சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 4

அண்டம் - உலகம், முட்டை, விதை முதலாம் பொருள்தரும் பலபொருள் ஒரு சொல். திரு அண்டப்பகுதி என்பது திருவாசகத்து வரும் மூன்றாம் அகவல். மணிவாசகர் பாடிய முதல் நான்கு அகவல்களும் வரிப்பாடல்களும் சங்கத்தார் காலத்தையும் அடுத்துவந்த இளங்கோவடிகள் காலத்தையும் ஒட்டியது என்பதை விளக்கும் சான்றுகள்.

News image
Updated On :5 ஏப்ரல் 2014, 7:46 pm

அண்டம் - உலகம், முட்டை, விதை முதலாம் பொருள்தரும் பலபொருள் ஒரு சொல். திரு அண்டப்பகுதி என்பது திருவாசகத்து வரும் மூன்றாம் அகவல். மணிவாசகர் பாடிய முதல் நான்கு அகவல்களும் வரிப்பாடல்களும் சங்கத்தார் காலத்தையும் அடுத்துவந்த இளங்கோவடிகள் காலத்தையும் ஒட்டியது என்பதை விளக்கும் சான்றுகள்.

""அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி''

என்னும் வியப்புடன் தொடங்குகிறார்.

கூரை வீடு; வீட்டுக் கூரையில் ஓர் ஊசி அளவு துளை. அத்துளையுள் கதிரொளி புகுகின்றது. சிற்றொளி, தொடங்கு நிலையில்! வர வரப் பெரிதாம் "உருபா' அளவு ஒளிவட்டம் ஆகின்றது. அவ்வொளியை நோக்கின் மிதக்கும் நுண்துகள் தூசிகள் எத்தனை? எண்ண முடியுமா? எண்ணிக்கையின் கடைசியாக முற்காலத்தில் இருந்தது, கோடி! கோடி கோடி! கோடானு கோடி! ஆம் வள்ளுவப்படி, "அடுக்கிய கோடி'!

ஊசித்துளையின் ஒளிவழிக் கண்ட தூசிகளை எண்ண முடியாமல் ""நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன'' என்கிறார். எவை? விண்ணில் உலாவும் அண்டங்களாம் உண்டை ஒளிகள்!

நூறடிச் சாலை, நால்வழி, அறுவழிச் சாலைகள். ஆறடி வண்டி மோதி முட்டி வீழ்ந்தும் கவிழ்ந்தும் உருண்டும் புரண்டும் கிடக்கக் காண்கிறோம். ஆனால், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த அண்ட வெளி உண்டைகள் ஒன்றனோடு ஒன்று மோதிக்கொள்ளவில்லை என்பது வியப்பு இல்லையா? இதன் காரணம் என்ன? ஒவ்வொன்றும் சுழல்கின்றன; சுழலும் எல்லை கடவாமல் சுழல்கின்றன. சுழலலை விடுத்து நெருங்காமல் ஒவ்வொன்றும் நிறுத்திக்கொண்டு சுழலும் விடுதலறியா ஈர்ப்பாற்றல் கொண்டுள்ளன. அதனால், ஒன்றை ஒன்று நெருங்காமல் சுழல்கின்றன!

""ஒன்றனுக்கு ஒன்று நின்று'' என்று காரணம் காட்டுகிறார் மணிமொழியார்.

""ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன;

இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய''

துன்-ஊசி; துன்னூசி என்பதும் அது. புரைய-போல! அறிவியலைப் பாடுகிறாரா? வாலறிவனைப் பாடுகிறாரா? இரண்டையும் பிரிவறியா ஒருமையில் கண்டு பாடினார் என்பதே சரி.

இறைமைக்கு மட்டும் நாம் கொண்டோம். ஈர்ப்பாற்றல் அறிவியலுக்குக் கொள்ளாமை, ஐசக்கு நியூட்டனார்க்குப் பெயரும் புகழும் தந்து, உலகப் புகழுக்கு இடமாக்கியது. உலகம் எப்படி அமைந்தது? தொல்காப்பியர் கூறுகிறார்:

""நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்'' என்கிறார்.

அரும்பு, முகை, மொக்கு, மலர், அலர் எனப் "பூ' விரியவில்லையா? பூ விரிவது போல் விரிந்தது, பூதம்! ""வெளி, வளி, ஒளி, நீர், நிலம்'' ஒன்றிலிருந்து ஒன்றாக விரிந்தன.

வெளியின் தன்மை ஒன்று - ஒலி.

வளியின் தன்னை இரண்டு - ஒலி, ஊறு.

ஒளியின் தன்மை மூன்று - ஒலி, ஊறு, ஒளி.

நீரின் தன்மை நான்கு - ஒலி, ஊறு, ஒளி, சுவை.

மண்ணின் தன்மை ஐந்து - ஒலி, ஊறு, ஒளி, சுவை, மணம்.திருவள்ளுவர்,

""சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென் றைந்தின்

வகை அறிவான்கட்டே உலகு''

என்கிறார். இவற்றின் வகை அறிய வாய்த்த பொறிகள் ஐந்து; புலன்கள் ஐந்து. இவற்றை,

""மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு

ஐம்பூதத் தியற்கை போல''

என்கிறது புறப்பாடல்(2). இனி மணிவாசகர் கூறுமாறு காண்போம்.

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.