் தெய்வசிகாமணிக் கவுண்டர் இந்நூலைப் பற்றி எழுதி, சில பாடல்களையும் அச்சிட்டுள்ளார். தெய்வசிகாமணிக் கவுண்டரின் ஏட்டுச்சுவடி இப்போது கோவை, பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் பாதுகாப்பில் உள்ளது. வேறு சுவடியும் கிடைத்துள்ளது. சுவடிகளில் 90 பாடல்கள் உள்ளன. அவற்றில் ஓரிரண்டைக்  காண்போம்.

கீழோர் ஆயினும் தாழ உரை

பாண்டவர்கள் சார்பில் துரியோதனனிடம் கண்ணன் தூது சென்றான். தூதனாகச் சென்ற கண்ணன் நாடு கேட்டு மறுக்கப்பட்ட நிலையில், பாண்டவர்க்கு ஐந்து ஊர்களாவது கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். இந்நிகழ்ச்சி இக்கொன்றை வேந்தன் வெண்பாவில் கூறப்படுகிறது.

""நீண்டசட கோபன் நிருபன் சுயோதனன்பால்

பாண்டவர்க்குத் தூதுரைத்த பண்புபார் - ஆண்டவச்சீர்

தேகா வெள்ளோடைச் சிவமலைபூ பாகீழோர்

ஆகிலும் தாழ உரை''

ஒத்த இடத்தில் நித்திரை கொள்

ஒளவையார் வாழ்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை இக்கொன்றை வேந்தன் தொடருக்கு எடுத்துக் காட்டுகிறார்.

ஒருமுறை ஒளவையார் தன் பயணத்தின்போது ஒரு பழைய சத்திரத்தில் தங்கினார். பாழடைந்த அந்தச் சத்திரத்தில் இருந்த பேய் ஒன்று ஒளவையாரைப் பயமுறுத்தியது. ஆனால், ஒளவையார் அப்பேயின் அச்சுறுத்தலுக்கு அஞ்சவில்லை.

""ஏ பேயே! என்னைப் பயப்படுத்தி விரட்ட வேண்டாம். ஒரு வெண்பாவை இரண்டு முறை படித்தால் மனனம் செய்ய இயலாதவனையும், கண்கள் ஓலைச் சுவடியைப் பார்த்துக் கொண்டிருக்க, கையால் எழுத இயலாதவனையும் பெற்றவள் ஒரு பாவிப்பெண். அவள் இவர்களைப் பிறர் நகைக்கப் பெற்றாள். அவர்களை விரட்டு போ'' என்று துணிச்சலாகக் கூறினார் என்பர்.

""வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை

கண்பார்க்கக் கையால் எழுதானை - பெண்பாவி

பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளென்று

எற்றோமற் றெற்றோமற் றெற்று''

என்பது ஒளவையார் பாடிய வெண்பா.

""எற்றோமற் றென்றே இயம்பும் பழமொழிபார்

குற்றமகல் சாத்தந்தை கோத்திரனே - வெற்றி

சிவத்தார் வெள்ளோடைச் சிவமலைபூ பாவொத்

தவிடத்தில் நித்திரை கொள்''

என்பது கொன்றை வேந்தன் வெண்பா.

19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த வெள்ளோட்டுப் புலவர் காசிலிங்கம் பாரதம், திருக்குறள், இராமாயணம், ஒளவையார் பாடல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருந்தார் என்பதை இதிலுள்ள வெண்பாக்கள் மூலம் அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.