சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: உலகம் - 6

News image
Updated On :19 ஏப்ரல் 2014, 8:02 pm

உலகத்து இயற்கையாம் ஊழ் பற்றிக் கண்டோம். மேலும் காண்போம். "அயரா முயற்சியாளர் ஊழை வெல்லலாம்' என்கிறாரே பொய்யா மொழியார். ஊழை வெல்ல முடியும் என்பது சரியா?ஊழை வென்றுகொண்டே இருக்கும் நாம் "ஊழை வெல்ல முடியுமா?' என்பதே, ஊழைப் புரியாமல் வினாவும் வினாவாம். ஊழை வெல்லலாம்.

""ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்''

என்பது வாய்மையுரை. கடும் வெப்பம்; கால் கொதிக்கிறது; வெயில் தாக்கம் வருமோ எனத் தலை கொதிக்கிறது. காலில் செருப்பை மாட்டி ஊழை வெல்கிறோம். தலைமேல் குடை பிடித்து ஊழை வெல்கிறோம். கீழே - பள்ளத்தே ஓடும் நீரை ஓடாமல் அணைகட்டி, நீரைத் தேக்குகிறோமே! நீரை மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றுகிறோமே! இவை ஊழ் வெல்வ தில்லையா? புயல் - சூறை அறிந்து மீன் பிடிக்கப் போகாமல், படகைக் கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவது ஊழை வெல்வ தில்லையா?

இப்படி யெல்லாம் வென்றுகொண்டே, வெல்ல முடியுமா என்பது, ஊழை வென்று கொண்டிருப்பதை அறியாமையால் தானே! ஊழும் வெல்லும் என்கிறாரே வள்ளுவர், இது முரண் இல்லையா? வள்ளுவரில் முரணில்லை. நம் அறியாமையே முரணாக எண்ணச் செய்கிறது.

கையில் பிடித்த குடை காற்றில் பறந்தால்! அணையில் தேக்கிய நீர், அணை உடைப் பெடுத்தால்! மேல் தொட்டியில் ஏற்றிய நீர்க் குழாயில் சிறு பொத்தல் விழுந்தால்! ஊழ் கொண்ட வெற்றி அல்லவா! அதனால்தானே, ""ஊழில் பெருவலி யாவுள'' என வினவி, ""மற்றொன்று, சூழினும் தான்முந் துறும்'' என்றார் அவர். ஊழை நாம் வெல்லலாம்! ஊழும் நம்மை வெல்லும்! என்னதான் வென்றாலும், இறுதி வெற்றி உலகத்து இயற்கையாம் ஊழுக்கே உண்டு!

ஊழ், இயங்கியல் பொதுமையது; மழை சிலரை விட்டுப் பெய்யுமா? காற்று சிலரை விலக்கி வீசுமா? வெயில் சிலரை ஒதுக்கி வெதுப்புமா? வெள்ளத்திற்கு அவரிவர் என்றோ, ஊர் உறவு என்றோ, விளை நிலம், வெறு நிலம் என்றோ உண்டா? எல்லாமும் அள்ளிக் கொண்டுதானே போகும்? விண்ணில் பறந்த வானூர்தி "ஆல்ப்சு' மலையில் மோதி 600 பேருக்கு மேல் ஒன்றாகக் கொன்றதே! அவர்கள் அனைவர்க்கும் ஒரே பிறப்பியமா(சாதகமோ)?

1963-இல் சிலி நாட்டில் 90 அடிக்கு மேல் ஆழிப் பேரலை எழுந்து, 7000 சதுர கல் பரப்பை ஒருங்கே அழித்ததே! ஒரே விதியா? பொதுமை இயங்கியலாம் ஊழைத் "தலைவிதி', "வினைப்பயன்', "எழுதி வைத்தது' என்பது தகுமோ? அவரவர் ஆக்கச் செயல் பயனும், அழிசெயல் பயனும் ஆகிய தத்தம் வினை, அடுத்த நாள், அடுத்த பிறவி என ஆகாமையால்தானே,

""பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்''

என்றது வாய்மை வள்ளுவம். ஊழில் குழப்பமில்லை. ஊழ்வினையைத் தந்து பலர் குழப்பினர். வேறுபாடு அறியாமல் குழம்புகிறோம் நாம்!

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.